மாநிலங்களால் இயற்றப்பட்ட, மதமாற்ற சட்டங்களால் ஏற்பட்ட வன்முறைகளை குறித்து, உடனடியாக விசாரணை செய்ய, மாநில உயர்நீதிமன்றத்தில் இருக்கும் மனுக்களை நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென்று இந்திய இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2023 ஜனவரி 30 ஆம் தேதி இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் அரசு பொது நல வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி, ஆறு மாநிலங்களில் மதமாற்ற தடைசட்டத்துடன் தொடர்புள்ள 21 மனுக்கள் அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில் இருக்கின்றன. இவற்றை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு மனுதாரர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். ஆனால் ஒன்றிய அரசு இதற்கு தனது கடுமையான எதிர்ப்புக்களை தெரிவித்திருக்கிறது. ஏனெனில் இவை மாநில சட்டங்களை குறித்த வழக்குகள். எனவே இவை மாநில உயர்நீதிமன்றங்களால் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டுமென்று வெங்கட ரமணி வாதிட்டார். ஏறக்குறைய 11 மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடை சட்டமானது இயக்கத்தில் உள்ளது. இதில் இமாச்சலப் பிரதேசம், மத்திய பிரதேசம், உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சட்டத்தினை பெரும்பாலும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மைமக்களை தாக்குவதற்காகவும், கொடுமைபடுத்துவதற்காகவும், மத கலவரங்கள் உண்டாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இச்சட்டமானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கின்றது. எனவே இச்சட்டங்களின் உண்மை தன்மையை விரைவில் ஆராய இம்மனுக்கள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று ஜமியத் உலமா-இ-ஹிந்த் என்ற முஸ்லிம் அமைப்பும் கிறிஸ்தவ ஐக்கிய அமைப்பும் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும் உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிற அனைத்து வழக்குகளையும் நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் என்ற அமைப்பும், இந்த மதமாற்ற தடை சட்டத்தால் சிறுபான்மை பெண்களுக்கு ஏற்படும் தீமைகளை குறித்து கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேசிய மகளிர் கூட்டமைப்பும் தனித்தனி மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 2014 மே மாதம் பிஜேபி தலைமையிலான இந்து சார்பு அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து கர்வாப்சி அதாவது கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களை தாய் மதத்திற்கு திருப்புவதற்கான அனைத்து வேலைகளையும் இந்துத்துவ குழுக்கள் வேகமாக செய்து வருகின்றன என்று அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.