Namvazhvu
குஜராத் நீதிமன்றம் கருத்து! பசுவதை தடுக்கப்பட்டால் பூமியில் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும்...
Saturday, 28 Jan 2023 04:56 am
Namvazhvu

Namvazhvu

நாட்டில் பசு வதைக்கு எதிரான குரல் அதிகரித்து வருகிறது. குஜராத் மாநிலம் தபி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பசுமாடுகள் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதி சமீர் வினோத்சந்திரா, பசுவரட்டியில் (சாணம்) கட்டப்படும் வீடுகளை அணு கதிர்வீச்சு தாக்குவதில்லை. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பசுவின் கோமியம் பல நோய்களைக் குணப்படுத்துகிறது. மதம் பசுவில் இருந்துதான் பிறக்கிறது. பசு ஒரு விலங்கு மட்டும் கிடையாது. அது ஒரு தாய். 68 கோடி புண்ணிய ஸ்தலங்கள் மற்றும் 33 கோடி கடவுள்களிடம் வாழக்கூடியது பசு. பசுக்களை மகிழ்ச்சியில்லாமல் வைத்திருந்தால் நமது சொத்துக்கள் அனைத்தும் காணாமல் போய்விடும்.

பசுவதைக்கும், பருவ நிலை மாற்றத்துக்கும் தொடர்பு இருக்கிறது. தற்போதுள்ள பிரச்னைக்கு வெறித்தனமும், முன்கோபமும்தான் காரணமாகும். இவை அதிகரிப்பதற்கு பசு வதைதான் ஒரே காரணமாகும் என்று தெரிவித்த நீதிபதி இவ்வழக்கில் பசு மாட்டை கடத்திய நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் 16 பசு மாடுகளைக் கடத்தியதாக இவ்வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள நபர் கைது செய்யப்பட்டார். குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டதோடு 5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், நீதிபதியின் கருத்துக்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் இல்லை என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் பசு வதை தொடர்பான வாதங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வருவதில்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பசு வதைக்கு பா.. ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பசுக்கள் லாரிகளில் கடத்திச் செல்லும்போது இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்துகின்றனர்.