Namvazhvu
தேசிய அமல அன்னை பேராலயம் 50 ஆம் ஆண்டு வாழ்க்கைக்கான பேரணிக்குத் திருத்தந்தை வாழ்த்து
Friday, 27 Jan 2023 06:42 am
Namvazhvu

Namvazhvu

மனித குடும்பத்தைச் சார்ந்த அப்பாவியான மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் வாழ்வதற்கான உரிமையை ஊக்குவித்து பாதுகாக்கும் வகையில் வெளிப்படையாக நடத்தப்படும் வாழ்விற்கான விழிப்புணர்வு பேரணிக்குத் தனது ஆழ்ந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

சனவரி 19 ஆம் தேதி வியாழனன்று அமெரிக்காவின் வாசிங்டனில் உள்ள தேசிய அமல அன்னை பேராலயத்தில் கொண்டாடப்பட்ட 50ஆவது ஆண்டு வாழ்க்கைக்கான பேரணி என்னும் நிகழ்விற்கு அனுப்பியுள்ள செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு அனுப்பிய இச்செய்தியானது அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவரும் ஆர்லிங்டன்மறைமாவட்டத்தின் ஆயருமான  மைக்கேல் பர்பிட்ஜ் என்பவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உண்மையான மற்றும் நீதியான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவது என்பது ஒவ்வொரு நபரின் தூய்மையான மாண்பு, மரியாதை மற்றும் ஒவ்வொருவரையும் உடன் பிறந்த உறவாக ஏற்று வரவேற்பதை அடிப்படையாகக் கொண்டது என்றும் அச்செய்தியில்  திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மனித வாழ்க்கையை அதன் அனைத்து நிலைகளிலும், குறிப்பாக சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் இயற்றப்பட்ட போதுமான சட்ட நடவடிக்கைகளின் வழியாக எல்லா நிலைகளிலும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும், குறிப்பாக இளையோர் இச்செயலில், விடாமுயற்சியுடன் இருப்பதற்கான உறுதிப்பாட்டை எல்லாம் வல்ல கடவுள் தந்து பலப்படுத்துவார் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.                      

கருக்கலைத்தல் குறித்த ரோ வி வேட் சட்டத்திற்குப் பிந்தைய அமெரிக்காவை நோக்கி அணிவகுத்தல் என்ற கருப்பொருளில் இவ்வாண்டு கொண்டாடப்பட்ட வாழ்க்கைக்கான இப்பேரணியில் பங்கேற்றவர்களுக்கும், அவர்களின் செபம், தியாகம் போன்றவற்றிற்கும், இப்பேரணிக்கு ஆதரவளித்த  அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்குவதாகவும் அச்செய்தியில் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

1973 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கியநாடுகள் முழுவதும் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பிரதிபலிப்பாக முதலில் இப்பேரணி தொடங்கப்பட்டது. கருக்கலைப்பை முடிவுக்குக் கொண்டு வர உழைப்பதன் வழியாக ஒவ்வொரு மனித வாழ்வின் அழகையும் மாண்பையும் ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இப்பேரணி, ஒன்றுபடுதல், கல்வி கற்பித்தல் மற்றும் வாழ்க்கைக்கு ஆதரவான மக்களை பொதுவான இடத்தில் அணிதிரட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

2022 ஆம் ஆண்டு ஜூன்  மாதம் இச்சட்டமானது அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டு, கருக்கலைப்பை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகார வரம்பை தனிப்பட்ட அமெரிக்க மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது.