திருந்தந்தையின் தென்சூடான் முதல் நாள் பயண நிகழ்வுகள்
தென்சூடானின் ஜூபாவை பிப்ரவரி 3ஆம் தேதி உள்ளூர் நேரம் பிற்பகல் 2.45 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் மாலை 6.15 மணிக்கு வந்தடைந்த திருத்தந்தை அரச மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். தென்சூடான் அரசுத்தலைவர், சால்வா கீர் மற்றும் ஏனைய அரசு அதிகாரிகள், ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரீன்ஷீல்ட்ஸ், கேன்டர்பரி ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி, ஜூபா உயர்மறைமாவட்ட ஆயர்கள், மற்றும் பலர் திருத்தந்தையை வரவேற்றனர். தென்சூடான் சிறார் இருவர் பாரம்பரிய உடையுடன் திருத்தந்தைக்கு மலர்களைக் கொடுத்து வரவேற்றனர். அதன் பின் அமைதியின் சின்னமாம் புறா திருத்தந்தையின் கைகளில் கொடுக்கப்பட்டு வானில் பறக்கவிடப்பட்டது.
அதன்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 5 கி. மீட்டர் தொலைவில் உள்ள அரசுத்தலைவர் மாளிகைக்குக் காரில் பயணமானார். உள்ளூர் நேரம் பிற்பகல் 3.30 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் மாலை 7.00 மணிக்கு அரசுத்தலைவர் மாளிகையை வந்தடைந்த திருத்தந்தை அரசுத்தலைவரால் வரவேற்கப்பட்டார். அதன் பின் திருத்தந்தைக்கு அரசு அதிகாரிகள், தலத்திருஅவை தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அறிமுகப்படுத்திவைக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து அரசுத்தலைவரின் குடும்ப உறுப்பினர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
அரசுத்துணைத் தலைவர், திருப்பீடச் செயலர், கிறிஸ்தவ ஒற்றுமையை மேம்படுத்தும் பணித்துறையின் தலைவர், மாநிலங்களுடனான உறவுகளுக்கான செயலர், தென்சூடான் திருப்பீடத்தூதரகத்தார், கேன்டர்பரி பேராயர் மற்றும் ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபையின் பொதுச்செயலாளர். ஆகியோரைச் சந்தித்து திருத்தந்தை பிரான்சிஸ் உரையாடினார்.
தனது நீண்ட கால ஆசையான தென் சூடான் நாட்டிற்கு வருகை தந்து அரசுத்தலைவர்களைச் சந்தித்து உரையாற்றி, தென்சூடானில் முதல் நாளினையும் 40 வது திருத்தூதுப் பயணத்தின் நான்காம் நாளையும் திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவு செய்தார்.