உக்ரேனிய மக்களின் கொடூரமான துயரங்களை விரைவில் முடிவுக்குக் கொண்டு வாருங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் விண்ணப்பித்தார்.
பிப்ரவரி 15, புதனன்று, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் நடைபெற்ற புதன் பொது மறைக்கல்வி உரைக்குப் பின்பு அங்குக் கூடியிருந்த திருப்பயணிகளிடம் இவ்வாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏறத்தாழ ஓராண்டிற்கு மேலாக போரின் துயரங்களை அனுபவித்து வரும் உக்ரைன் மக்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
உக்ரைனின் அன்பான மற்றும் துன்புறுத்தப்பட்ட மக்களை மறந்துவிடாதீர்கள் என்றும், அவர்கள் விரைவில் தங்கள் கொடூரமான துயரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நாம் இறைவேண்டல் செய்வோம் என்றும் திருப்பயணிகளிடம் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
ஆயுதங்களைக் கைவிடுமாறு கடந்த 12 மாதங்களாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுப்பி வரும் பல்வேறு வேண்டுகோள்களுடன் இதுவும் புதிய ஒன்றாக இணைந்துள்ளது. பிப்ரவரி 12, ஞாயிற்றுக்கிழமையன்று, தான் வழங்கிய மூவேளை செபவுரையின்போது, இறைவன் அமைதியின் பாதைகளைத் திறந்து, பொறுப்பில் உள்ளவர்களுக்கு அவற்றில் நடக்க துணிவைத் தந்தருள்வாராக என்று கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.