ஜனவரி 8ஆம் தேதி ஞாயிறு அதிகாலையில் செனகல் நாட்டில் இரு பேருந்துகள் மோதியதில் ஏறக்குறைய 38 பேர் உயிரிழந்துள்ளது மற்றும் பலர் காயமடைந்துள்ளது குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியை திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளார்.
செனகலின் காஃப்ரின் நகரில் இடம்பெற்ற துயர் நிறைந்த சாலை விபத்து குறித்து அறியவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிரிழந்தோரின் குடும்பத்துடனும், நாட்டு மக்கள் அனைவருடனும் இணைந்து அவர்களின் துயரில் பங்கெடுப்பதாகவும், காயமடைந்தோருடன் தன் நெருக்கத்தைத் தெரிவிப்பதாகவும் செனகல் அரசுத்தலைவர் மேக்கி சால் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள திருப்பீடச் செய்தி உரைக்கிறது.
ஞாயிறு அதிகாலை உள்ளூர் நேரம் 3.15 மணிக்கு மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலின் காஃப்ரின் நகரில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 38 பேர் உயிரிழந்தைத் தொடர்ந்து, அந்நாட்டில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.