ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் ஆகிய மூன்றும் மிக முக்கியமானவை. இவை மூன்றும் ஜனநாயகத்தை வலிமைப்படுத்தும்; அது கடினத்தன்மை அடைகிறபோதெல்லாம் அதனை நெகிழ்வுத்தன்மைமிக்கதாக மாற்றும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மேற்கண்ட மூன்றின் - கருத்து, பத்திரிகை, மதம் - சுதந்திரமும் விளிம்பு நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. பாசிசத்தின் பிடியில்தான் இம்மூன்றின் குரல்வளையும் நசுக்கப்படும் அல்லது அறுக்கப்படும். ஏற்கனவே பத்திரிகை சுதந்திர உலகத் தரப் பட்டியலில் இந்தியா படுகேவலமான நிலையில் உள்ளதே இதற்குச் சான்று. 2021 ஆம் ஆண்டு 142 வது இடத்தில் இருந்த இந்தியா, 2022 ஆம் ஆண்டு 150 இடத்திற்கு பின்னேறியது. 2014-2020 வரை 135 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 35க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். என்டிடிவி, the wire.in, the scroll.in நியுஸ் கிளிக், தைனிக் பாஸ்கர் உள்ளிட்ட பத்திரிகைகள் தாக்குதலுக்கும் மிரட்டலுக்கும் உள்ளாகின. இந்தியாவில் உள்ள ஊடகம் ஒன்று கார்ப்பரேட் மயமாக்கப்பட்டுள்ளது அல்லது அரசு சார்புடையதாக உள்ளது. விரல் விட்டு எண்ணக்கூடிய ஊடகங்களே தற்சார்புடன் சுயமரியாதையுடன் இயங்குகின்றன.
கேள்வி என்றாலே பாஜகவினருக்கு பிடிப்பதில்லை. ஜனநாயக நாட்டில் கேள்வியே கேட்கக்கூடாது என்றுதான் பாஜகவினர் விரும்புகின்றனர். நாடாளுமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் பாஜக ஆளும் மாநிலங்களிலும் கேள்வி நேரம் என்றாலே அவர்களுக்கு ஜூரம் அடிக்க ஆரம்பிக்கிறது. பத்திரிகையாளர்களைச் சந்திக்காத பிரதமராக இருப்பதில்தான் மோடி பெருமைப்படுகிறார். தப்பித் தவறி பத்திரிகையாளர் மைக் நீட்டிவிட்டால் ஓ, மை காட்! என்று ஓடி ஒளிவதில் அவர் கில்லாடி. இந்தியா மோடி மீதான கேள்வி என்ற பிபிசி ஆவணப்படம் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மோடி – அமித்ஷா தலைமையிலான பாஜகவினர் மீளவில்லை. ஆவணப்படத்தின் தலைப்பிலேயே கேள்வி என்ற வார்த்தை உள்ளதால் என்னவோ அவர்களால் உறங்கமுடியவில்லை. ஜனவரி 21 ஆம் தேதி இந்த ஆவணப்படத்தை வெளியிட யூடியூப் டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடைவிதித்தனர். மீறி பல்கலைக்கழகங்களிலும் பொது இடங்களிலும் திரையிடப்பட்டது. சில மாநிலங்களில் பல்வேறு அமைப்புகள் அதனை மொழியாக்கம் செய்து திரையிட்டனர். இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா உச்ச நீதிமன்றத்தில் பிபிசிக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற மனு தாக்கல் செய்ய, உச்சநீதிமன்றமோ அம்மனுவைத் தள்ளுபடி செய்தது.
தனி சுதந்திரமிக்க அமைப்பான பிபிசி நிறுவனத்தின் இந்திய கிளைகள் அமைந்துள்ள மும்பை மற்றும் புது தில்லியில் மத்திய அரசின் வருமான வரித்துறை பிப்ரவரி 14-16 வரை மூன்று நாட்கள் சோதனை செய்துள்ளனர். எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்த வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்றன இப்போது பத்திரிகைகள்மீதும் ஏவப்பட்டுள்ளன. காங்கிரஸ், சிபிஎம், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா அமைப்பும் மோடி அரசின் இந்நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. நாடு முழுவதுமே அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது என்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு உண்மையாகிறது. பத்திரிகைகளின் கழுத்தில் கத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதானிகளும் அம்பானிகளும் மீடியாக்களை விலைக்கு வாங்கி கோலோச்சுகின்றனர். எஞ்சியிருக்கிற ஒரு சில ஊடகங்களும் அரசு சார்பாக செயல்பட மிரட்டப்படுகின்றன. பெரும்பாலான ஊடகங்கள் விலை பேச விட்டுவிட்டன. திரிசங்கு நிலையில்தான் ஜனநாயகத்தின் காவல் நாயான பத்திரிகைகள் உள்ளன.
ஆவணப்படம் வெளியான பிறகு மோடி அரசு மேற்கொண்ட உலகளாவிய ஊடகமான பிபிசி மீது மேற்கொண்ட வருமானவரி சோதனை என்ற பெயரிலான தாக்குதல் மோடி அரசின் சகிப்புத்தன்மையின்மையை வெளிக்காட்டுகிறது. ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு விமர்சனமும் எதிர்க்கருத்துகளும், மாற்றுச் சிந்தனைகளும் இன்றியமையாதவை. விமர்சனத்தை காயத்தின் மீது தடவப்பட்ட உப்பாகப் பார்ப்பதும் மருந்தாக ஏற்பதும் அவரவர் மனநிலையைப் பொறுத்தது. அறுதி பெரும்பான்மையில் வெற்றிப்பெற்றுவிட்ட காரணத்தினாலேயே எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என்று ஜனநாயக நாட்டில் கருதுவது பாசிசமே அன்றி வேறில்லை. ஊடகச் சுதந்திரமின்மையும் பாசிசத்தின் எச்சமேயன்றி வேறில்லை.
கௌரி லங்கேஷ், பன்சாரே, கல்புர்கி ஆகிய பத்திரிகையாளர்களின் இரத்தம் ஆபேலின் இரத்தத்தைப் போல இன்றும் ஜனநாயக நாட்டில் கூக்குரலிடுகிறது. ஹத்ராஸ் கொடூரக் கொலை வழக்குப் பற்றி விசாரிக்கச் சென்ற சித்திக் கப்பன் என்ற கேரள பத்திரிகையாளர் எந்தக் காரணமுமின்றி இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். பாஜக அரசை விமர்சித்த அல்லது விமர்சிக்க அனுமதித்த பெரும்பாலான தமிழக ஊடகவியலாளர்கள் பல்வேறு ஊடக நிறுவனங்களிடமிருந்து வெளியேற்றப்பட்டதும் வரலாறு.
அயல்நாட்டு ஊடகங்கள் மோடியைப் பாராட்டும்போது விஷ்வ குருவாக கொண்டாடும் பாஜகவினர், விமர்சிக்கும்போது அயல்நாட்டு சதி என்று குற்றஞ்சாட்டுகின்றனர். பாஜக மீது விமர்சனம் வைக்கப்படுகிறபோதெல்லாம் ஊடகங்கள் மீதான அரசியல் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. நியூஸ் கிளிக், நியூஸ் லாண்ட்ரி போன்ற செய்தி நிறுவனங்கள்மீதும் கடந்த காலத்தில் சர்வே என்ற பெயரில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டுள்ளது. தங்களைச் சுற்றி எப்போதும் ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கவே பாஜகவினர் முயல்கின்றனர். ஒரு வழிப்பாதையாக வாய்மூலம் தகவல்கள் தருவதற்கு விழைகின்றனர். தங்கள் காதுகளை அவர்கள் பயன்படுத்துவதேயில்லை. செவிமடுப்பதைவிட பேசுவதற்கு விரும்புகின்றனர். ஊடகங்களில் அன்றாடம் தலைப்புச் செய்திகளில் தாங்கள் மட்டுமே இடம்பெறும் வகையில் பார்த்துக்கொள்கின்றனர். தங்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் ஊடகங்களை மிரட்டுவார்கள் அல்லது தடைசெய்வார்கள். அல்லது கார்ப்பரேட் முதலாளிகளைக் கொண்டு விலைக்கு வாங்கி பயன்படுத்துவார்கள்.
பாசிசத்தின் நிழலில் ஆட்சி புரிவதையே பாஜக விரும்புகிறது போலும். பாஜகவினரைச் சுற்றி எப்போதும் ஒளிவட்டம் பாய்ச்சப்பட வேண்டும் என்றால் அந்த மீடியா ஒளிவெள்ளத்தின் உங்கள் கண்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதை மறந்துவிடாதீர்கள். கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, கத்தியால் அல்ல. ஆவணப்படம் வெளியானபிறகு தடைசெய்யாதிருந்தால் அது எல்லாரையும் சென்றடைந்திருக்காது. ஆவணப்படம் வெளியாவதற்கு முன்பே வருமான வரித்துறை சோதித்திருந்தால் இந்தியாவின் ஊடகச் சுதந்திரமின்மையை உலகறிந்திருக்காது. ராஜ தந்திரியாக தம்மைக் கருதிக்கொள்ளும் மோடியும் அவரது நண்பரான அமித் ஷாவும் உலக நாடுகளிடையே இந்தியாவிற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளனர். வாசுதேவ குடும்பத்தின் விஷ்வ குருவாக இருப்பதற்கு முன்பு தாய்த்திருநாட்டில் விஷ்வ குருவாக இருக்க வேண்டும். இந்தியாவில் ஜனநாயகத்தைக் குழித்தோண்டி புதைத்துவிட்டு, உலகத் தலைவராக, விஷ்வ குருவாக ஒருபோதும் வர இயலாது.
விஷ்வ குருவாக இருப்பதும் கோமாளி பரமார்த்த குருவாக இருப்பதும் மோடி மற்றும் அமித் ஷாவின் கைகளில்தான் உள்ளது. ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாக்காமல் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாது.