Namvazhvu
தலையங்கம் காணாமல்போன மகன்கள் இருவர்
Tuesday, 07 Feb 2023 06:15 am
Namvazhvu

Namvazhvu

கௌதம் சாந்திலால் அதானி!

தன் வாழ்வின் 40 ஆண்டுக்காலத்துக்குள் உலகின் மூன்றாவது பணக்காரர் என்ற நிலையை அடைந்தவர். ஒவ்வொரு நாளும் ரூ.1600 கோடி வீதம் அவர்தம் சொத்து மதிப்பு உயர்ந்து வந்தது. 2022 ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியைவிட இரண்டு இலட்சம் கோடி ரூபாய் கூடுதலாக கொண்டிருந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 35 நிறுவனங்களை வாங்கியுள்ளார். அதானி குழுமத்தின் நிகர சந்தை மதிப்பு 22 இலட்சம் கோடி ரூபாய்.

பணக்காரர்கள் வரிசையில் ஆசிய அளவில் முதல் நபராகவும், உலக அளவில் மூன்றாம் இடத்திலும் இருந்தவர்தான் அதானி. 2001 -ல் குஜராத் முதல்வராகப் பதவியேற்ற நரேந்திர மோடியின் உற்ற நண்பர். மோடி அரசியலில் வளர்ந்தார்; அதானியோ பொருளாதாரத்தில் வளர்ந்தார்.

2001-ல் வெறும் ஓர் ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனமாக அதானி குழுமம் இருந்தது. 2014-ல் பிரதம வேட்பாளரான நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தன் சொந்த விமானத்தைக் கொடுத்து உதவியவர் அதானி. மோடியின் கஜானா கருவூலம் இவர். பாஜகவின் ஆதர்ஷ புருஷர் இவர். இந்தியாவின் உள்கட்டமைப்பிற்காக நூற்றுக்கணக்கான நிறுவனங்களை நொடிப் பொழுதில் உருவாக்கி மக்களின் வரிப்பணத்தை விழுங்குவதில் கில்லாடி. இந்திய அரசுக்கு வரி கட்டாமல் தப்பிப்பதிலும் கில்லாடி.

ஆஸ்திரேலியாவில் உள்ள கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தை அதானி குத்தகைக்கு எடுக்கவும் அதனை இந்திய அனல்மின் நிலையங்கள் 10ரூ இறக்குமதி செய்யவும் இந்தியப் பிரதமரே இடைத்தரகராக இடைநின்று உதவினார் என்றால் இவரின் பெருமையை ஊரறியும். தனக்கு கடன் கொடுத்து உதவிய குஜராத் ஸ்டேட் எக்ஸ்போர்ட் கார்ப்பரேஷனையே விலைக்கு 20 ஆண்டுகள் கழித்து விலைக்கு வாங்கியவர் அதானி. பன்னாட்டு வங்கிகளே தர முடியாது என்று மறுத்த நிலையில் LIC, SBI என்று அரசின் பொதுத்துறை நிறுவனங்களே கோடிகளில் வாரி வாரி கடன் கொடுத்து உதவப் பணிக்கப்பட்டன என்றால் இவரின் ஆளுமை எல்லாருக்கும் தெரியும்.

முந்த்ரா முதல் விழிஞ்ஞம் வரை துறைமுகங்களையும் ஆறு விமான நிலையங்களையும் விலைபேசி தன் பெயருக்கு மாற்றம் செய்திடும் மகா துணிச்சல்காரர். மின் விநியோகம் முதல் என்டிடிவி வரை அனைத்தையும் போகிற போக்கில் விலைக்கு வாங்கிய வித்தகர். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் அனல் மின் நிலைய உற்பத்தியாளர். உள்கட்டமைப்பு நிறுவனம் முதல் அதற்கு மூலப்பொருளான அம்புஜா சிமென்ட் வரை அனைத்தையும் தன் வசப்படுத்தியவர்.

சூழலியலாளர்களை ஆசுவாசப்படுத்த அதானி கிரின் எனர்ஜி என்று அலப்பறை செய்பவர். கடன் வாங்குவதில் கில்லாடி இவர். மே 2022 அன்று இவர்தம் கடன் 2,22,000 கோடி. கடன் வாங்கி சொத்து வாங்கி, அந்தச் சொத்து மதிப்பை ஈடாகக் காட்டி மீண்டும் கடன் வாங்கி புது நிறுவனம் வாங்கும் புதிய உத்தி இவருடையது.

இலங்கை, ஆஸ்திரேலியா, மலேசியா, இஸ்ரேல், தான்சானியா என்று இவரின் வலை விரியும். ஆனால், 2002 இல் குஜராத்தில் மோடியின் ஆட்சி தொடங்கியபோது அதானி குழுமத்தின் வணிக மதிப்பு வெறும் ரூ.3741 கோடி மட்டுமே. 2014-ல் மோடி பிரதமரான போது ரூ.75659 கோடி. அதாவது 20 மடங்கு.

ஜனவரி 25 ஆம் தேதி அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஹிண்டன்புர்க் நிறுவனம் (ஷார்ட் செல்லிங்க் நிறுவனம்) வெளியிட்ட 106 பக்க ஆய்வறிக்கை அதானி நிறுவனத்தை மட்டுமின்றி, இந்தியப் பங்குச்சந்தையையும் பிரதமர் மோடியையும் சரிவைக் காண வைத்துள்ளது. அந்த ஆய்வறிக்கையில் அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு தமது பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு விலையேற்றி உள்ளது என்றும் மொரீஷியஸ், அமீரகம், கரிபீயன் தீவுகளில் போலியான கம்பெனிகளைத் தோற்றுவித்து அதன் பங்குகளின் விலையை ஏற்றி  இலாபம் பார்த்தது என்றும், விதிகளை மீறி 85 சதவீதத்தை  பங்குகளை குடும்ப உறுப்பினர்களே வைத்திருக்கிறார்கள் என்றும் சான்றுகளோடு விளக்கியிருந்தது.

அந்நிறுவனப் பங்குகள் உண்மையான மதிப்பிலிருந்து 85ரூ அதிகமாக இருக்கிறது என்றும் அதன் கடன் நிறைந்த அதன் பொருளாதார நிலைப் பற்றியும் ஏறக்குறைய 88 கேள்விகளைக் கேட்டது. அதானி நிறுவனத்திற்கு மோடி அரசு சலுகைகளும் செபி (SEBI)யின் கண்டுகொள்ளாமைப் பற்றியும் கேள்வி எழுப்பியது.

அதானி நிறுவனம் ஹிண்டன்புர்க் எழுப்பிய கேள்விகளுக்கு 413 பக்க அறிக்கையில் மழுப்பலான பதில் அளித்தாலும் அதன் பங்கு விலைச் சரிவை ஈடு செய்ய இயலவில்லை. ஒரே நாளில் அதானி நிறுவனத்தின் சொத்து மதிப்பு 60,000 கோடி சரிந்தது. உலகப் பணக்காரர்களின் வரிசையில் மூன்றாம் இடத்திலிருந்து பதினொன்றாம் இடத்திற்கு மூன்றே நாளில் சறுக்கினார். பங்குச்சந்தையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் 20 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்தன. சுமார் 5.5 இலட்சம் கோடி ரூபாய் இழப்பை மூன்றே நாளில் அதானி குழுமம் இழந்தது. ஊதாரி மகன்கள் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.

ஒன்றிய அரசின் தளகர்த்தர்கள் அதானியைக் காப்பாற்ற முனையக் கூடாது. பாரபட்சமற்ற விசாரணையை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். எஸ்.பி.ஐ, எல்.ஐ.சி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் காப்பாற்றப்பட வேண்டும். தேசியம் என்கிற பெயரில் புகார்களை மறைக்க அதானி குழுமம் முனையக்கூடாது. தேசியக் கொடியைப் போர்த்திக்கொண்டு நாட்டை அதானி குழுமம் கொள்ளையடிக்க பிரதமர் மோடி, நண்பர் மோடியாக  துணை நிற்கக் கூடாது. அதானி குழுமம் ஹிண்டன்புர்க் நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடுத்து, உரிய ஆவணங்களைச் சந்தித்து நிரூபிக்க வேண்டும்.

நரேந்திர மோடி!

2002 ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டுக்குள் அரசியலில் இப்படிப்பட்ட இமாலய வளர்ச்சி! அப்படிப்பட்ட மோடியின்மீது உலகப் புகழ்பெற்ற பிபிசி செய்தி நிறுவனம் ‘India: The Modi Question’ என்ற குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டு நேரடியாக ஹிண்டன்புர்க் முறையில் தாக்கியிருக்கிறது.

இந்த ஆவணப்படம் குஜராத் கலவரத்திற்கும் அதன் அப்போதைய முதலமைச்சரான மோடிக்கும் உள்ளத் தொடர்பு குறித்து மிகவும் விரிவாகவும் ஆதாரப்பூர்வமாகவும் ஆவணப்படுத்தியுள்ளது. இரண்டு எபிசோடுகளும் மோடியின் 56 இஞ்ச் மார்புக்கு பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளன. குஜராத் கோத்ரா இரயில் எரிப்பு தொடங்கி கலவரத்தின் ஊடாக நிகழ்த்தப்பட்ட தாக்குதலையும் மோடியின் அரசியல் வளர்ச்சியையும் அடிகோடிட்டு காட்டியுள்ளது. பெருந்தலைவர் என்ற மோடியின் பிம்பத்தை அறுபது நிமிடங்களில் சுக்குநூறாக்கியுள்ளது.

இந்த ஆவணப்படத்தில் ‘திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் முஸ்லீம்கள், வன்முறையால் கொல்லப்பட்டனர்; ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். தனிப்பட்ட வளர்ச்சிக்காகவும், அரசியல் இலாபத்துக்காகவும், குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி, இதையெல்லாம் தடுக்காமல் வேடிக்கை பார்த்தார்’ என்று முகத்தில் அறைந்தார்போல குற்றஞ்சாட்டுகிறது.

பிபிசியின் இந்த ஆவணப்படத்தை உடனடியாக மத்திய அரசு தடைசெய்து தன் எதிர்ப்பைத் தெரிவித்தது. சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்குவதற்கான உத்தரவை உடனடியாகப் பிறப்பித்தது. பல்கலைக்கழக மாணவர்கள், எதிர்க்கட்சிகள் என்று அனைவரும் தடைசெய்யப்பட்ட இந்த ஆவணப்படத்தை திரையிட்டு மகிழ்ந்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் மத்திய அரசு திண்டாடுகிறது.

ஒருபுறம் அதானி குழுமத்தின் வீழ்ச்சி, மறுபுறம் மோடி பிம்பத்தின் வீழ்ச்சி என்று பாஜக தலைமையும் நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமையும் இருமுனைத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. தேசியம் என்ற ஒற்றைப் புள்ளியில், தேசப்பக்தி என்று போர்வைக்குள் அதானியும் மோடியும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள முற்படுகின்றனர். உண்மையை உரக்கச் சொன்ன ஹிண்டன்புர்க்கும் பிபிசியும் தேசவிரோத சக்திகளாக சித்தரிக்கப்படுகின்றன. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமான தேசப்பக்திக்குள் இவர்கள் அடைக்கலம் தேடுகின்றனர்.

ஊதாரி மைந்தனின் பாவ அறிக்கைப் போல நரேந்திர மோடியும் அதானியும் ஒருசேர புலம்புகின்றனர். அதானி, “இந்தியா, இந்திய நிறுவனங்களின் சுதந்திரம், ஒருமைப்பாடு, மற்றும் தரம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக் கதை மற்றும் இலட்சியம் ஆகியவற்றின்மீதான திட்டமிடப்பட்ட தாக்குதல்” என்று புலம்புகிறார். பிரதமர் மோடி அவர்களோ, “நாட்டில் மக்களிடையே வேறுபாடுகளை விதைத்து பிளவுகளை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்கிறார்கள்” என்று புலம்புகிறார். தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் என்றதும் “உண்மை தெரியவேண்டும்; உண்மையை இந்தப் படம் காட்டியிருக்கிறது” என்று சான்றளித்த பிரதமர் இங்கே வாய்மூடி மௌனம் காக்கிறார்.

உண்மை ஒருபோதும் தோற்காது. வாய்மையே வெல்லும்! சத்திய மேவ ஜெயதே! இது இந்திய இலட்சினைக்கும் பொருந்தும். அதானிக்கும் மோடிக்கும் பொருந்தும். காணாமல் போன ஊதாரி மகன்கள் உண்மையை உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை. ஊதாரி மகன்கள் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.

காத்திருப்போம்! வாய்மை நிச்சயம் வெல்லும்!