நீங்கள் கிறிஸ்துவுடன் நடப்பதற்குப் பதிலாக, இப்போது அவர் உங்களோடு நடக்கட்டும். அவர் உங்களுடன் உங்கள் இல்லங்கள், அலுவலகங்கள் மற்றும் உங்கள் குடும்பங்களுக்கு நடந்து வரட்டும் என்றும், நீங்கள் அவரது பாதங்களைக் கழுவி முத்தம் செய்வதற்குப் பதிலாக அவர் உங்கள் பாதங்களைக் கழுவி முத்தமிடட்டும் என்றும் மணிலாவின் கர்தினால் ஜோஸ் அட்வின்குலா கூறியுள்ளார்.
ஜனவரி 6 முதல் 10 வரை பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற கருப்பு நசரேன் பெருவிழாவில் நிகழ்ந்த நள்ளிரவுத் திருப்பலியில் ஆற்றிய மறையுரையின்போது இவ்வாறு கூறிய கர்தினால் அட்வின்குலா அவர்கள், இந்தப் பாரம்பரியமிக்க திருவிழாவில் கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையைக் காத்துக்கொள்ளுமாறும் அழைப்புவிடுத்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றுக் காரணமாகக் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு இறைமக்கள் குறைந்த எண்ணிக்கையில்தான் வந்திருந்தனர் என்றும், 2019-ஆம் ஆண்டு மட்டும் 50 இலட்சம் மக்கள் பங்கேற்றனர் என்றும் இவ்வாண்டு 15 இலட்சத்திற்கும் அதிகமானோர் இப்பெருவிழாவில் பங்கேற்றனர் என்றும் குயாபோஆலயத்தின் பங்குத் தந்தை ஏர்ல் வால்டெஸ் தெரிவித்துள்ளார்.
மெக்சிகன் சிற்பி ஒருவர் 16 -ஆம் நூற்றாண்டில் கறுப்பு நாசரேன் சுரூபத்தை வடித்தார் என்றும், ஸ்பெயின் நாட்டு மறைப்பணியாளர்கள் அதனை 1606-இல் பிலிப்பீன்ஸ் நாட்டிற்குக் கொண்டு வந்தனர் என்றும், திருத்தந்தை பத்தாம் இன்னோசென்ட் இச்சுரூபத்தை வழிபடுவதற்கு அனுமதி வழங்கினார் என்றும் இப்பெருவிழாப் பற்றிய வரலாறுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், இயேசு கல்வாரிக்குச் சிலுவையைச் சுமந்து செல்வதாக வடிக்கப்பட்டுள்ள இச்சுரூபம் பெரும் வல்லமை கொண்டதாகவும் நம்பப்படுவதுடன், இச்சுரூபம் இரண்டு முறை தீ விபத்திலிருந்தும், இரண்டு நிலநடுக்கங்களிலிருந்தும் மற்றும் ஏராளமான சூறாவளி மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் இருந்தும் தப்பித்துள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.