Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் நாம் அனைவரும் அமைதிக்கான குரலாக செயல்படவேண்டும்
Wednesday, 11 Jan 2023 07:25 am
Namvazhvu

Namvazhvu

திருப்பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் தூதர்களைப் புத்தாண்டு வாழ்த்துக்களை வழங்கும் நோக்கத்தில் திருப்பீடத்தில் ஜனவரி 9, திங்கள் காலையில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகில் நாம் அனைவரும் அமைதிக்கான குரலாக செயல்படவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்தார்.

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில், நாடுகளின் திருப்பீடத்திற்கான தூதர்களை சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி, உரை வழங்குவதைத் திருத்தந்தையர் வழக்கமாகக் கொண்டிருக்க, இவ்வாண்டிற்கான உரையில், புனித திருத்தந்தை 23ஆம் ஜான் அவர்களின் பேசம் இன் டெரிஸ் வெளியிடப்பட்டதன் 60ஆம் ஆண்டு நிறைவுறுவதை சுட்டிக்காட்டி, இவ்வுலகில் அமைதி குறித்து தன் கருத்துக்களை திருத்தந்தை பிரான்சிஸ் பகிர்ந்துகொண்டார்.

முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் மறைவுக்கு தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுச் செய்தி அனுப்பியதுடன், உடல் அடக்கத்தின்போது திருப்பீடத்துடன் தங்கள் நெருக்கத்தை வெளியிட்ட அனைத்து நாடுகளுக்கும் தன் நன்றியையும் தன் உரையின் துவக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டார்.

மூன்றாம் உலகப்போர் பல்வேறு நாடுகளில் துண்டு துண்டாக இடம்பெறும் இன்றைய காலக்கட்டத்தில், உக்ரைன், சிரியா, எருசலேம், காங்கோ குடியரசு, தென் சூடான், தென் கவ்காசுஸ், ஏமன், மத்திய ஆப்பிரிக்க நாடுகள், மியான்மார், கொரிய தீபகற்பம் ஆகியவைகளில் தொடர்ந்து கொண்டிருக்கும் பதட்ட நிலைகள் குறித்தும், அவைகளை ஆற்ற அனைத்துலக சமுதாயம் ஆற்றவேண்டிய கடமையையும் திருத்தந்தை நினைவூட்டினார்.

புனித திருத்தந்தை 23ஆம் ஜான் தன் சுற்றுமடலில், அமைதிக்கான முக்கிய தூண்களாக உண்மை, நீதி, ஒருமைப்பாட்டுணர்வு, மற்றும் விடுதலை என்ற நான்கை வலியுறுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவை நான்கிற்கும் அமைதிக்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து விளக்கமளித்தார்.

உண்மையில் அமைதி என்பது, ஒரு மனிதனின் வாழ்வதற்கான அனைத்து உரிமைகளையும் மதிப்பதாகும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றும் பல நாடுகளில் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது, கருக்கலைத்தல் என்பது ஓர் உரிமையாக நோக்கப்படுவது, மரண தண்டனைகள் தொடர்வது, மத சுதந்திரம் மதிக்கப்படாமை ஆகியவைக் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.

நீதியின் வழி அமைதியைக் கட்டியெழுப்புதல் என்பது, ஏழ்மையை அகற்றுதல், கால நிலை மாற்றத்திற்கு தீங்கு விளைவிக்காமை, அணுஆயுதக்களைவு, மனிதாபிமான உதவிகளை வழங்குதல் போன்றவைகளை உள்ளடக்கியது என்பதையும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

ஒருமைப்பாட்டில் அமைதி என்ற தலைப்பில், புலம்பெயர்ந்தோரை வரவேற்றல், நம் பொது இல்லமாகிய உலகைப் பாதுகாத்தல் என்பது குறித்தும் விரிவாக விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

விடுதலையின் வழி அமைதியைக் கட்டியெழுப்புவதில் நம் பங்களிப்பை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, லெபனானில் இடம்பெறவிருக்கும் அரசுத்தலைவர் தேர்தல் குறித்தும் தன் எண்ணங்கள் செல்வதாக எடுத்துரைத்தார்.