Namvazhvu
ஞாயிறு – 19.02.2023 ஆண்டின் பொதுக்காலம் 7 ஆம் ஞாயிறு லேவி19:1-2, 17-18,1கொரி 3:16-23, மத் 5:36-48
Wednesday, 15 Feb 2023 12:38 pm
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக்காலத்தின் ஏழாம் ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். இன்று, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நம்மை அன்பு செய்பவரையே, நாம் அன்பு செய்யாமல், அதையும் கடந்து நம்மை வெறுப்போரையும் அன்பு செய்ய அழைப்பு விடுக்கிறார். ஒருவர் உனது வலது கண்ணுக்கு தீங்கு விளைத்தால், நீயும் அவரது வலது கண்ணுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்க வேண்டும். ஒருவர் உனது முன் பல்லை உடைத்தால், நீயும் அவரது முன் பல்லை மட்டுமே உடைக்க வேண்டும் என்ற சட்டத்தை, மோசே இஸ்ரயேல் மக்களுக்கு அளித்திருந்தார். எதற்கு இவ்வளவு கடினமான சட்டத்தை மோசே மக்களுக்கு அளித்திருக்க வேண்டும் என்ற கேள்வி, கண்டிப்பாக நமக்குள் எழும். இஸ்ரயேல் மக்கள் நாடோடிகளாக திரிந்தவர்கள், கரடு முரடானவர்கள், அடிமைகளாய் இருந்தவர்கள். இதுபோன்ற காரணங்களால் ஓர் ஒழுக்கமான வாழ்க்கை நெறியை பின்பற்றுவது என்பது, இவர்களிடையே கடினமான ஒன்றாக இருந்தது. ஒரு வன்முறையில், ஒருவர் மற்றொருவரின் உடலின் உறுப்பிற்கு ஏதாவது ஒரு தீங்கு விளைவித்து விட்டால், அந்த வன்முறை, கட்டுக்கடங்கா கோபத்தின் காரணமாக கொலையில் முடியும். எனவே, இதுபோன்ற சண்டை சச்சரவுகளால் உயிரிழப்பு ஏற்படுவதைவிட, உடல் உறுப்புக்களை இழப்பதே மேல் என்ற எண்ணத்தோடுதான் யாரும், எவரின் உயிரையும் எடுக்கக்கூடாது. மாறாக, தாக்கப்பட்ட உடலின் பாகத்தை மட்டுமே திருப்பி தாக்கவேண்டும் என்ற சட்டத்தை மோசே இங்கு வழங்குகிறார். இப்போது ஆண்டவர் இயேசு வருகிறார். கொலைக்கு காரணம் கோபம் என்றால், அந்த கோபத்தை விட்டொழிக்க அறிவுறுத்துகிறார். கோபத்தின் காரணமாக பிறர், நம் மீது வெறுப்பை விதைத்தாலும், அவர்களையும் அன்பு செய்ய அறிவுறுத்துகிறார். நாம் இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறியதுபோல, பகைவரை அன்பு செய்கிறோமா அல்லது பழி தீர்க்கிறோமா என்று சிந்தித்தவர்களாய் இஞ்ஞாயிறு திருப்பலி கொண்டாட்டத்தில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

உங்கள் தந்தைக் கடவுள் தூயவராய் இருப்பது போல, நீங்களும் தூயவராய் இருங்கள். அன்பு செய்யுங்கள்எவரையும் பழி தீர்க்காதீர்கள் என்று மோசே வழியாக, இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு உரைப்பதை இம்முதல் வாசகத்தில் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நாம் அனைவரும் கடவுளின் கோயில்கள். தீயசெயல்களால் கடவுளின் கோயில்களை நாம் அழிக்கும்போது, கடவுளும் நம்மை அழித்துவிடுவார். எனவே, அன்புச் செயல்களால் ஆண்டவருக்குரியவர்களாய் மாறிடுவோம் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. எங்கள் அன்பு தந்தையே! உமது திரு அவையும், அதன் திருப்பணியாளர்களும், உம் திருமகனை போல அன்பு, மன்னிப்பு, இரக்கத்தினால் உம் மந்தையை வழிநடத்தி, விண்ணகம் சேர்த்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இரக்கமுள்ள தந்தையே! நாடுகளை ஆளும் தலைவர்கள், தங்கள் உள்ளத்தில் இருக்கும் வெறுப்பு, கோபம், குரோதம் போன்ற உணர்வுகளால், நாட்டில் வன்முறைகளை உருவாக்காமல், அன்பு, மன்னிப்பினால் அமைதியை உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. மன்னிப்பின் தந்தையே! எங்கள் பங்குகளிலும், ஊர்களிலும் எங்கள் விரோத போக்கினால், நாங்கள் பிறரை எதிரிகளாக கருதாமல், அனைவரையும் மன்னித்து, அன்பு செய்து வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் பரம தந்தையே! உம் திருமகன் கற்பித்த அன்பு, மன்னிப்பு, இரக்கம் இவற்றின் வழியாக மத வன்முறைகள், குழப்பங்கள், கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நாங்கள் அனைவரும் ஒன்றித்து வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் வானகத் தந்தையே! வன்முறையாலும், போர்களாலும், அனாதைகளாக, அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு இரக்கத்தையும், அன்பையும் தந்திடும் உள்ளங்களை நீர் அறிமுகப்படுத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.