மறைந்த முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் சிறந்த மனிதநேயம் கொண்ட இறையியலாளர் என்று திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் கொன்ராட் கிராஜூவ்ஸ்கி புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களைப் பற்றிய தனது நினைவலைகளை வத்திக்கான் செய்திக்கு வழங்கியபோது இவ்வாறு கூறியுள்ள கர்தினால் கொன்ராட் கிராஜூவ்ஸ்கி அவர்கள், திருத்தந்தைக்குரிய தனது கடமைகளை செவ்வனே நிறைவேற்றியவர் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் என்றும் அவரது தூய வாழ்வுக்குச் சான்று பகிர்ந்துள்ளார்.
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் திருத்தந்தையாகத் தேர்வுசெய்யப்பட்டபோது நிகழ்ந்த திருச்சடங்கில், தான் அவருக்கு முன்பாக சிலுவையைச் சுமந்து சென்றதாகவும், அப்போது புனித பேதுரு பெருங்கோவில் வளாகம் முழுவதும் மக்கள் அலைகடலெனத் திரண்டிருந்ததைக் கண்டு மிகவும் வியப்பில் ஆழ்ந்ததாகவும் கொன்ராட் கிராஜூவ்ஸ்கி கூறியுள்ளார்.
தான் பதினேழு வயது இளைஞனாக இருந்தபோது, கொன்ராட் என்னும் தனது ஜெர்மன் (புனிதர்) பெயரை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் அடிக்கடி நினைவு கூர்ந்ததாகவும், தனது அன்னை இறந்தபோது, அவர் எப்படி இறந்தார், அவருக்கு வயது என்ன என்று அவர் குறித்து அக்கறையுடன் விசாரித்ததாகவும் பெருமிதத்துடன் கூறியுள்ள கர்தினால் கொன்ராட் கிராஜூவ்ஸ்கி, அவர் மிகவும் எளிமையானவர், நட்புகொள்பவர், இளகிய மனது கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளார்.
பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் ஒரு சிறந்த இறையியலாளர், பேராசிரியர், இரண்டாம் ஜான் பால் அவர்களிடமிருந்து வேறுபட்ட பாணியில் பணியாற்றியவர் என்று கர்தினால் கொன்ராட் கிராஜூவ்ஸ்கி எடுத்துக்காட்டியுள்ளார். அவர் மிகவும் அன்பானவர், அனைவருடனும் திறந்த மனதுடன் பழகும் பண்பாளர், அனைத்துத் திருச்சடங்குகளின்போதும் எங்களிடம் மிகவும் அக்கறையுடன் நடந்துகொண்டவர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த மாபெரும் திருத்தந்தைக்காக நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன், ஏனென்றால், தூய்மையும், தெளிவும் கொண்டு அவர்களின வாழ்க்கையின் புனிதத்துடன் நம் அனைவரையும் வழிநடத்திச் செல்லும் இத்தகைய திருத்தந்தையர்களைப் பெற்றுள்ள நாம் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கூறியுள்ள கர்தினால் கிராஜூவ்ஸ்கி, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் நிறையமைதி அடையவும், திரு அவையின் அனைத்து நலன்களுக்காகவும் தான் இறைவேண்டல் செய்வதாகவும் கூறியுள்ளார்.