Namvazhvu
ஜூபா புனித தெரேசா பேராலயம் திருத்தந்தையின் தென்சூடான் பயணத்தின் இறுதிநாள்கள்
Thursday, 09 Feb 2023 06:52 am
Namvazhvu

Namvazhvu

பிப்ரவரி 4ஆம் தேதி காலை தென்சூடானின் ஆயர்கள், அருள்பணியாளார்கள், அருள்சகோதரிகள், திருத்தொண்டர்கள் மற்றும் அருள்பணித்துவ மாணவர்களை ஜூபா புனித தெரேசா பேராலயத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலையில் தென்சூடானின் புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர்க்கான சந்திப்பு, கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு ஆகியவற்றிலும் திருத்தந்தை கலந்து கொண்டார்.

பிப்ரவரி 4ஆம் தேதி சனிக்கிழமை, உள்ளூர் நேரம் 4.15மணிக்கு திருப்பீடத்தூதரகத்தில் இருந்து 2 கி. மீட்டர் பயணம் செய்து மாலை 4.30 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 8.00 மணிக்கு தென்சூடானின் சுதந்திர மண்டபத்தை வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு கூடியிருந்த ஏறக்குறைய 2500க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோரை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென்சூடானின் இடம்பெயர்ந்த மக்களாகிய அவர்களைத் தங்கள் நிலத்தின் மறுபிறப்பின் விதைகள் என்றழைத்தார்.

ஜூபாவின் சுதந்திர மண்டபம் "ஜான் கராங்" கல்லறைக்கு அடுத்ததாகவும், தெற்கில் நாயகுருன் கலாச்சார மையத்தையும் கொண்டுள்ளது. தென்சூடான் நாடு சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டதை அடுத்து 2011 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஏறக்குறைய 2,000 பேர் அமரும் அளவுக்குக் கொள்ளளவு கொண்ட இம்மண்டபம் (NTLA) இடைநிலை தேசிய சட்டமன்றத்திற்கான சந்திப்பு அறையாகவும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் மாநாடுகளை நடத்தும் இடமாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இவ்விடத்தில் ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரீன்ஷீல்ட்ஸ், கேன்டர்பரி  ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி, ஆகியோருடன் புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் முகாம்களில் வாழும் மக்கள் ஏறக்குறைய 2,500 பேரை சந்தித்து மகிழ்ந்தார்.

IDP முகாம் (உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்களுக்கான முகாம்).

2013 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் ஏற்பட்ட பெரிய அளவிலான மோதல்கள் மற்றும் வன்முறைகள், பாதுகாப்புத் தேடி மக்களைத் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வழிவகுத்தது. தென்சூடானில் உள்ள ஐக்கிய நாடுகளின் பணியான UNMISS என்னும் தளங்களுக்கு அருகில் பலர் தங்களுக்கான தங்குமிடம் கண்டு குடியேறினர். ஜூபா, மெலூட், மௌ, போர், பென்டியூ மற்றும் மலகல், உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்சூடான் மக்கள் PoC என்னும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கான அமைப்புக்களால் வரவேற்கப்பட்டனர். UNMISS பின்னர் படிப்படியாக சில தளங்களை அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் இடப்பெயர்வு முகாம்களுக்கு மாற்றியது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்த முகாம்களில், மோசமான வாழ்க்கை நிலைமை, அதிக அளவிளான எண்ணிக்கை, குற்றங்கள், அடிப்படைத் தேவைகளின்மை, பொறுப்பற்ற பதிலளிப்புகள் போன்றவைகள் தொடர்பான பல பிரச்சினைகள் இருந்தபோதிலும், அதிகாரிகள் இம்மக்களுக்குத் தொடர் பாதுகாப்பை வழங்கியுள்ளனர். ஜனவரி 2021ஆம் ஆண்டில் ஜூபாவில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் 31,000 ஆக இருந்த மக்கள் தொகை ஜனவரி 2022ஆம் ஆண்டு 33,000 ஆக உயர்ந்துள்ளது.

தென்சூடானின் இடம்பெயர்ந்த மக்கள் திருத்தந்தையை சுதந்திர மண்டபத்தில் வரவேற்றனர். தலைநகர் ஜூபாவிற்கு அருகிலுள்ள முகாம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் வந்திருந்த அவர்கள், திருத்தந்தையின் இவ்வருகைக்காக பல நாட்கள் காத்திருந்தவர்கள். தங்களது மகிழ்வை   நடனம் மற்றும் பாடல்களின் வழியாக வெளிப்படுத்தினார்கள். மிகவும் எளியவர்களான அம்மக்கள் தங்களிடம் இருந்த சிறந்த ஆடை ஆபரணங்களை அணிந்து, மகிழ்வுடன் திருத்தந்தையை வரவேற்றனர். இத்தகைய மக்களை சந்திப்பதற்காக வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னுடைய வார்த்தைகளால் அவர்களை அரவணைத்தார். வன்முறை வெறுப்பு ஆகியவற்றால் அழிக்கப்பட்டு நாட்டில் பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டவர்களின் கண்களைப் பார்த்து கைகுலுக்கினார்.

ஏறக்குறைய 2,500  புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோரைக் கொண்டிருந்த சுதந்திர மண்டபத்தில் அனைவரின் கண்களும் திருத்தந்தையை நோக்கியே இருந்தன. தங்களுக்காக குரல் கொடுக்க வந்திருக்கிறவர் திருத்தந்தை என்று எண்ணி மகிழ்ந்த அவர்கள் மகிழ்வுடன் பாடல்கள் பாடினர். பாடல்களுடன் ஆரம்பமான இக்கூட்டமானது ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைப்பாளர் கிரீன்ஷீல்டு அவர்களின் தொடக்க செபத்துடன் ஆரம்பமானது. ,  முகாம்களில் இருக்கும் மக்களின் குழுக்கள் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்ட பின்னர், இடம்பெயர்ந்த முகாம்கள் பற்றி எடுத்துரைக்கும் காணொளிக்காட்சி ஒன்று இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து பெனிட்டு, மலக்கல், ஜூபா போன்ற இடங்களின் முகாம்களில் உள்ள  சிறார் தங்களது அனுபவத்தைத் திருத்தந்தையுடன் பகிர்ந்து கொண்டனர். அதன்பின் திருத்தந்தை அவர்களுக்கு இத்தாலியத்தில் உரையாற்றினார் மக்களுக்கு அது மொழியாக்கம் செய்யப்பட்டது. "எல்லா மோதல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவும், அமைதி செயல்முறையை தீவிரமாக மீண்டும் தொடங்கவும், வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களை மீண்டும் மாண்போடு வாழ வைக்க வேண்டும் என்று உலக மக்களுக்கான தனது வேண்டுகோளையும் விண்ணப்பத்தை வெளியிட்டார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் இன்னும் துன்பத்தில் உள்ள இம்மக்கள் தொகையை விட்டுவிடாதீர்கள் இந்நாட்டிற்கு உதவுவோம், வெறுப்பையும் பழிவாங்கலையும் வெல்லும் நம்பிக்கை உடையவர்களான இடம்பெயர்ந்த மக்களை விட்டுவிடவேண்டாம் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை, நான் உங்களுடன் இருக்கிறேன்உங்களுக்காக நான் வருந்துகிறேன் என்று கூறி அவர்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

இறுதியாக கேன்டர்பரி ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி, அவர்கள் செபமும் அதனைத்தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ், பேராயர் ஜஸ்டின் வெல்பி, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரீன்ஷீல்ட்ஸ் ஆகிய மூன்று  சமூகத்தலைவர்களின் இறுதி ஆசீரும் பாரம்பரிய நடனத்துடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது