Namvazhvu
புத்தக வெளியீடு கடவுளுடன் இருக்கையில் நீ ஒருபோதும் தனியாக இல்லை
Thursday, 12 Jan 2023 07:09 am
Namvazhvu

Namvazhvu

மறைந்த முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் சிறப்பான கருத்துரைகளடங்கிய, கடவுளுடன் இருக்கையில் நீ ஒருபோதும் தனியாக இல்லை என்ற புத்தகமானது, மிகச்சிறந்த இறையியலாளரின்  அறிவுச்செறிவையும், ஆழமான சிந்தனைகளையும் உள்ளடக்கியுள்ளதாக அருள்பணி ஃபெடரிகோ லோம்பார்டி தெரிவித்தார்.

சனவரி 09 திங்கள் கிழமை வத்திக்கான் பதிப்பகமும் (லெவ்), இத்தாலியின் ரிசோலி பதிப்பகமும் இணைந்து வெளியிட்ட இப்புத்தகத்திற்கு முகவுரை எழுதியுள்ள இயேசுசபை அருள்பணியாளரும், வத்திக்கான் சமூகதொடர்பு அமைப்புக்களின் முன்னாள் இயக்குநரும், திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் நிறுவனத்தின் (ஜோசப் ராட்ஸிங்கர்-பெனடிக்ட் XVI ஃபவுண்டேஷன்) தற்போதைய தலைவருமான அருள்பணி ஃபெடரிகோ லோம்பார்டி இவ்வாறு தெரிவித்தார்.

தன் வாழ்நாள் முழுவதையும் கடவுளின் முகத்தைக் காண்பதிலேயே செலவழித்த மறைந்த முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள், 2005-ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி திருப்பீட தலைமை அதிகாரிகளுக்கு அளித்த செறிவான கருத்துக்கள் முதல் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் நாள், திருத்தந்தை தலைமைத்துவப் பணியைத் துறந்தது வரை அவர் ஆற்றிய செறிவுமிக்கக் கருத்துரைகளின் மிகச் சிறந்தத் தேர்வுகளை உள்ளடக்கியுள்ளதாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது என அருள்பணி  லோம்பார்டி தெரிவித்தார் .

வளமை, செறிவு, ஆழம், இணக்கம் போன்றவைகளைக் கொண்ட திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் கருத்துரைகள் அனைத்தும் மிகச் சிறந்ததாக இருந்தாலும் ஏறக்குறைய 10 கருத்துரைகளை மட்டும் உள்ளடக்கிய முதல் பாகமாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது எனவும் அருள்பணி லோம்பார்டி எடுத்துரைத்தார் .

நம்பிக்கை மற்றும் பகுத்தறிவுக்கு இடையேயான உறவு, நவீன சமுதாயத்தில் கடவுளின் இருப்பைத் துன்பங்களில் தேடல், பேரவைக் கூட்டங்களுக்கு அளித்த தொடக்க உரை, அருள்பணியாளர் ஆண்டின் (2009-2010) நிறைவு விழா மறையுரை, அவரது தலைமைத்துவப் பணியில் குளறுபடிகளை உருவாக்கிய அருள்பணியாளர் பாலியல் முறைகேடுகளில் அவரது தலையீடுகள் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளதாக இப்புத்தகம் உள்ளது எனவும் அருள்பணி லோம்பார்டி அவர்கள் தெரிவித்தார்.

ஐரோப்பியக் கண்டத்தின் கலாச்சாரம், வரலாறு போன்றவற்றை நன்கு அறிந்த ஐரோப்பிய திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள் என்றும், கிறிஸ்தவ நம்பிக்கை உரையாடல் இவர் கருத்துக்கள் வழியாக வடிவம் பெற்றது தற்செயல் நிகழ்வு அல்ல என்றும்  அருள்பணி லோம்பார்டி கூறினார். 

பகுத்தறிவு மற்றும் நம்பிக்கை

தனி நபர் மற்றும் ஒட்டுமொத்த மனித குடும்பத்தின் நன்மைக்கும் மீட்பிற்கும் அத்தியாவசியமான பகுத்தறிதல் மற்றும் நம்பிக்கைக்கு இடையிலான உறவை, உரையாடலை வளர்ப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், நிகழ்காலத்தின் சவால்களை வெளிப்படுத்துவதாகவும் இப்பத்துக்கட்டுரைகளும் உள்ளன என்றும் அருள்பணி லோம்பார்டி குறிப்பிட்டார்.

மனிதனின் ஆராய்ந்து அறியப்படும் அகநிலைக் காரணம் மற்றும் இயற்கையில் வெளிப்படும் அதன் புறநிலைக் காரணம், இரண்டையும் கண்டறிந்து, இறைச்சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்களின் மாண்பைக் காக்கும் மனிதனின் பொறுப்பை நினைவுபடுத்தி, இக்கால மனிதர்களிடம் கேள்வியை எழுப்புவதாக இந்நூல் உள்ளது என்றும் அருள்பணி லோம்பார்டி கூறினார்.