காயம்பட்டுக்கிடந்த அந்த வழிப்போக்கரை இளகிய மனமும் பரிவிரக்கமும் கொண்டு நெருங்கிய நல்ல சமாரியரின் உள்ளத்தைக் கொண்டிருங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.
பிப்ரவரி 20, திங்களன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இருந்தவர்களிடம் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்ல சமாரியரின் கனிந்த முகத்தில் உங்களைக் காண்கின்றேன் என்றும் கூறினார்.
நான் உங்களுக்கு பரிந்துரைக்க விரும்பும் முதல் காரியம் இளகிய மனம் என்பதுதான் என்றும், நான் உணர்ச்சியைப் பற்றி பேசவில்லை, மாறாக முன்பை விட இன்றைக்குத் தேவைப்படும் கடவுளின் அன்பின் ஒரு பண்பைப் பற்றி பேசுகிறேன் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
அலட்சியப் பண்பாடு மற்றும் புறக்கணிக்கும் கலாச்சாரம் ஆகியவற்றால் அடிக்கடி மாசுபடுத்தப்பட்ட இந்தச் சமூகத்தில், நம்பிக்கையாளர்களாகிய நாம் இளகிய மனம் கொண்டு வாழ்வதற்கு அழைக்கப்படுகிறோம் என்றும், அதாவது, கடவுள் என்னை நன்றாகக் கவனித்துக்கொள்வதுபோல நான் பிறரையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் வாழ்வதற்கு அழைக்கப்படுகிறோம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாம் ஒருபோதும் மறக்கக் கூடாத இரண்டாவது காரியம், ஆண்டவரும் மீட்பருமான இயேசுவால் நாம் அன்புகூரப்படுவது போன்று, நாமும் மற்றவர்களை உண்மையாக நேசிக்க வேண்டும் என்றும், நாம் மேலே உயர்வதற்கு கடவுள் எந்தளவுக்கு உதவினாரோ, அந்தளவுக்கு பிறர் வாழ்வில் உயர நாம் உதவ வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.