Namvazhvu
ஞாயிறு தோழன் ஆண்டின் பொதுக்காலம் 2ஆம் ஞாயிறு எசா 49:3,5-6, 1கொரி 1:1-3, யோவா 1:29-34
Wednesday, 11 Jan 2023 12:19 pm
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை

இன்று நாம் ஆண்டின் பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு வழிபாட்டினையும், அதனோடு இணைந்து தைப் பொங்கல் திருவிழா என்கின்ற நன்றியின் பெரு விழாவையும் வெகு சிறப்பாக கொண்டாடி, செபிக்க இத்திருப்பலியின் வழியாக அழைக்கப்படுகிறோம். “நான் கண்டேன், இவரே இறைமகன் எனச் சான்றும் பகர்கின்றேன்என்று, திருமுழுக்கு யோவான் இறைமகன் இயேசு கிறிஸ்துவிற்கு சான்று பகர்ந்ததுபோல, நாமும் இறைவன் நமக்கு தந்த வாழ்விற்கும், அருட்கொடைகளுக்கும் சாட்சியம் பகிர்வோம். அந்த சாட்சிய வாழ்வை நன்றி பெருக்கோடு நினைவில் கொண்டு விவசாயம், விவசாயிகள், ஆடு மாடுகள், பயிர் பச்சைகள் செழிப்படைந்து, வளமோடும், நலமோடும் வாழ இறைவன் நமக்கு செய்த எல்லா நன்மைகளுக்கும் நன்றி கூறி தொடர்ந்து, சேற்றில் கால் வைக்கின்ற விவசாயிகள் தங்களின் சோக ராகங்களை மறைந்து புது விடியலும், புது வாழ்வும் அவர்கள் வாழ்வில் மலரவும் நாம் அனைவரும் இணைந்து இந்த மகிழ்ச்சியின் திருநாளாம் பொங்கல் திருநாள் திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம். பரமனின் இறையருளை நிறைவாக பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் பாபிலோனில் அடிமையாக இருக்கும் இஸ்ரயேல் மக்களை உரிமை வாழ்வுக்கு கொண்டுவரும் மீட்பு செய்தியை இறைவாக்கினர் எசாயா வழியாக உரைக்கின்றார் நம் ஆண்டவர். கருப்பையிலிருந்து அவரின் விடுதலை செய்தியை அறிவிக்க நம்மை தேர்ந்த இறைவன், நமக்கு தரும் மீட்பின் செய்தியினை இன்றைய முதல் வாசகத்தின் வழியாகக் கேட்டு தியானிப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசு கிறிஸ்து கொண்டுவந்த அன்பும், அமைதி, மீட்பும் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கோ, இனங்களுக்கோ அல்லாமல் எந்த ஒரு பாகுபாடின்றி அனைவருக்கும் உரித்தாகுக. நம் அனைவரின் ஆண்டவராக இயேசு கிறிஸ்து விளங்குகின்றார் என்று புனித பவுல் நமக்கு விடுக்கும் பொதுவுடமை இறையியல் செய்தியை இந்த இரண்டாம் வாசகத்தின் வழியாகக் கேட்டு தியானிப்போம்.

மன்றாட்டுகள்

1. நல்ல ஆயனே எம் இறைவா!நீயே என் ஊழியன்என்று உம் பணி செய்ய எசாயா இறைவாக்கினரை அழைத்த அன்பு தெய்வமே! எம் திரு அவையை வழி நடத்தும் திருத்தந்தை, ஆயர், குருக்கள், கன்னியர்கள், துறவறத்தார், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் அழைப்பில் நிலைத்திருந்து உமக்கு என்றும் ஊழியர்களாக பணிபுரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நீதியின் அரசரே எம் இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்கள், மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, அனைத்து மக்களும் சம உரிமை பெற்று, சமத்துவ பொங்கல் கொண்டாடக் கூடிய நீதியின் ஆட்சியை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. நன்றியின் நாயகரே எம் இறைவா! நன்றியின் பெருவிழாவை பொங்கல் திருவிழாவாக கொண்டாடும் எம் இறைமக்களை ஆசீர்வதியும். நாங்கள் வளமோடும், நலமோடும் வாழ, நாளும் சேற்றில் உழைக்கும் விவசாயிகளின் வாழ்வு மேம்படவும், விவசாயத்திற்கு உதவும் ஆடு, மாடுகள், தட்பவெட்ப சூழ்நிலை என அனைத்தையும் ஆசீர்வதித்து, இந்தப் பொங்கல் விழா எங்கள் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியும், அன்பும் பொங்கும் திருநாளாகிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உறவின் உன்னதரே எம் இறைவா! உறவுகளில் விரிசல் கொண்டு வாழும் எம் குடும்பங்களையும், சமூகம் மற்றும் உலக அளவில் போட்டி, பொறாமை, சண்டை சச்சரவு நீங்கி அன்பிலும், அமைதியிலும் உறவு தழைத்தோங்கிய புதுவாழ்வை நாங்கள் வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அண்மையில் மறைந்த எம் முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களுக்காக நன்றி கூறுகிறோம். உம்மைப் போற்றிப் புகழ்கிறோம்.கர்தினாலாக, புனித பேதுருவின் வழித்தோன்றலாக, தலைமை ஆயராக, ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் உண்மையுள்ள ஊழியராக, இரண்டாம் வத்திக்கான் சங்கம் முதல் மறைக்கல்வி வரை அவர் அளித்த பங்களிப்பிற்கும் சேவைக்கும் நன்றி பாராட்டி, அவருக்கு முடிவில்லா பேரின்பத்தை அளித்தருள இறைவா உம்மை  மன்றாடுகிறோம்.