Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் தொடக்க கால கிறிஸ்தவர்களின் மனநிலையைக் கொண்டிருங்கள்
Friday, 17 Feb 2023 06:14 am
Namvazhvu

Namvazhvu

கடவுளின் வார்த்தைக்குச் செவிமடுக்க மறுக்கும் இன்றைய உலகில் பல்வேறு சிரமங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் வழியாகத்தான் அவரின் வார்த்தை அறிவிக்கப்பட்டு, செவிமடுக்கப்பட்டு வாழ்வாக்கப்படுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

பிப்ரவரி 16,  வியாழனன்று, அனைத்துலக விவிலிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடக்க கால கிறிஸ்தவர்களின் மனநிலையைக் கொண்டிருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

திருத்தூதர் பணிகள் நூலில், இயேசுவின் உயிர்ப்பிற்குப் பிறகு கடவுளுடைய வார்த்தை பரவுவதை விவரிக்கிறது என்றும், பெந்தக்கோஸ்து நாளுக்குப் பிறகு, தூய ஆவியாரின் வல்லமை மற்றும் வழிகாட்டுதலுடன், திருத்தூதர்கள் அவரது உயிர்ப்பின் நற்செய்தியை அறிவித்து அவரின் மறைப்பொருளின் ஒளியில் திருவிவிலியத்தின் அர்த்தத்தை விளக்கி, தவறான மனப்போக்கில் அல்லது சுயநலத் தேவைகளுக்காக அதனைப் பயன்படுத்துவோரை எச்சரித்தனர் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய மனநிலையில் திருத்தூதரின் அடியொற்றி வாழ்வதற்கும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

தொடக்க கால புதிய திருஅவை இறைவார்த்தையால் வாழ்ந்தது, அதை அறிவித்தது, துன்புறுத்தல்களைச் சந்தித்தது, ஆனாலும் ஒரே குழுமமாக, ஒருமித்த மனநிலையில் அதன் இலக்கு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது என்றும், இந்நிலை உங்களிடத்திலும் சிறக்கட்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

நம் காலத்தில், தங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பல கிறிஸ்தவர்களைப் பற்றி நான் இப்போது நினைவு கூறுகின்றேன். இவர்கள் அனைவரும், தொடக்க கால கிறிஸ்தவர்களைப் போலவே, தாங்கள் பெற்ற இறைவார்த்தையைத் தங்களுடன் எடுத்துச் சென்று பல்வேறு இடங்களிலும் அதனை அறிவிக்கின்றனர் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் விவரித்தார்.

அன்பான சகோதரர் சகோதரிகளே, நற்செய்தி அறிவிப்பின் நீட்சி இன்றும் தொடர்கிறது, நீங்கள், உங்களின் செயல்பாடுகள் வழியாக, அதன் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்கிறீர்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு மொழிகளில் நூல்களை வெளியிடுவதன் வழியாகத் திருவிவிலியத்தை அறிவிப்பதும், அவற்றை வெவ்வேறு கண்டங்களுக்கு விநியோகிப்பதும் உங்களின் பாராட்டத்தக்கப் பணிகள் என்றும் அவர்களை வாழ்த்தினார்.