மகிழ்ச்சியே நற்செய்தியாக
இன்றைய நற்செய்தி வாசகத்தில் மலைப்பொழிவின் தொடக்கப் பகுதியை வாசிக்கின்றோம். ‘பேறுபெற்றவர்கள்’ என்னும் எட்டு ‘பேறுபெற்ற நிலைகளுடன்’ தொடங்குகிறது மலைப்பொழிவு. மலைப்பொழிவின் இடம் மற்றும் சூழலமைவு மூன்றுசொற்களில் தரப்பட்டுள்ளது: (அ) இயேசு மலைமேல் ஏறுகின்றார், (ஆ) சீடர்கள் அவரிடம் வருகின்றனர், (ஆ) இயேசு அமர்ந்து கற்பிக்கின்றார். மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை புதிய மோசே என அறிமுகம் செய்கின்றார். முதல் ஏற்பாட்டு மோசே மலைக்கு ஏறிச் சென்றது போல, இரண்டாம் ஏற்பாட்டு மோசே என்னும் இயேசு மலைக்கு ஏறிச் செல்கின்றார். மலைப்பொழிவு சீடர்களுக்கான போதனையாக உள்ளது. மக்கள் அனைவரும் இயேசுவைச் சுற்றி இருந்தாலும், போதனை என்னவோ இயேசுவின் சீடர்களுக்கானதாக இருக்கிறது. ஆக, மலைப்பொழிவைக் கேட்பவர்கள் சீடத்துவத்துக்கான அழைப்பைப் பெறுகின்றனர். சீடத்துவத்தை ஏற்கும் ஒருவரே மலைப்பொழிவுப் போதனையில் முழுமையாகப் பங்கேற்கவும், அப்போதனையை வாழ்ந்து காட்டவும் முடியும். மூன்றாவது, ‘அமர்தல்’ என்பது அதிகாரத்தைக் குறிக்கின்றது. தொழுகைக் கூடங்களிலும் பள்ளிகளிலும் போதிக்கின்ற ரபிக்கள், வழக்கமாக அமர்ந்து கொண்டு கற்பிப்பர். அவர்கள் தங்கள் பாடத்தின்மேல் கொண்டிருக்கின்ற அதிகாரத்தையும், மாணவர்கள்மேல் கொண்டிருக்கின்ற அதிகாரத்தையும் இச்செய்கை அடையாளப்படுத்துகிறது.
‘பேறுபெற்ற நிலை’ என்பதை மகிழ்ச்சியான நிலை, தெரிவு செய்யப்பட்ட நிலை என்றும் புரிந்து கொள்ளலாம். இப்பகுதியில் எட்டுபேறு பெற்ற நிலைகளை இயேசு முன் மொழிகின்றார்.
பண்பு 1: ‘ஏழையரின் உள்ளம் கொண்டிருத்தல்’
லூக்கா நற்செய்தியாளர் இவ்வாக்கியத்தைச் சற்றே மாற்றி, ‘ஏழையரே நீங்கள் பேறுபெற்றோர்’ என்று இயேசு சொல்வதாக எழுதுகின்றார். மத்தேயு நற்செய்தியில் ஏழ்மை என்பது பொருளாதார வறுமை அல்லது பின்தங்கிய நிலையை அல்ல; மாறாக, ஓர் ஆன்மாவின் உள்ளக் கிடக்கையைக் குறிக்கின்றது. ‘மற்றவர்களை, குறிப்பாக, கடவுளைச் சார்ந்திருக்கின்ற உள்ளம்’ ஏழையரின் உள்ளம் என அழைக்கப்படுகின்றது. இன்றைய உலகில் சார்பு நிலை என்பது, தவிர்க்கப்பட வேண்டியதொன்றாகக் கற்பிக்கப்படுகிறது. சார்புநிலை தவிர்த்து கட்டின்மை அல்லது தற்சார்பு நிலை முன்மொழியப்படுகிறது. பெற்றோர்களைச் சார்ந்திராத பிள்ளைகள், பிள்ளைகளைச் சார்ந்திராத பெற்றோர்கள், கணவனைச் சார்ந்திராத மனைவி, மனைவியைச் சார்ந்திராத கணவன், கடவுளைச் சார்ந்திராத நாம் என நம் கலாச்சாரம் மாறிக்கொண்டே வருகின்றது. ஆனால், நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்துள்ளோம். நம் வாழ்வுக்காக மற்றவர்களைச் சார்ந்துள்ளோம் என்னும் எண்ணம் நம் மகிழ்ச்சிக்கு அடிப்படையாக இருக்கிறது.
பண்பு 2: ‘துயருறுதல்’
துன்பமும் மகிழ்ச்சியும் ஒன்றுக்கொன்று முரணாகத் தெரிகிறது. ஆனால், மகிழ்ச்சியின் பொருள் துன்பத்தில் தெரிகிறது. துன்பம் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்கிறது. துன்பம் என்பது நோய், முதுமை, இறப்பு, இழப்பு ஆகியவற்றால் வரும் துன்பம் மட்டுமல்ல; மாறாக, சின்னச் சின்ன விடயங்களில் நாம் அடையும் துன்பம், நம் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வருகின்ற துன்பம், முடிவெடுக்க வேண்டிய துன்பம், முயற்சி எடுக்க வேண்டிய துன்பம் எனஅனைத்தும் துன்பங்களே. ‘நான் காயம் பட்டாலும் சோர்ந்து போகமாட்டேன்’ என்னும் மனப்பாங்கே நமக்கு ஆறுதலைத் தருகின்றது.
பண்பு 3: ‘கனிவு கொள்தல்’
இயேசு தம்மைப் பற்றிச் சொல்லும்போது, தாம் கனிவும் மனத்தாழ்மையும் கொண்டவர் என அறிமுகம் செய்கின்றார். என்ன நடந்தாலும் அமைதியாகவும், பொறுமையாகவும், உடைந்து போகாமலும் இருத்தலே கனிவு. கனிவு கொள்கின்ற ஒருவர் நாட்டை உரிமையாக்கிக் கொள்கின்றார். அதாவது, அவரால் எவரையும் எதையும் சம்பாதித்துக்கொள்ள இயலும்.
பண்பு 4: ‘நீதி நிலைநாட்டும் வேட்கை கொள்தல்’
அநீதியாக நடப்பவர்கள் நடுவில் நீதியை நிலைநாட்டுதல் என்பது மிகப் பெரிய சவால். நாம் செய்கின்ற செயல்களை சரியானது, எளிதானது என இரு நிலைகளில் வகைப்படுத்தலாம். சரியானது எல்லாம் எளிமையாக இருப்பதில்லை. எளிமையானவை எல்லாம் சரியாக இருப்பதும் இல்லை. சரியானதை மட்டும் எப்போதும் விருப்பம் கொண்டிருப்பவர் நிறைவு கொள்வர்.
பண்பு 5: ‘இரக்கம் கொள்தல்’
மற்றவர்கள் என்னை எப்படி நடத்த வேண்டும் என விரும்புகிறேனோ, அப்படியே நானும் மற்றவர்களை நடத்துவேன். இரக்கம் கொள்தல் என்பது கண்ணாடியில் முகம் பார்ப்பதுபோல. நாம் செய்வது நமக்கே திரும்பக் கிடைக்கும்.
பண்பு 6: ‘தூய்மையான உள்ளம்’
கடவுள்மேல் நாம் கொண்டுள்ள நம்பிக்கை நம் வாழ்வின் எல்லா இயக்கங்களிலும் மிளிர்ந்து நின்றால் நலம். தூய்மை என்பது கடவுளோடு இணைத்துக் கொண்டாடப்படும் மதிப்பீடு. ஏனெனில், முதல் ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் தம்மைத் தூயவர் என அழைக்கின்றார். இங்கே தூய்மை என்பது வழிபாடு சார்ந்த தூய்மையைக் குறித்தாலும், தூய்மையான உள்ளம் என்பது தயார் நிலையில் இருக்கும் உள்ளம் என்றும் புரிந்து கொள்ளப்படலாம்.
பண்பு 7: ‘அமைதி ஏற்படுத்துதல்’
அமைதியை ஏற்படுத்துதல் என்பது நாம் மேற்கொள்ளும் தெரிவு. முணுமுணுப்புகள், சண்டைகள் எழுந்தாலும் இயல்பாக அவற்றை ஏற்றுச் சரிசெய்யும் தாராள உள்ளம் கொள்பவரே அமைதியை ஏற்படுத்த முடியும். அமைதி ஏற்படுத்துபவர் ஒருவர் மற்றவரை இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறார்.
பண்பு 8: ‘நீதியின் பொருட்டு துன்பம்’
4 ஆம் பண்பில் நீதி என்பது விருப்பமாக நின்றது. இங்கே 8 ஆம் பண்பில் அது செயலாகக் கனிகின்றது. விருப்பமும், செயலும் இணைந்து செல்லவேண்டும்.
பேறுபெற்ற நிலைகளை நிறைவு செய்கின்ற இயேசு, ‘மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்’ என்று தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.
மகிழ்ச்சிக்கான புதிய படிநிலைகளாக பேறுபெற்ற நிலைகளை அமைக்கின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில், இறை மைய வாழ்க்கைக்கு மக்களை அழைக்கின்றார் செப்பனியா. இறை மைய வாழ்வு என்பது இறைவனை முழுமையாகத் தேடுதல் ஆகும். இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், கொரிந்து நகர மக்கள் தாங்கள் அழைக்கப்பட்ட நிலையை உணர்ந்தவர்களாக வாழ அழைக்கப்படுகின்றனர்.
இயேசு முன்மொழிகின்ற நற்செய்தி மகிழ்ச்சியின் நற்செய்தியாக இருக்கின்றது.
மகிழ்ச்சிக்கான இப்பண்புகள் நமதானால், நாமும் விண்ணரசின் நற்செய்தியை ஒருவர் மற்றவருக்கு அறிவிக்க இயலும்.