மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களே!
தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவையின் சார்பாக வாழ்த்துக்களும் வணக்கங்களும்!
தங்களது சிறப்பான ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்காக தாங்கள் ஆற்றி வரும் அளப்பரிய பணிகளுக்காக முதலில் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமீப காலமாக “கட்டாய மதமாற்றம் நடைபெறுகிறது” என்ற பெயரில் சிறுபான்மை மக்களின் மத சுதந்திரத்தைப் பறிக்கும் முயற்சிகள் நாடெங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள், திரு. அஸ்வினி குமார் உபாத்யாயா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கும் ஒன்றாகும். மனுதாரர் தமது மனுவில் தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் நடந்த எதிர்பாராத நிகழ்வையும் மற்றும் நாடெங்கும் உள்ள ஒரு சில கிறித்தவ பள்ளிகூடங்களில் நடந்த சில அசம்பாவிதங்களையும் குறிப்பிட்டு கிறித்தவ கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் நிகழ்வதாக சித்தரித்திருப்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.
உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் தமிழ்நாட்டு அரசின் மதசார்பின்மை நிலைபாட்டையும் அனைவரது மதசுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் தாங்கள் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. வில்சன் அவர்கள் மூலம் தெள்ள தெளிவாக எடுத்துரைத்து வருகிறீர்கள் என்பதை நாளிதழ்கள் மூலம் அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். சிறுபான்மை மக்களின் மதச் சுதந்திரத்தையும், நாட்டின் அரசியலமைப்பையும் குறிப்பாக மதச்சார்பின்மையையும் நிலைநாட்ட தாங்கள் குரல் கொடுத்து வருவது எங்களுக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கிறது.
கத்தோலிக்க கிறித்தவத் திரு அவை கட்டாய மதமாற்றத்தை ஒருபோதும் ஆதரிப்பதில்லை. கத்தோலிக்கத் திரு அவையின் சட்டத்தொகுப்பு சட்ட எண். 748 உட்பிரிவு 2-ம், “மனிதர்களை அவர்களுடைய மனச்சான்றுக்கு எதிராகக் கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்கும்படி எவரையும் ஒருபோதும் கட்டாயப்படுத்தக்கூடாது” என்று கூறுகிறது. நாங்களும் இச்சட்டத்தைப் பின்பற்றிதான் தமிழ்நாட்டிலும் மற்றும் இந்தியா முழுவதிலும் ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக அளப்பரிய சேவைகள் செய்து வருகிறோம். கிறித்தவ கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற சேவை நிறுவனங்களின் தன்னலமற்ற அளப்பரிய சேவையை அறிந்துள்ள தாங்கள் எங்களது உரிமைகளுக்காக உச்ச நீதிமன்றத்தில் குரல் கொடுத்திருப்பதற்காக தங்களைப் பாராட்டி நன்றி கூறுகிறேன்.
கடந்த 2002 ஆம் ஆண்டு மறைந்த மேனாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் அப்போதைய அரசு தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை எங்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே கொண்டு வந்தது. ஆனால், சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக என்றென்றும் இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்ததால் 2004 ஆம் ஆண்டு செல்வி ஜெயலலிதா அவர்களே அந்தச் சட்டத்தை இரத்து செய்ய நேரிட்டது. முத்தமிழ் அறிஞர் அவர்களின் வழியில் சிறப்பான ஆட்சி செய்து வரும் தாங்கள், அவர்களைப் போன்றே சிறுபான்மை மக்களின் பாதுகாவலராகச் செயல்பட்டு வருவது மதச் சார்பின்மையை ஆதரித்து வரும் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியை தருகிறது. இந்த வகையில் பிற மாநிலங்களுக்கும் தாங்கள் முன்னுதாரணமாக இருந்து வருகிறீர்கள்.
தங்களது வழிகாட்டுதலில் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் இறுதி வரை தமிழக அரசின் நிலைபாட்டை நிலைநிறுத்திடும்படியும் அதன் மூலம் மதசார்பின்மையைக் காத்திடும்படியும் அன்புடன் வேண்டுகிறேன். தங்களது பெரும் முயற்சியால் விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை அனைத்து பேராயர்கள், ஆயர்கள் மற்றும் கிறித்தவ மக்கள் சார்பாக நன்றி கூறுகிறேன்.