Namvazhvu
ஆந்திர மாநிலம் மறைந்த அருள்பணியாளரின் தாயார் உயர்நீதி மன்றத்தில் விசாரணைக் கோரி மனு
Friday, 17 Feb 2023 07:05 am
Namvazhvu

Namvazhvu

ஆந்திர மாநிலம் விஜயவாடா மறைமாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக சந்தேகிக்கப்படும் அருள்பணியாளர் மரணத்தை மீண்டும் விசாரிக்க ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

33 வயது நிரம்பிய அருள்பணியாளர் கோன்ட்ரு வேளாங்கண்ணி ராஜூ அவர்கள், விஜயவாடா மறைமாவட்டப் பேராலயத்தில் உதவிப் பங்குத்தந்தையாக பணியாற்றிவந்த நிலையில் அக்டோபர் 26 ஆம் தேதி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.  அவரது அம்மா கோன்ட்ரு ஸ்ருங்காரம் அவர்கள் மாநில அரசின் சிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.   இவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷேக் அமீனா ரஹாமணி இவ்விசாரணை பிப்ரவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.  மறைமாவட்டத் தரப்பு, இது தற்கொலை என்று சொல்லும் நிலையில், அருள்பணியாளர்தம் குடும்பத்தாரோ இது கொலை என்று சந்தேகிக்கின்றனர். 

அருள்பணியாளரின் 55 வயது தாய் ஸ்ருங்காரம் தற்கொலை செய்துகொள்ளும் ஒருவரின் வாயில் எப்படி துணி திணிக்கப்பட்டிருந்தது; அவர்தம் இரு கால்களும் தரையை தொடும்படி இருந்தது, அவர்தம் கால்களும் கைகளும் எப்படி கறுத்துப் போயிருந்தன  என்று கேள்விகளை எழுப்புகிறார்.  உடற்கூராய்வுக்கு எடுத்துச்செல்லப்பட்ட அவர்தம் உடல் வெறும் பதினைந்து நிமிடங்களில் திரும்ப ஒப்படைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.  அவர்தம் சொந்த ஊரான  கிருஷ்ணா மாவட்டம் இன்டுப்பள்ளியில் நடைபெற்ற அடக்கச் சடங்கில் ஆயர் ஜோசப் ராஜா ராவ் அவர்களும் பெரும்பாலான குருக்களும் கலந்து கொள்ள வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  மறைமாவட்ட நிர்வாகம் விஜயவாடாவில் அடக்கம் செய்ய விரும்பிய நிலையில் மறைந்த அருள்பணியாளர் குடும்பத்தினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.  உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கப்போகிறது என்பது இனி வரும் காலங்களில் தெரிய வரும்.