Namvazhvu
முனைவர் ஜான் ஐப்னர் சிரியாவின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குங்கள்
Friday, 17 Feb 2023 11:15 am
Namvazhvu

Namvazhvu

சிரியா மீதான துறைசார் மற்றும் இரண்டாம் நிலை தடைகளை நீக்கவும், மறுசீரமைப்பு உதவிகள் உட்பட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவின் அனைத்து பகுதிகளுக்கும் நேரடி உதவிகளை அனுப்பவும் தாங்கள் வலியுறுத்த விரும்புவதாக  அனைத்துலக கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பின் தலைவர் முனைவர் ஜான் ஐப்னர் கூறியுள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவர் ஜோ பிடன் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள முனைவர் ஐப்னர் அவர்கள், சிரியாவின்மீதான தடைகளைத் தாங்கள் தொடர்வதற்குப் பதிலாக, அதன் நலன்களைக் கருத்தில் கொண்டு அதில் சில மாற்றங்களைக் கொண்டு வாருங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவராகப் பொறுப்பேற்ற தொடக்கத்தில் 90-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தூதரக அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பல்மதத் தலைவர்கள் எழுதி கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தில் சிரியாவிற்கு எதிரான துறைசார் பொருளாதாரத் தடைகளை முடிவுக்குக் கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டதையும் நினைவு கூருங்கள் என்றும் முனைவர் ஐப்னர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் அரசுத் தலைவராகப் பொறுப்பேற்றபோது கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த சிரியா மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்திருந்தது என்றும்மேலும் 65 விழுக்காடு முதல்  85 விழுக்காடு வரையிலான சிரியாவின் குடும்பங்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிவர்த்தி செய்ய இயலாத நிலையில் இருந்தன என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முனைவர் ஐப்னர், தற்போது 70 விழுக்காட்டு சிரியா மக்கள் உணவுப் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர் என்றும் விளக்கியுள்ளார் (ICN)