இணை பொறுப்பு, பங்கேற்பு மற்றும் ஒற்றுமை ஆகிய மூன்றும் உங்கள் நற்செய்திப் பணியின் தூண்கள் என்றும், இவைகள் ஆயர் மாமன்றத்தின் முக்கிய வார்தைகளான ஒற்றுமை, பங்கேற்பு, பணி ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
பிப்ரவரி 16, வியாழனன்று, கத்தோலிக்கத் திருஅவைக்குப் பொருளாதார ஆதரவை மேம்படுத்துவதற்காக உதவும் சேவை மாநாட்டின் பங்கேற்பாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் இருக்கும் அனைத்தும் பணிக்காகத்தான் என்றும் எடுத்துரைத்தார்.
நீங்கள் அழைக்கும் சவ்வெனியர் என்ற வார்த்தை இணை பொறுப்பு மற்றும் பங்கேற்பு ஆகிய இரண்டு வார்த்தைகளை உள்ளடக்கியுள்ளது என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவையே அனைத்து வலிமையையும் பொருத்தத்தையும் தக்கவைத்து, ஆதரவான மற்றும் ஒன்றுபட்ட திருஅவையை உருவாக்க உதவுகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
இணை பொறுப்பு
நாம் கிறிஸ்துவின் திருவுடலின் உறுப்புகளாக இருப்பது நம்மை இறைவனோடும், அதேவேளையில், ஒருவர் ஒருவரிடமிருந்தும் பிரிக்க முடியாத வகையில் ஒரு பிணைப்பை உண்டாக்குகிறது, இதுவே இணை பொறுப்பு என்றும், திருஅவையில், யாரும் வெறும் பார்வையாளராகவோ, அதைவிட மோசமாகவோ, அல்லது, ஒதுங்கி இருக்கவோ கூடாது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரும் ஒரு பெரிய குடும்பத்தின் சுறுசுறுப்பான உடல் உறுப்புகள் என்பதை உணர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பங்கேற்பு
இணை பொறுப்பு என்பது பங்கேற்பைக் குறிக்கிறது, அதாவது ஈடுபாடு என்பதை எடுத்துக்காட்டுகிறது. பங்கேற்பு என்பது ஒருவர் முன்முயற்சி எடுக்கவும், ஆபத்துக்களைச் சந்திக்கவும், துணிவுடன் நடக்கவும் தயாராக இருக்கவேண்டும் என்பதை காட்டுகிறது என்றும் விவரித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வழியில் மட்டுமே நாம் பயனுள்ள உடன்பிறந்த உறவு கொண்ட சமூகங்களை வளர்க்க முடியும் என்றும் கூறினார்.
ஒன்றிப்பு
இணை பொறுப்பும் பங்கேற்பும் ஒன்றிப்பைக் கட்டியெழுப்பவும் அதனை நிலைநிறுத்தவும் உதவுகிறது என்றும், இதனை அடிப்படையாகக் கொண்டே, ஒன்றிப்பு என்பது ஒருவரை பங்கேற்கவும் இணை பொறுப்பாக இருக்கவும் தூண்டுகிறது என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிப்பு இல்லாவிட்டால், செயல் நோக்கம் இழக்கப்பட்டு, அதிகாரத்துவம் வளர்ந்துவிடும் என்றும் எச்சரித்தார்.