புனித பிரான்சிஸ் சலேசியார் இறந்த நான்காம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ், ‘அனைத்தும் அன்பைச் சார்ந்துள்ளது’ (Everything Pertains to Love) என்ற மடலை எழுதியுள்ளார். புனித பிரான்சிஸ் சலேசியாரை “இறையன்பின் மறைவல்லுநர்” (Doctor of Divine Love) என்று புனித இரண்டாம் ஜான் பால் அழைப்பது தற்செயலாக அல்ல; ஏனென்றால் அவர் “ஓர் ஆழமான ஆய்வறிக்கையை எழுதியது மட்டுமல்லாமல், அந்த அன்பிற்கு ஒரு சிறந்த சாட்சியாகவும் இருந்தார்.
புனித சலேசியார் "இறையன்பையும், பிறரன்பையும் முன்னிலைப்படுத்தியதை அவரின் வாழ்விலும் எழுத்துக்களிலும் அறியலாம்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறுகிறார்.
எனவே, சலேசியாரின் வாழ்வையும் வரலாற்றையும் உள்ளடக்கி, "அனைத்தும் அன்பைச் சார்ந்தது" என்ற தலைப்பில் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய இம்மடல் புனிதரின் சிறப்பினை ஒன்பது தலைப்புகளில் அவ்வளவு அழகாக விவரிக்கிறது. இந்தத் தலைப்புகளில் நம் திருத்தந்தை விவரித்துள்ள உள்ளடக்கத்தைத் தெளிவாக அறியலாம்.
1. “அனைத்தும் அன்பைச் சார்ந்தது (Everything Pertains to Love)
“அனைத்தும் அன்பைச் சார்ந்தது.” இந்த வார்த்தைகள் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 28, 1622 அன்று லியோனில் இறந்த பிரான்சிஸ் சலேசியார் நமக்கு விட்டுச் சென்ற ஆன்மீக பாரம்பரியத்தை இரத்தினச் சுருக்கமாகக் கூறுகின்றன. கடவுளை மையமாகக் கொண்ட அத்தகைய வாழ்க்கை முறைக்கான ஆழமான காரணங்களை காலப்போக்கில் அவருக்கு தெளிவாகத் தெரிந்தது. அந்த காரணங்களை “கடவுளின் அன்பு” என்ற அவரது புகழ்பெற்ற நூலில் எளிமையுடனும் துல்லியத்துடனும் விளக்கினார்: “ஒருவர் கடவுளை நினைக்கின்ற தருணத்தில் தன் இதயத்தில் மகிழ்ச்சியை உணர்கிறார். இது கடவுள் மனித இதயத்தின் கடவுள் என்பதற்கு சாட்சியாக இருக்கிறது”. இந்த பின்னணியில், புனித பிரான்சிஸ் சலேசியார் கடவுளைக் காண்பதற்கும், மற்றவர்கள் அவரைத் தேடுவதற்கும், அவரது காலத்தின் பெண்கள் மற்றும் ஆண்களின் இதயங்களைவிட சிறந்த இடம் இல்லை என்று ஏன் உணர்ந்தார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். நாமும் இப்புனிதரை போல நம்முடைய இதயத்தில் கடவுளைத் தேட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அறிவுறுத்துகிறார்.
2. அன்பின் அளவுகோல் (The Criterion of Love)
“எல்லா உண்மையான ஆன்மீக வாழ்க்கையின் ஆணிவேரில் ஆசை இருக்கிறது என்பதையும் அதோடு அதன் இழிவுக்குரிய காரணத்தையும் அனுபவத்தின் மூலம் பிரான்சிஸ் சலேசியார் உணர்ந்தார். தெளிந்து தேர்தல் பயிற்சியின் மூலம் தொடர்ந்து அவர் ஆசையை சோதிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார். இந்த மதிப்பீட்டிற்கான இறுதி அளவுகோல் அன்பு என்று கண்டுபிடித்தார். எடுத்துக்காட்டாக, சமையலறையில் பணி செய்யும் ஓர் அருட்சகோதரிக்கு மற்றொரு அருட்சகோதரியை விட அதிக அன்பும் கருணையும் இருந்தால், அப்பணி அவரைத் தடுக்காமல் கடவுளுக்கு மிகவும் பிரியமாக இருக்க உதவும் என்றார். எனவே, நம் ஆன்மீக வாழ்வின் தரத்தை அறிந்திட அன்பு ஓர் அளவுகோலாக உள்ளது என்ற புனித பிரான்சிஸ் சலேசியாரின் வார்த்தையை திருத்தந்தை பிரான்சிஸ் முன்னிறுத்துகிறார்.
3. ஆரம்பக் கல்வி: கடவுளைப் பற்றி அறிந்து கொள்ளும் துணிவான செயல் (Early Education: The Adventure of Coming to Know Oneself in God)
முதலில் லா ரோச்-சுர்-ஃபோரன் (La Roche-Sur-Foron) பள்ளியிலும், பின்னர் ஆனேசியிலும், தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். பிறகு, பாரிசில் இயேசு சபையினரால் புதிதாக தொடங்கப்பட்ட கிளர்மாண்ட் கல்லூரிக்கு சென்றார். அங்கு படிக்கின்றபோது வாழ்க்கையில் நிரந்தரமான அடையாளத்தை ஏற்படுத்தும் இரண்டு உள்ளார்ந்த சோதனைகளை அவர் தொடர்ந்து அனுபவித்தார். அமைதியின்மை மற்றும் நிச்சயமற்ற தன்மையுடன் கூடிய இந்தச் சோதனையின் அனுபவம், பின்பு அவருக்கு ஒளியூட்டக்கூடியதாக இருந்தது.
அதோடு, மனிதகுலத்துடன் கடவுளின் உறவின் இரகசியத்திற்கு ஒரு தனித்துவமான அணுகுமுறையை அவருக்கு வழங்கியது. “ஓர் இறையியல் அமைப்பை உருவாக்குவதாக அவர் ஒருபோதும் கூறவில்லை என்றாலும், அவரது ஆன்மீக வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைகள் மிகச்சிறந்த இறையியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. அது ஆன்மீக வாழ்வு மற்றும் திரு அவையின் வாழ்வு ஆகிய இரண்டு உண்மையான இறையியலின் முக்கியமான பரிமாணங்களை உள்ளடக்கியது.
4. ஒரு புதிய உலகின் கண்டுபிடிப்பு (The Discovery of a New World)
மானுடவியல் படிப்பை முடித்த பிறகு, பிரான்சிஸ் பதுவை பல்கலைக்கழகத்தில் சட்ட படிப்பை மேற்கொண்டார். ஆனேசிக்குத் திரும்பியதும், தனது தந்தையின் எதிர்ப்பையும் மீறி தனது வாழ்க்கையின் திசையை அவர் ஏற்கனவே நினைத்ததுபோல் தீர்மானித்தார். அதன்படி டிசம்பர் 18, 1593 வருடம் திருப்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். அவர் மறைப்பணியின் வழியாக “உலகில் எழுந்துள்ள பெரிய பிரச்சனைகள், அவற்றை அணுகும் புதுமையான வழிகள், ஆன்மீகத்தில் புதிய மற்றும் குறிப்பிடத்தக்க ஆர்வம், மேலும், அது எழுப்பிய வினோதமான கேள்விகளால் பிரான்சிஸ் ஈர்க்கப்பட்டார். ஒரே வார்த்தையில் கூறவேண்டுமென்றால், அவர் ஓர் உண்மையான “சகாப்த மாற்றத்தை” உணர்ந்தார்.
5. பிறரன்பு தனது குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் செய்கிறது (Charity does Everything for her Children)
“1620 லிருந்து 1621 க்கு இடையில், பிரான்சிஸ் தனது வாழ்க்கையின் இறுதி நாட்களை நெருங்கியபோது, தனது திருப்பணியாளர் ஒருவருக்கு கடிதம் எழுதினார். அது அவர் வாழ்ந்த காலங்களைப் பற்றிய அவரது கண்ணோட்டத்தை நமக்குத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. புதிய கேள்விகளுக்கு பதிலளிக்க புதிய படைப்புகளை எழுதுவதற்கான அவரின் விருப்பத்தை ஊக்குவித்தார். அதன் வழியாக புதிய படைப்புகளின் அவசியத்தை அங்கீகரித்தார். அதோடு அவர் ஆரம்பத்தில், எழுதிய ‘கடவுளின் அன்பு’ (Treatise on the Love of God) என்ற நூலின் முன்னுரையிலும் குறிப்பிட்டுள்ளார்.
6. ஒரு சகாப்த மாற்றத்தின் கோரிக்கைகள் (The Demands of an Epochal Shift)
கடவுளின் கொடையினாலும், அவரது சொந்த குணத்தாலும், வாழ்க்கை அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்துதலின் வழியாகவும், காலம் மாறி வருவதை பிரான்சிஸ் தெளிவாக உணர்ந்தார். நற்செய்தியை அறிவிப்பதற்கான ஒரு பெரிய வாய்ப்பாக அந்த மாற்றங்கள் இருக்கும் என்று ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார். இளமைப் பருவத்திலிருந்தே அவர் நேசித்த கடவுளுடைய வார்த்தைகள் அப்போது வேகமாக மாறிக்கொண்டிருக்கும் உலகின், புதிய மற்றும் எதிர்பாராத எல்லைகளை அவருக்கு முன்பாகத் திறந்தது.” இதே பணிதான் நம்முடைய சகாப்த காலத்தின் மாற்றத்திற்காக காத்திருக்கிறது.
7. காற்றும் சிறகுகளும் (Wind and Wings)
அவருடைய சமகாலத்தவர்களுக்குக் கடவுளுடைய அன்பின் ஈர்ப்பை விளக்குவது அவருடைய ஆய்வுரையின் இறுதிக் காரணமும் நடைமுறை நோக்கமுமாகும். “நம் இதயங்களை அவருடைய அன்பின்பால் ஈர்க்க கடவுளுடைய அருளானது பயன்படுத்தும் ‘கருவிகள்’ யாவை?” என்று அவர் கேட்கிறார். ஓசேயா இறைவாக்கினரின் (11:4) வார்த்தைகளை எதிரொலிக்கும் வகையில், “மனிதநேயம், பிறரன்பு மற்றும் நட்பு” போன்றவற்றை அக்கருவிகளாக வரையறுக்கிறார். “உறுதியான இரும்பு சங்கிலிகளால் இன்றி, அழைப்பினாலும், தூய தூண்டுதலின் வழியாகவும் நாம் கடவுளிடம் ஈர்க்கப்படுகின்றோம் என்று தெளிவாக எழுதுகிறார்.
8. உண்மையான பக்தி (True Devotion)
பக்தியைப் பற்றி விளக்குவது புனித பிரான்சிஸ் சலேசியாரின் இரண்டாவது முக்கியமான தீர்மானமாகும். பக்தி பற்றிய சிந்தனையையும், அதன் உலகளாவிய மற்றும் பிரபலமான தன்மையையும் எடுத்துரைத்தார். “மீட்பின் பல்வேறு வழிமுறைகளால் பலப்படுத்தப்பட்ட அனைத்து நம்பிகையாளர்களின் நிலை எதுவாக இருந்தாலும், அவர்கள் தனித்துவமான வழியில் இறைவனால் அழைக்கப்படுகிறார்கள். நிறைவான புனிதத்தின் வழியாக தந்தையும் நிறைவாக உள்ளார். அதுபோல் பக்தியின் வழியாக நாமும் நிறைவான புனிதத்தை அடையவேண்டும்" என்ற புனித பிரான்சிஸ் சலேசியாரின் கற்பினைகள் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் தூய நிலைக்கான உலகளாவிய அழைப்பின் கற்பித்தலாக இருந்தது.
9. வாழ்வின் பரவசம் (The Ecstacy of Life)
கிறிஸ்தவ வாழ்வின் முழுமையானது “வேலை மற்றும் வாழ்க்கையின் பரவசம்“ என்று புனித பிரான்சிஸ் சலேசியார் கருதினார். அது நம் இதயங்களில் மகிழ்ச்சியை மலரச் செய்யும். இவ்வாறு, “நாம் ஒரு சமூக, நேர்மையான மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையை மட்டுமல்லாமல், தெய்வத் தன்மையுள்ள, ஆன்மீக, பக்தி மற்றும் பரவசமான வாழ்க்கையை தொடர்வதாகும். மேலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நமது இயல்பு நிலைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை வாழ்வதாகும்".