ஆகஸ்ட் 2022 முதல் அரசுத்தலைவர் டேனியல் ஒர்டேகா மற்றும் அவரது மனைவி துணை அரசுத்தலைவர் ரொசாரியோ முரில்லோ-வின் சர்வாதிகாரத்தால் நிக்கராகுவாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆயர் ரோலண்டோ ஜோஸ் அல்வாரெஸ் லாகோஸ் அவர்கள், ஆட்சிக்கு எதிராக சதி மற்றும் தவறான செய்திகளைப் பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக CNA செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 10, செவ்வாயன்று நடைபெற்ற விசாரணையில், இந்தச் செயல்பாட்டில் கடுமையான முறைகேடுகள் நடந்ததாகப் புகார் எழுந்த நிலையில், மாதகல்பா மறைமாவட்டத்தின் ஆயரான அல்வாரெஸ் மீதான வழக்கு விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் CNA செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
நீதித்துறையின் அறிக்கையின்படி, மனகுவா குற்றவியல் மாவட்ட நீதிமன்றங்களில், குற்றவியல் நடவடிக்கையின் ஆரம்பக் கட்ட விசாரணை நடைபெற்றது, இதில் ஆயர் அல்வாரெஸ் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை சிதைக்கும் வகையில் சதி குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டார் என்றும், நிக்கராகுவா மாநிலத்திற்கும் சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் வழியாக தவறான செய்திகளைப் பரப்பினார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஆகஸ்ட் 19, 2022 அதிகாலையில், நிக்கராகுவா காவல்துறை, மாதகல்பா மறைமாவட்டச் செயலர் அலுவலகத்தில் நுழைந்து, நிக்கராகுவா அரசுத்தலைவர் டேனியல் ஒர்டேகா-வின் 15 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியை கடுமையாக விமர்சித்தவர்களில் ஒருவரான ஆயர் அல்வாரெஸ் கைது செய்தனர்.
வழக்கறிஞரும் புலனாய்வாளருமான மார்த்தா பாட்ரிசியா மோலினா, நிகரகுவாவில் உள்ள கத்தோலிக்கத் திருஅவை ஒர்டேகா-வின் சர்வாதிகாரத்தின் கைகளில் ஏறத்தாழ 400 தாக்குதல்களை சந்தித்துள்ளது என்று "நிக்கராகுவா: ஒரு துன்புறுத்தப்பட்ட திருஅவை (2018-2022)" என்ற தனது அறிக்கையில் கூறியுள்ளார். (CNA)