Namvazhvu
மார்ட்டின் கிரிஃபித்ஸ் மீட்புப்பணியிலிருந்து மனிதாபிமானப் பணிக்கு...
Friday, 17 Feb 2023 11:04 am
Namvazhvu

Namvazhvu

தேடுதல், மீட்புப்பணி ஆகியவற்றிலிருந்து மனிதாபிமான சூழ்நிலைக்கு மக்களின் கவனம் திருப்பப்படுகின்றது என்றும், மனிதாபிமானப் பணிகளுக்கான முயற்சிகள் போதுமானதாக இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம் என்றும் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 13 திங்கள்கிழமை சிரியா நிலநடுக்க மீட்புப்பணிகள் பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு அளித்துள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள  .நாவின் அவசரகால நிவாரணப்பணித்தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ், சிரியா மற்றும் துருக்கியில் இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டுபிடிப்பதற்கான மீட்புப்பணி குறைந்து வருவதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.

பயங்கர நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,000 ஆக உயர்ந்துள்ள நிலையில் கடுமையான குளிர் நிலைகள் உயிர்வாழ்வதற்கான நிலையை மேலும் குறைக்கின்றன என்றும், இரவில் வெப்பநிலை மைனஸ் 6 டிகிரி செல்சியஸாகக் குறைகின்றது என்றும் கிரிஃபித்ஸ் கூறியுள்ளார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1,58,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள கிரிஃபித்ஸ், சிரியாவில் நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவி வழங்குவது சவாலாக உள்ளது என்றும், சிரியாவுக்குள் உள்ள நான்கு எல்லைக் கடப்புகளில் ஒன்று மட்டுமே தற்போது திறக்கப்பட்டுள்ளது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

வடமேற்கு சிரியாவில் உள்ள மக்கள் தங்களைக் கைவிடப்பட்டவர்களாக உணர்கின்றார்கள் என்றும் இத்தோல்வியை முடிந்தவரை விரைவாக சரிசெய்து, அதிக கவனம் செலுத்துவது தங்களது கடமையாகும் என்றும் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.