Namvazhvu
திருத்தந்தை கல்வி உடன்பிறந்த உறவை மீட்டெடுப்பதற்கான பாதை 
Wednesday, 11 Jan 2023 07:37 am
Namvazhvu

Namvazhvu

கல்வியாளர்கள் தங்கள் கற்பித்தலில் உடன்பிறந்த உறவு என்பதை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவதாகவும், அன்பின் செயலான கல்வி, உடன்பிறந்த உறவை மீட்டெடுப்பதற்கான பாதை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.

கல்வியாளர்களுக்காக செபிப்போம் என்ற தலைப்பில், சனவரி 10, செவ்வாய்க் கிழமை சனவரி மாத செபக்கருத்து குறித்த காணொளிச் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறினார்.

அறிவு, மனம், செயல்

கல்வியாளர்கள் தங்களது அறிவை மட்டுமல்ல அவர்களது நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையை வழங்கும் சாட்சிகள் என்றும், அறிவு, மனம், செயல் போன்றவற்றை வெளிப்படுத்தும் (மூளை) தலை, இதயம், கை போன்றவற்றை எப்படிக் கையாண்டு ஒருவர் மற்றவரை மகிழ்வுடன் தொடர்பு கொள்வது என்பதை  நன்கு அறிந்தவர்கள் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.  

இத்தகைய சான்றுள்ள வாழ்வை விதைக்கும் கல்வியாளர்கள், மிகவும் கவனத்துடன் கவனிக்கப்படுபவர்களாக, மற்றும் சமூகத்தை உருவாக்குபவர்களாக மாறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, நம்பிக்கையுள்ள சான்றுகளாக, மோதலுக்குப் பதிலாக உடன்பிறந்த உறவை கற்பிப்பவர்களாக, குறிப்பாக இளையோர் மற்றும் சமுதாயத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வியின் வழியாக உதவுபவர்களாக இருக்கும்வேளையில் அவர்களுக்காகத் தொடர்ந்து செபிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்

காணொளிக் காட்சி

பள்ளி வகுப்பு கரும்பலகையில் உடன்பிறந்த உறவு என்று எழுதப்பட்ட தலைப்பை முதன்மைப்படுத்தித் தொடங்கும் காணொளிக் காட்சியானது, கால்பந்து மைதானத்தில் வகுப்பு மாணவர்களால் ஒதுக்கப்பட்ட மாணவனுக்குஆசிரியர் தொடர்ந்து உற்சாகமூட்டி விளையாடக் கற்றுக்கொடுப்பது போன்றும், அதன்பின் பிற மாணவர்களால் அம்மாணவன் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கால்பந்தில் அவன் பெற்ற முதல் வெற்றியை ஆசிரியருக்கு அர்ப்பணிப்பது போன்றும் இக்காணொளிக் காட்சி நிறைவுசெய்யப்பட்டுள்ளது.

வார்த்தைகளால் அல்ல தன் வாழ்வால் அம்மாணவனுக்கும் பிறருக்கும் உடன்பிறந்த உறவை வலியுறுத்திய ஆசிரியரின் செயலுக்கு தன் வெற்றியை அர்ப்பணிக்கும் மாணவன்  நாளைய சமுதாயத்தை அடையாளப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

திருத்தந்தையின் காணொளிக் காட்சி

திருத்தந்தையின் மாதாந்திர செப நோக்கங்களைப் பரப்பும் நோக்கத்துடன்  2016 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட ஓர் அதிகாரப்பூர்வ உலகளாவிய இம்முயற்சி, வத்திக்கானின் அனைத்து சமூக வலைதொடர்பு அமைப்புக்களில் ஒலிபரப்பட்டும், 23க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும், 114 நாடுகளில் ஏறக்குறைய, ஒருகோடியே எண்பத்து நான்காயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.