Namvazhvu
ஞாயிறு தோழன் – 26.02.2023 தவக்காலம் முதல் ஞாயிறு தொநூ 2:7-9, 3:1-7, உரோ 5:12-19, மத் 4:1-11
Friday, 24 Feb 2023 05:37 am
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை

நாம் தொடங்கியுள்ள தவக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று, நம் ஆண்டவர் இயேசு பாலைவனத்தில் சோதிக்கப்பட்ட நிகழ்வு நற்செய்தியாக முன்வைக்கப்படுகிறது. நம் ஆண்டவர் தம்மைத்தாமே இறையரசுப் பணிக்காக தகுந்த முறையில் தயாரிக்கும் பொருட்டு புடமிடப்படுவதற்கு முன்வருகிறார். நம் வாழ்வில் சோதனை, துன்பம், துயரம், வலி, வேதனை அனைத்தும் இயல்பானவைதான். ஆனால் சோதனையை வெல்வதில்தான் வாழ்க்கை வெற்றியின் சூட்சமும் அடங்கியிருக்கிறது. நம் ஆதிப்பெற்றோர் ஆதாமும் ஏவாளும் சோதிக்கப்பட்டனர்; தோற்றுப்போயினர். இஸ்ராயேல் மக்கள் பாலைவனத்தில் சோதிக்கப்பட்டனர்; பொற்கன்று செய்து தோற்றவர்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டில் அடியெடுத்து வைக்கவில்லை. பழைய ஏற்பாட்டில், மோசே, ஆரோன், யோசுவா, ஏலி, சாமுவேல், சவுல், தாவீது, சாலமோன், இறைவாக்கினர்கள் என்று அனைவருமே ஆண்டவரால் சோதிக்கப்பட்டனர்; புதிய ஏற்பாட்டில் நம் அன்னை மரியா, யோசேப்பு, ஆண்டவர் இயேசு, அழைக்கப்பட்ட பேதுரு, யோவான், யாக்கோபு உள்ளிட்ட திருத்தூதர்கள், பவுல், தொடக்கக்கால கிறிஸ்தவர்கள், கொரிந்து நகர் இறைமக்கள்.. என அனைவருமே சோதனைக்குள்ளாயினர். சோதனை என்பது தவிர்க்க இயலாதது. ஆனால், சோதனையில் நாம் யார் பக்கம் இருக்கிறோம் என்பதில் தான் வெற்றியடங்கியிருக்கிறது. நாம் ஆண்டவர் பக்கம் நின்றாலும், ஆண்டவர் நம் பக்கம் நின்றாலும் வெற்றி என்பது உறுதி. ஒவ்வொரு முறையில் எம்மை சோதனைக்குள் விழ விடாதேயும் என்று செபிக்கும் நாம், சோதனையில் தோல்வியடையாமல், வெற்றிப்பெற இத்திருப்பலியில் அருள்வரம் கேட்போம்.

முதல் வாசகம் தொநூ 2:7-9,3:1-7

தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம், சோதனைக்குள்ளான நம் ஆதிப்பெற்றோர் ஆதாம் - ஏவாள், எப்படி பாம்பின் சூழ்ச்சிக்கு பலியாகி, விலக்கப்பட்ட கனியைத் தின்று இறைவனை விட்டு விலகினர் என்பதை விவரிக்கிறது. நம் சோதனைகளை வெல்ல கவனமுடன் செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசகம் உரோ 5:12-19

புனித பவுலடியார் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் பாவத்தின் வழியாக உள் நுழைந்த சாவை, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் ஏற்புடைய செயலால் எப்படி நமக்கு வாழ்வளித்து பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழியச் செய்தார் என்று விவரிக்கிறது. சோதனைக்குள்ளாகாமல் கவனமுடன் செவிசாய்ப்போம்.

நம்பிக்கையாளர்கள் மன்றாட்டு

1. அன்பின் இறைவா! எம் தாய்த்திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ், எம் மறைமாவட்ட ஆயர்/பரிபாலகர் (பெயர்), அருள்பணியாளர்கள், துறவிகள் அனைவரும் தங்களுடைய அழைப்பின் மேன்மையை உணர்ந்து, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையின் நலன் காக்கும் ஆயர்நிலை மனநிலையுடன் உம்முடைய வழிகாட்டுதலின் படி எம் தலத்திரு அவையை வழிநடத்த இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கூட்டியக்கப் பாதையில் பயணிக்க ஒன்றிணைக்கப்பட்டுள்ள எம் தாய்த்திரு அவைக்காக மன்றாடுகிறோம். உலக ஆயர் மாமன்றத் தயாரிப்பிற்கான வழிமுறையில், கண்டங்கள் அளவிலான தயாரிப்புக் கூட்டங்கள் ஆங்காங்கே நடைபெறும் இவ்வேளையில், தலத் திரு அவையின் ஆயர்கள் தங்கள் பொறுப்புணர்வை உணர்ந்து, அகில உலகத் திரு அவையின் மறுமலர்ச்சிக்கு துணை நிற்கவும் உரிய திட்டங்களை வகுக்கவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அண்மையில் நடைபெற்ற கடுமையான நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தென் துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் வாழும் மக்களுக்கு போதிய நிவாரணம் கிடைக்கப் பெறவும், உற்றார், உறவினர்கள், பெற்றோர், குடும்ப நண்பர்களை நிலநடுக்கத்தில் பலி கொடுத்து, துயரத்தின் பிடியில் உழலும் மக்களுக்கு ஆறுதல் கிடைக்கப் பெறவும், இயற்கையின் கொடூரத் தாக்குதலிலின்று இம்மண்ணையும் மக்களையும் காக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. தேர்வுக்காலத்தில் நுழையும் இவ்வேளையில், இக்கல்வி ஆண்டில் கற்றப் பாடங்களை மீண்டும் ஒருமுறை கற்று, நன்கு புரிந்துகொண்டு, இறுதி கல்வித் தேர்வுக்கு எம் மாணவ மாணவியர் தயாராகவும், அவர்களைச் சோதனைக்குள்ளாக்கும் அனைத்து விதமான நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, போதுமான ஞாபக சக்தியுடன் புரிதலுடன் தேர்வுகளை அணுகி, வெற்றி பெறவும் வளமான எதிர்காலம் அமைந்திடவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.