திருப்பலி முன்னுரை
இன்று நாம் பொதுக்காலத்தின் ஆறாவது ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து திருச்சட்டங்களையும், இறைவாக்குகளையும் அழிப்பதற்காக அல்ல; நிறைவேற்றுவதற்காகவே வந்திருக்கிறேன் என்று கூறுகிறார். பரிசேயர்களும், சதுசேயர்களும், மறைநூல் அறிஞர்களும், இவன் தன்னையே கடவுளின் மகன் என்று சொல்லிக்கொள்கிறான், தன்னையே அரசன் என்று சொல்லிக்கொள்ளுகிறான், எருசலேம் ஆலயத்தை இடித்து விட்டு மூன்றே நாட்களில் கட்டுவதாக சொல்லுகிறான் என பல குற்றச்சாட்டுகளை ஆண்டவர் இயேசுவுக்கு எதிராக வைத்தார்கள். ஏனெனில், அதுவரை இந்த யூதர்கள் பின்பற்றி வந்த சட்ட திட்டங்களை ஆண்டவர் இயேசு புரட்டிப் போட்டதால், அவர் மீது இத்தகைய விமர்சனங்களை முன் வைத்தார்கள். ஒரு வகையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மோசே வழிதரப்பட்ட சட்டங்களை மாற்றுகிறாரா என்ற எண்ணம் நமக்கும் கூட ஏற்படலாம். ஆனால், உண்மையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, ஆதாம் தொடங்கி திருமுழுக்கு யோவான் வரை வழங்கப்பட்ட இறைவாக்குகளை, இறைச்சட்டங்களை நிறைவேற்றினார். நான் உங்களுக்கு ஒரு மீட்பரை கொடுப்பேன், அவர் உங்களை பாவங்களிலிருந்து விடுவிப்பார் என்ற தந்தை கடவுளின் வாக்குறுதியை நிறைவேற்றுவது ஆண்டவர் இயேசுவின் முதன்மையான கடமையாய் இருந்தது. இறைவனின் இத்திட்டம் நிறைவேறவே இறைவாக்குகளும், சட்டங்களும் தரப்பட்டன. ஆனால், இம்மக்கள் சட்டங்களை பிடித்துக்கொண்டு இறை திட்டத்தை மறந்தார்கள். எனவேதான் ஆண்டவர் இயேசு இறைத்திட்டத்திற்கு தடையாய் இருந்த சட்டங்களைப் புரட்டி போட்டு, இறைத்திட்டத்தை முழுமை பெறச்செய்யும் அன்பு சட்டங்களை தருகிறார். அந்த அன்பு சட்டங்களைக் கடைப்பிடித்து, நாமும் முழுமையை நோக்கி சென்றிட இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை
ஆண்டவர் நமக்கு முன்பாக நீரையும், நெருப்பையும் வைத்திருக்கிறார். வாழ்வையும், சாவையும் வைத்திருக்கிறார். ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்ப்படிகிறபோது, நாம் வாழ்வையும், கீழ்ப்படியா விட்டால் சாவையும் பெறுவோம் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
மனிதகுலம் மேன்மை பெற வேண்டும் என்பது கடவுளின் திட்டம். இத்திட்டத்தை மனிதர்களாகிய நாம் அறிந்து கொள்ள தவறி விட்டோம். எனவேதான், ஆண்டவரை சிலுவையில் அறைந்தோம் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. வாழ்வோரின் தந்தையே! உமது திரு அவையை வழிநடத்தும் உம் திருப்பணியாளர்கள், உம் திருமகனைப் போல இறைத்திட்டங்களை செயல்படுத்தி, உமது மந்தைகளுக்கும் இவ்வுலகிற்கும் வாழ்வளிக்கும் பணியில் ஈடுபட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அமைதியை அருள்பவரே! எம் இந்திய தாய் திருநாட்டை ஆட்சி செய்யும் தலைவர்கள், நாட்டில் நிலவும் வன்முறைகள், குழப்பங்களுக்கான அடிப்படை காரணங்களை அறிந்து, அவற்றை நீக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. அன்பை பொழிபவரே! எங்கள் குடும்பங்களில், எங்கள் சகோதர, சகோதரிகளோடு சினம் கொள்ளாமல், வெறுப்பு கொள்ளாமல், ஒருவரை ஒருவரை அன்பு செய்து வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. அனைத்தையும் படைத்தவரே! எங்கள் குடும்பங்களிலும், பங்கிலும், சமுதாயத்திலும், தாயாக, தாரமாக, தமக்கையாக எங்களோடு வாழும், எம் பெண்களின் நலன்களில் நாங்கள் அக்கறைகொண்டு வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. நீதியின் கடவுளே! கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே நாங்கள் வாழும் இடங்களில் வன்முறைகளுக்கு ஆளானாலும், உம் திருமகன் கொண்டு வந்த அன்பை, அமைதியை பிறருக்கு தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.