Namvazhvu
பிப்ரவரி 2 இறைமீட்பின் துவக்கமே இயேசுவை காணிக்கையாக அர்ப்பணித்த விழா
Saturday, 28 Jan 2023 07:15 am
Namvazhvu

Namvazhvu

ஆண்டவர் இயேசு கிறிஸ்து குழந்தையாக இருந்தபோது, எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நிகழ்வை பிப்ரவரி 2 ஆம் தேதி, நாம் சிறப்பாக கொண்டாடுகின்றோம்.

ஆண்டவர் இயேசுவின் ஆரம்பகால வாழ்வில் நிகழ்ந்த ஒரு முக்கியமான நிகழ்வு இது. பிப்ரவரி 2 என்றாலே நம் நினைவுக்கு வருவது மெழுகுதிரிகளோடு நாம் மேற்கொள்கிற பவனிதான். பெரும்பாலான ஆலயங்களில் கிறிஸ்து பிறப்பிற்கு 40 நாட்களுக்குப் பிறகு, ஆண்டவரை காணிக்கையாக ஒப்புக்கொடுத்த நாள், திரு வழிபாட்டில் குறிப்பிட்டிருப்பது போல, இறையாசீர் மற்றும் மெழுகுதிரி பவனியோடு தொடங்கி, சிறப்பிக்கப்படுகின்றது. பொது உரோமை நாள்காட்டி புதுப்பிக்கப்படுவதற்கு முன்பாக இவ்விழா, கிறிஸ்து பிறப்புகாலத்தின் இறுதி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.

சிமியோன் மற்றும் அன்னா இவர்களின் வார்த்தைகளின் வழியாக, கிறிஸ்து பாலன்மீட்பர்என்ற உண்மையை வெளிப்படுத்துகிற இந்த நிகழ்வு இன்னொருதிருக்காட்சிப் பெருவிழாவாகக்கருதப்படுகின்றது. இந்நாளில் நடைபெறும் இந்த மெழுகுதிரி பவனி, கிறிஸ்துவே உலகின் ஒளி என்பதை உலகிற்கு உரக்கச் சொல்கிறது. ஆலயத்தை நோக்கி நடைபெறும் இப்பவனியில், கிறிஸ்துவை வெளிப்படுத்திய சிமியோனின் வார்த்தைகள் அடங்கிய பாடல்கள் பாடப்படுகின்றன.

கத்தோலிக்க மற்றும் மரபு மாறா (Orthodox) திரு அவைகளில் ஆலயத்தை நோக்கிச் செல்கிற இப்பவனி, கிறிஸ்து பாலன் எருசலேம் ஆலயத்தை நோக்கி சென்ற நிகழ்வை நமக்கு நினைவு படுத்துகின்றது. 1969 ஆம் ஆண்டு, கீழைத்திரு அவையினர் (Oriental Church) தொடங்கிய ஆண்டவரை காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிற இவ்விழாவானது, மேற்கத்திய நாடுகளில்தாய் மரியின் தூய்மை சடங்கு நாளாக கிறிஸ்து பிறப்பு காலத்தின் முடிவில் கொண்டாடப்பட்டது.

கிறிஸ்து இயேசுவை காணிக்கையாக ஒப்புக்கொடுத்த நிகழ்வானது, லூக்கா நற்செய்தியில் 2 ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆண்டவர் அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்வைப் பற்றிய லூக்கா நற்செய்தியாளரின் விவரிப்பு, ‘திருச்சட்டப்படி ஆண் தலைப்பேறை அர்ப்பணிக்கிற சடங்கையும்’, ‘தூய்மைபடுத்துகிற சடங்கையும்இணைத்து நமக்குத் தருகிறது (லூக் 2:23-24). இங்கு, யோசேப்பும், மரியாவும் ஒரு சோடி மாடப்புறாக்கள் அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளை பலியாக கொடுப்பதன் வழியாக, ஏழைகளுக்கு உரிய காணிக்கையை (லேவி 12:8) அவர்கள் தெரிவு செய்தார்கள் என்பதை, லூக்கா நற்செய்தியாளர் வெளிப்படையாக எடுத்துரைக்கிறார். லேவியராகமம் 2:1-14 வரை உள்ள பகுதி, ஒரு ஆண் குழந்தை பிறந்த நாற்பது நாட்களுக்குப் பிறகு, இந்த அர்ப்பணச் சடங்கை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையிலேயே இந்த நிகழ்வு கிறிஸ்து பிறந்த நாற்பது நாட்களுக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால்தான், நமது உரோமைத் திரு அவை இந்நிகழ்ச்சியை மகிழ்ச்சி நிறை மறையுண்மைகளில் நான்காவது மறையுண்மையாகக் கொண்டிருக்கிறது.

எருசலேம் ஆலயத்தில் நடந்த இந்த அர்ப்பண நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகிறது. பொதுவாகவே, லூக்கா நற்செய்தியாளர் ஆலயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவராக இருக்கிறார். உண்மையில் இவருடைய நற்செய்தி ஆலயத்தில் தொடங்கி, (ஆலயத்தில் செக்கரியா வானதூதரை சந்தித்தல்) ஆலயத்தில் நிறைவடைகிறது (இயேசுவின் உயிர்ப்பிற்கு பிறகு அவருடைய சீடர்கள் ஆலயத்திற்கு சென்று இடையறாது ஆண்டவரை புகழ்ந்து கொண்டிருந்தார்கள்). மேலும், இன்னும் பல இடங்களில் ஆலயத்தைப் பற்றிய குறிப்புகள் லூக்கா நற்செய்தியில் காணப்படுகின்றன.

பண்டைய இஸ்ரயேலர் வாழ்வில் ஏன் ஆலயம் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றது? ஆலயம் என்பது ஆண்டவருடைய உறைவிடம், அது எல்லாம் வல்லவரை எதிர்கொள்கிற ஒரு தளம், கடவுளும் - மனிதரும் சந்திக்கிற ஒரு சந்திப்புக் கூடாரம்இறையும் - மனிதமும் ஒருங்கே  சங்கமிப்பது ஆலயத்தில்தான். மனுகுலம் இறைவழிக்கு திரும்ப இவ்விடம் அவசியப்படுகின்றது. எப்போதெல்லாம் யாரேனும் ஒருவர் ஆலயத்தில் காணிக்கை செலுத்துகிறாரோ, அப்போதெல்லாம் அவர் தன் வாழ்வையும், மனதையும் மடைமாற்றி இறைவன்பால் திரும்புகிறார். இவ்வாறு, அவர் கடவுளோடு ஒப்புரவாகின்றார்.

ஆனால், இஸ்ரயேல் நாட்டின் யூத மக்களின் பாவங்கள் ஆலயத்தின் மேன்மைக்கு மற்றும் புனிதத்திற்கும் ஆபத்தை வருவித்தது. எனவே, உண்மையில் நிலைமை மோசமானதால் மக்களின் பாவத்தின் நிமித்தமாக ஆண்டவரின் மாட்சி (செக்கீனா) ஆலயத்தை விட்டு நீங்கியது என்பதே இறைவாக்கினர் எசேக்கியேலின் கூற்றாகும். குறிப்பாக, இறைவாக்கினர் எசேக்கியேல் 8-11 வரை உள்ள பகுதியில், கடவுளின் மாட்சி முதல் ஆலயத்திலிருந்து (சாலமோனின் ஆலயம்) வெளியேறியதை, கி.மு 586 ஆம் ஆண்டில், எருசலேம் நகரும், ஆலயமும் அழிக்கப்பட்ட நிகழ்வின் ஆரம்பமாக எடுத்துக் காட்டுகிறார். ஆகவேதான், ‘ஆண்டவரின் மாட்சி ஆலயத்தைவிட்டு நீங்கியதுஎன்ற இந்த வரிகள் ஒட்டுமொத்த விவிலியத்திலும் நாம் காண்கிற போது அதிகம் கலக்கமுண்டாக்கும், பயமுறுத்தும் வரிகளாக கருதப்படுகின்றன. எனவேதான், இழந்த ஆண்டவரின் மாட்சியை திரும்பக் கொண்டுவர, அவரைப் புகழ உகந்த இடமாக எருசலேம் ஆலயத்தை மறுசீரமைப்பு செய்யவேண்டும் என்பது, இஸ்ரயேல் மக்களின் தீராத வேட்கையாக எப்போதும் இருந்தது. இந்த ஏக்கத்தை இறைவாக்கினர்களின் வார்த்தைகளிலும், திருப்பாடல்களிலும் நாம் அதிகம் காணலாம்.

இதைத்தான் இந்த விழாவிற்கென்று நமக்கு தரப்பட்ட மலாக்கி புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் நாம் பின்வருமாறு வாசிக்கின்றோம், (மலா 3:1-4) “ஆண்டவர் சொல்வதாவது,……நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்”. இவ்வாறு, ஆண்டவரின் மாட்சி மீண்டும் ஆலயத்தில் குடிகொள்ளும்  என்று கூறுகின்றார். இந்தப் புரிதலோடு இந்நிகழ்வை நோக்குகிற போது யோசேப்பும், மரியாவும் ஆண்டவர் இயேசுவை ஆலயத்திற்கு கொண்டு வந்தபோது, மலாக்கி இறைவாக்கினர் உள்ளிட்ட மற்ற பல இறைவாக்கினர்கள் முன்னுரைத்த இறைவாக்குகள் நிறைவேறியதை நம்மால் காணமுடிகின்றது. அதாவது, ஆண்டவரின் மாட்சி அவரின் இல்லிடத்திற்கே திரும்பியது.

இதைத்தான்  தூய உள்ளம் கொண்ட சிமியோன் காண்கின்றார். மெசியாவின் வருகையை ஆலயத்தில் அவர் காண்கின்றார், கடவுளின் உடனிருப்பை, அவரின் குடியிருப்பை, மக்கள் ஏக்கத்தோடு தேடிக்கொண்டிருந்த அந்த மாட்சியை அவர் காண்கின்றார். பழைய ஏற்பாட்டு இறைவாக்குகளை சிமியோன் நன்கு அறிந்திருந்தார். மீட்பரைக் காணும் முன், அவர் இறக்கமாட்டார் என்ற உண்மையை தூய ஆவியார் அவருக்கு வெளிப்படுத்தி இருந்தார். அதனால்தான், குழந்தை இயேசுவை கரங்களில் ஏந்தியதும் அவர் சொன்னார், “ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச்செய்கிறீர். ஏனெனில், மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.” இந்த புகழ் பெற்ற வரிகளைத்தான் கத்தோலிக்கத் திரு அவையின் குருக்களுக்கான கட்டளை இரவு செபத்தில் நாம் தினந்தோறும் செபிக்கின்றோம்.

பலி செலுத்துகிறவரைப் போல், கடவுள் மனித வடிவில் ஆலயத்திற்கு திரும்பிவருகிறார். எதற்காக இந்த பலி? ‘வீழ்ந்த மனிதத்தை இறைவனோடு ஒப்புரவாக்க’, ‘பாவக்கறை படிந்த மனிதத்தை இறைவனிடம் திரும்பக் கொண்டுவரஇந்த பலியை உண்மையாகவே அவர் நிகழ்த்திக் காட்டினார். இறைவனும், மனிதருமான இந்த சின்ன குழந்தை இயேசு, தன் வாழ்வின் இறுதியில் மீண்டும் இந்த ஆலயத்திற்குள் நுழைந்து, தன் உடலை புதிய ஆலயமாக அறிவித்தார். பிறகு, மூன்று நாட்கள் கழித்து, கல்வாரியில் தனது இறுதி பலியை நிறைவேற்றி, சிலுவையில் தன்னையே ஒப்புக்கொடுத்து, தந்தைக்கு தன்னையே அர்ப்பணித்தார். எனவே, இன்று நாம் கொண்டாடுவது கிறிஸ்துவின் முதல் அர்ப்பணத்தை. ஆனால், அவரது இறுதி அர்ப்பணம் நிகழ்ந்தது சிலுவை மரத்தில். கிறிஸ்து பிறந்த நாற்பது நாட்களுக்குப் பிறகு, எருசலேம் ஆலயத்தில் நிகழ்ந்த ஆண்டவரின் அர்ப்பணம் நிறைவடைந்தது கல்வாரி மலையில். அக்கல்வாரி பலியின் நினைவைத்தான் நாம் ஒவ்வொரு திருப்பலியிலும் கொண்டாடுகின்றோம். எனவே, நம் ஆண்டவரை காணிக்கையாக ஒப்புக்கொடுத்த இந்த நாள் நாம் கொண்டாட வேண்டிய நம் மீட்பின் தொடக்கம் என்பதில் ஐயமொன்றுமில்லை.