திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தந்தையாக தலைமைத்துவப் பணியேற்று பத்தாமாண்டு நிறைவு வருகின்ற மார்ச் மாதம் 13 ஆம் தேதி சிறப்பிக்கப்பட உள்ள வேளையில் உலகளவில் திருத்தந்தைக்காக செபிக்க இணையதள பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் பத்தாமாண்டு தலைமைத்துவ பணி நிறைவிற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் பிப்ரவரி 13 திங்கள் கிழமை இணையவழியில் திருத்தந்தைக்காக செபிக்க செவிமடுக்கும் திருஅவை, டிஜிட்டல் சினோட் என்னும் இணையவழி ஒருங்கிணைந்த பயணம் வழியாகத் தொடங்கப்பட்டது.
https://www.decimus-annus.org/ வத்திக்கான் இணையதள பக்கத்தில் திருத்தந்தைக்காக நாம் செபிக்க இருக்கும் அருள் நிறைந்த மரியே வாழ்க என்னும் செபத்தின் எண்ணிக்கையை நாம் வாழும் இடத்தை உலக வரைபடத்தில் மெழுகுதிரிகளால் அலங்கரித்து, நமது உடனிருப்பை தெரிவிக்கின்றனர். இதன் வழியாக உலக மக்கள் தங்களது செபங்களை திருத்தந்தைக்கு மெழுகுதிரி வடிவங்களாக அர்ப்பணித்து தங்களது நகர், ஊர், நாடு, கண்டம் அனைத்தையும் செப மெழுகுதிரிகளால் அலங்கரிக்கின்றனர்.
பிப்ரவரி 13 திங்கள் கிழமை தொடங்கப்பட்ட இவ்விணையதள சேவை மார்ச் மாதம் 13 ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும், இயேசு தனது திருஅவைக்கு வழங்கிய மிகப்பெரிய கொடையான திருத்தந்தைக்காக கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாக நாம் இருக்கவேண்டும் என்று பெட்ரினோ மறைப்பணி அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது
பெட்ரினோ மறைப்பணி அமைச்சகம் என்பது போஸ் துறவற நிறுவனத்தின் ஓர் அமைப்பாகும். பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களைச் சேர்ந்த துறவிகள் மற்றும் அருள்சகோதரிகளைக் கொண்ட குழுவாக, நற்செய்திக்குக் கீழ்ப்படிந்து, சகோதரத்துவ ஒற்றுமை மற்றும் துறவில் கடவுளைத் தேடுபவர்களாக வாழ்பவர்கள்.
திருத்தந்தையின் பத்தாமாண்டு நிறைவில் அவருக்காக செபிக்க நீங்களும் விரும்பினால் https://www.decimus-annus.org/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று நீங்கள் எத்தனை அருள் நிறைந்த மரியே செபத்தை செபிக்க உள்ளீர்கள் என்பதைப் பதிவு செய்யுங்கள். மெழுகுதிரிகளை ஏற்றி மகிழுங்கள்.