Namvazhvu
பிப்ரவரி - 11 நோயாளிகளும் மனிதர்கள்தான் என்பதைக் கருத்தில் கொள்க
Wednesday, 18 Jan 2023 12:38 pm
Namvazhvu

Namvazhvu

அர்ப்பணத்துடன் பணிபுரியும், குறிப்பாக கடந்த மூன்றாண்டுகளின் பெருந்தொற்று காலத்தில் மக்கள் மீதான அக்கறையுடன் செயல்பட்ட நலப்பணியாளர்களுக்குத் தன் நன்றியை வெளியிடுவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்தார்.

கதிரிக்கவியல், நோயாளிகளுக்கான புனர்வாழ்வுத் திட்டங்கள், நோய்தடுப்பு துறைகள் போன்றவற்றில் பணியாற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகளை ஜனவரி 16ஆம் தேதி திங்கள் கிழமை காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பின் வல்லமையால் தூண்டப்பட்டு கடமையுணர்வுடன் தங்களுக்கு அடுத்திருப்போருக்கு தன்னலமின்றி பணிபுரிவோராகிய அவர்களுக்கு தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி சிறப்பிக்கப்படும் உலக நோயாளர் தினத்தை நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவரை, கருணையுடன் கண்ணோக்கி, அவரின் காயங்களை தன்னுடையதாக்கி அவருக்கு உதவிய நல்ல சமாரியரே ஒரு சமுதாயம் எப்படி கட்டியெழுப்பப்படமுடியும் என்பதன் எடுத்துக்காட்டாக உள்ளார் என்பதை அவர்களுக்கு சுட்டிக்காட்டினார்.

உங்களின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ள நோயாளிகள், முதலில் மனிதர்கள் என்பதை கருத்தில் கொண்டவர்களாக அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கி வாழ்வில் அவர்களைத் தூக்கி நிறுத்துபவர்களாகச் செயல்படவேண்டும் என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை, நலப்பராமரிப்புகளைப் பெறுவதற்கான உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டவர்களாக ஒவ்வோர் அரசும் செயல்படவேண்டும் என்றும், நோயாளிகளை கவனிக்காத ஒரு சமுதாயத்துக்கு வருங்காலம் என்பது இல்லை எனவும் மேலும் தெரிவித்தார்.