மறைந்த கர்தினால் ஜார்ஜ் பெல் அவர்கள், ஒரு நல்ல நண்பர் என்றும், தெளிந்த பார்வைகொண்ட ஒரு மனிதர் என்றும் தனது மக்களுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் என்றும் மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் கூறியுள்ளார்.
81 வயது நிரம்பிய கர்தினால் ஜார்ஜ் பெல் செவ்வாயன்று உரோமையில் இறைபதம் சேர்ந்ததையொட்டி வெளியிட்ட இரங்கல் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள கர்தினால் கிராசியாஸ் அவர்கள், அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று தான் தனிப்பட்ட முறையில் அறிந்திருந்ததாகவும் கூறியுள்ளார்.
கர்தினால் பெல் பாரம்பரியத்தை வலுப்படுத்த விரும்பியவர் என்றும், அதுவே அவரது முழு தத்துவமும், இறையியலும் மற்றும் ஆன்மிகமுமாக இருந்தது என்றும் எடுத்துரைத்துள்ள கர்தினால் கிராசியாஸ் அவர்கள், இதனை அவர் எப்போதும் பாரம்பரியத்தின் ஆழத்திற்குச் சென்று வலியுறுத்துவார் என்றும் விளக்கியுள்ளார்.
சட்டம் சம்மந்தமான அவரது பிரச்சனைகள் குறித்து கர்தினால் பெல் ஒருபோதும் பயம்கொண்டிருக்கவில்லை என்றும், அவர் மும்பைக்கு வந்தபோது கூட தனது பிரச்னைகளைக் குறித்தெல்லாம் பேசவில்லை, மாறாக, எதிர்காலம் மற்றும் திருஅவையின் பணிகள் குறித்துதான் அவர் அதிகம் பேசினார் என்றும் கர்தினால் கிராசியாஸ் நினைவுகூர்ந்துள்ளார்.
கர்தினால் பெல் அவர்கள் தனக்கு நடந்தவைகள் குறித்தெல்லாம் கசப்பான உணர்வு கொண்டிருக்கவில்லை, மாறாக, தான் எதிர்கொண்ட பிரச்சனைகளை எல்லாம் வென்று காட்டிய இறைவனின் மனிதராக, பக்தியாளராக, நம்பிக்கையாளராக, உறுதியான மனம் கொண்டவராகத் திகழ்ந்தார் என்றும் கர்தினால் கிராசியாஸ் எடுத்துக்காட்டியுள்ளார்.