உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்திற்காக மனித உரிமை மீறல், மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு அயர்லாந்து பிரதிநிதிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அந்நாட்டு கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு ஒன்று அழைப்புவிடுத்துள்ளது.
பெரிய நிறுவனங்கள் உலகின் பல பகுதிகளில் சிறார்களை வேலைக்கு அமர்த்தல், நிலங்களை சட்டவிரோதமாகக் கையகப்படுத்துதல், காடுகளை அழித்தல், மற்றும் கடலில் எரிசக்தி எண்ணெயைக் கசியவிடுதல் போன்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் சுற்றுச்சூழல் அழிவு நடவடிக்கைகளை முதலில் நிறுத்தவேண்டும் என ட்ரோகேயர் என்ற அயர்லாந்து கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு விண்ணப்பித்துள்ளது.
இத்தகைய மீறல்களை வழிகாட்டு ஏடு வழியாக கட்டுப்படுத்த EC என்னும் ஐரோப்பிய சமுதாய அவை எடுத்துவரும் முயற்சிகளுக்கு அந்த அவைக்கான அயர்லாந்து பிரதிநிதிகளும் தங்கள் முழுஆதரவை வழங்கவேண்டும் என அயர்லாந்தின் காரித்தாஸ் பிறரன்பு அமைப்பான ட்ரோகேயர் அறிவித்துள்ளது.
மக்களைச் சுரண்டுவதையும் சுற்றுச்சூழலை அழிவுக்குள்ளாக்குவதையும் தடுத்து நிறுத்த உதவும் நோக்கத்தில் ஐரோப்பிய அவை தயாரித்திருக்கும் வழிகாட்டுதல் ஏடு, பெரிய நிறுவனங்களில் உயரிய மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், இந்நிறுவனங்களின் உரிமை மீறல்களால் பாதிக்கப்படுவோர், ஐரோப்பிய அவையின் நீதிமன்றத்தை அணுகவும் வழிவகை செய்கிறது.
பெரிய நிறுவனங்களால் சுரண்டப்படும் ஏழை நாடுகளின் மக்களுக்காக குரல் கொடுத்துள்ள ட்ரோகேயர் என்ற அயர்லாந்து கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, அயர்லாந்து மக்களின் நிதியுதவியுடன் ஏழை நாடுகளுக்கு உதவுவதைத் தொடர்ந்து செய்துவருகிறது. (ICN)