நற்செய்தியின் அழகையும், புதிய ஆற்றலையும் எப்போதும் கண்டறியவும், உங்கள் மனத்திலும், வாழ்க்கையிலும் அதைக் கூர்மைப்படுத்தவும், பணிகள் உட்பட ஒவ்வொரு சூழலிலும் கடவுளின் அன்பிற்கு வலிமையான சான்று பகிரவும் உங்களை அழைக்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
வத்திக்கானுக்கு வரும் திருப்பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் இத்தாலியக் காவல்துறையினரை ஜனவரி 12, வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்முடன் பிரசன்னமாகி, உடன்பயணித்து, இளகிய மனதுடன் நாளும் நம்மைக் காத்துவரும் என்றுமுள்ள இறைவனில் நம்பிக்கை வைத்து திறந்தமனம் கொண்டவர்களாக வாழ்வதற்கு அழைக்கப்படுகிறோம் என்றும் கூறினார்.
உங்கள் பணியும் கூட, ஒவ்வொரு நாளும் நீங்கள் சந்திக்கும் சகோதரர் சகோதரிகளுக்குக் கடவுளின் உடனிருப்பின் அடையாளமாக அமையலாம் என்றும், மக்கள் அனைவரும் உங்களிடமிருந்து கருணை மற்றும் வரவேற்புக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீங்கள் அமைதியின் பணியாளர்களாக இருப்பதற்கு இதுவே தகுந்த வழி என்றும் எடுத்துரைத்தார்.
வர்ணிக்கும் வார்த்தைகளால் அல்ல, மாறாக, நற்செயல்களால் அமைதிக்காக உழைத்து, பொது நலனுக்கானப் பணியில் தங்கள் கடமையை கவனமாகச் செய்பவர்களே இன்று மக்களுக்கு அதிகம் தேவைப்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட நுட்பமான பணிகளைச் செய்வதில் உங்கள் வாழ்க்கையையும் நன்னடத்தையையும் ஊக்குவிக்கும் இலட்சியங்கள் மற்றும் தீர்மானங்களில் விடாமுயற்சியுடன் இருக்குமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன் என்றும் உற்சாகப்படுத்தினார்.