கட்டின்மை போற்றுதல்
நல் வாழ்வு தரும் கட்டின்மை நோக்கி நம்மை அழைக்கிறது தவக்காலத்தின் முதல் ஞாயிறு.
இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 2:7-9, 3:1-7) விவிலியத்தின் முதல் பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் உருவான வரலாற்றின் பதிவே இப்பக்கங்கள். இரண்டு கதையாடல்கள் வழியாக மனித வாழ்வின் தொடக்கத்தை விளக்குகிறது விவிலியம். இவ்விரண்டு கதையாடல்களையும் ஒன்றுக்கொன்று அருகில் வைத்துப் பார்க்கும்போது, மனிதர்கள் என்றால் யார்? அவர்களுக்கும், கடவுளுக்கும் உள்ள உறவு என்ன? அவர்கள் தங்களுக்குள் கொண்டிருக்கும் உறவு நிலை என்ன? அவர்களுக்கும், இயற்கைக்கும் உள்ள தொடர்பு என்ன? போன்ற கேள்விகளுக்கு விடைகளை நாம் கண்டறிய முடியும்.
முதல் வாசகத்தின் முதல் பகுதி, படைப்பின் இரண்டாம் கதையாடல் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கடவுளின் படைப்புச் செயலின் முதற்கனியாக முதல் மக்களை முன்வைக்கிறது இது. மனிதர்கள் கடவுளின் மூச்சையே தங்களுக்குள் கொண்டிருக்கின்றனர். இதுவே, மனிதர்கள் கடவுள்மேல் கொண்டிருக்கும் சார்புநிலையின் அடையாளம். கடவுளின் மூச்சை இழப்பது என்பது, ஒருவரை இறக்கச் செய்யும். இச்சார்புநிலையின் மற்றொரு பக்கம் கடவுள் அவர்களுக்கு இட்ட நிபந்தனை அல்லது விதிமுறை. கடவுள் படைப்பில் சில வரையறைகளை நிர்ணயித்து, மனிதர்களின் நலனை முன்னிட்டும், ஒட்டுமொத்தப் படைப்பின் ஒழுங்கிற்காகவும், சிலவற்றைத் தடைசெய்கின்றார். நன்மை-தீமை அறியும் மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்று, முதல் மனிதர்களுக்குக் கட்டளையிடுகிறார் கடவுள். ஏனெனில், இத்தகைய அறிவை மனிதர்களால் கையாள முடியாது. மேலும், இது அவர்களை அழிப்பதோடு, கடவுளின் படைப்பில் தொய்வையும் ஏற்படுத்திவிடும்.
ஆனால், முதல் மனிதர்கள் கடவுளின் கட்டளையை மீறுகின்றனர். அவர்கள் கடவுள் தங்களுக்குத் தந்த கொடைகளை மறந்துவிட்டனர். கடவுள் கனியை விலக்கிவைத்ததை உரிமை மீறலாகப் பார்த்தனர். தாங்கள் உண்ணுமாறு கடவுள் கொடுத்த அனைத்து மரங்களையும், அவற்றின் கனிகளையும் மறந்துவிட்ட இவர்கள், விலக்கப்பட்ட கனியை நாட ஆரம்பிக்கின்றனர். தாங்கள் ஏற்கெனவே கடவுளின் சாயலில் இருக்கிறோம் என்பதை மறந்து, பாம்பின் சூழ்ச்சிக்கு இரையாகின்றனர். அவர்கள் தங்கள் கைகளை நீட்டி உண்ட அக்கனியால் முதலில் அவர்களின் கண்கள் திறக்கப்பட, தாங்கள் ஆடையின்றி - நிர்வாணமாக - இருப்பதை உணர்கின்றனர். அவர்களின் ஆடையற்ற நிலை அவர்களுடைய வலுவின்மையையும், நொறுங்கு நிலையையும் அடையாளப்படுத்துகிறது. அன்றிலிருந்து அதுவே அவர்களின் வாழ்க்கை அனுபவமாகவும் மாறிவிடுகிறது. விலக்கப்பட்ட கனியை உண்டதால் அவர்கள் கடவுளிடமிருந்தும், ஒருவர் மற்றவரிடமிருந்தும் அந்நியப்பட்டு நிற்கின்றனர்.
ஆக, அவர்களின் கீழ்ப்படியாமை அவர்களை இந்நிலைக்கு ஆளாக்குகிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 5:12-19), ஆதாம் - இயேசு, பாவம் - விடுதலை, குற்றம் - அருள்கொடை என்னும் முரண்களைப் பட்டியலிடுகின்ற பவுல், ஆதாமின் கீழ்ப்படியாமை பாவத்தைக் கொணர்ந்தது என்றும், இயேசுவின் கீழ்ப்படிதல் கடவுளுக்கு நம்மை ஏற்புடையவர் ஆக்கியதும் என்றும் நிறைவு செய்கின்றார்.
ஆக, கீழ்ப்படியாமையால் பிறழ்வுபட்ட உறவுநிலைகள் இயேசுவின் கீழ்ப்படிதலால் சரி செய்யப்படுகின்றன.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 4:1-11) இயேசு பாலைவனத்தில் சோதிக்கப்பட்ட நிகழ்வை நமக்குக் காட்டுகிறது. திருமுழுக்கு பெற்றவுடன் இயேசு அலகையால் சோதிக்கப்படுவதற்காக பாலை நிலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். திருமுழுக்கின்போது, அவர் ‘அன்பார்ந்த மகன்’ என்று அழைக்கப்பட்டார். பாலைவனத்தில் சோதிக்கிறவன் மூன்றுமுறை சோதித்தபோது, நம்பிக்கைக்கும், பிரமாணிக்கத்திற்கும் உரியவராக இருந்து, மகன் என்ற நிலையைக் காத்துக்கொள்கின்றார். இயேசுவின் பாலைநில அனுபவம் 40 நாட்கள் நீடிக்கின்றன.
நாற்பது என்ற எண் இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த பயணத்தைக் குறிக்கிறது. செங்கடலைக் கடந்த இஸ்ரயேல் மக்கள், மூன்று சோதனைகளுக்கு உள்ளாகின்றனர்: (அ) உணவு வேண்டி அவர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுத்தது (காண். விப 16) இயேசுவின் முதல் சோதனையில் எதிரொலிக்கிறது. (ஆ) கடவுள் நம்மோடு இருக்கிறாரா? என்று அவர்கள் கேட்ட கேள்வி (காண். விப 17) இரண்டாம் சோதனையில் தெரிகிறது. (இ) பொன்னாலான கன்றுக்குட்டியை அவர்கள் வணங்கியது (காண். விப 32) மூன்றாம் சோதனையில் எதிரொலிக்கிறது. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளின் அளப்பரிய செயல்களை எகிப்தில் கண்டாலும், அவரை நம்பவில்லை. ஆனால், இயேசுவோ இறுதிவரை நம்பிக்கைக்குரியவராகவும், கீழ்ப்படிபவராகவும் விளங்கினார்.
இயேசு யார் என்பதைத் தன் குழுமத்தாருக்கு அறிமுகம் செய்ய விழைகின்ற நற்செய்தியாளர்கள், ‘இயேசு அலகையையும், அதன் சோதனைகளையும் வென்றவர்’ என்று சோதனைகள் நிகழ்வு வழியாக அறிமுகம் செய்கின்றனர். சோதனைகள் நிகழ்வு இயேசுவை முதல் இஸ்ரயேலரோடு இணைக்கிறது (காண். ‘நாற்பது நாள்கள், மன்னா, அப்பம்,’ விப 16:15, ‘ஆண்டவரைச் சோதித்தல்,’ விப 17:1-7, ‘சிலைவழிபாடு,’ விப 32). இது இறைவனின் ஆட்சிக்கும், அலகையின் ஆட்சிக்கும் உள்ள முரண்பாட்டை விளக்குகிறது. சோதனைகள் நிகழ்வு இயேசுவை முதல் ஏற்பாட்டு இறைவாக்கு நூல்களின் நிறைவாக முன்வைக்கின்றன. இயேசு சோதனைகளை வெல்லும் நிகழ்வு பிற்காலச் சீடர்களுக்கு வாழ்க்கைப் பாடமாக இருக்கிறது.
கற்களை மாற்று!
சோதிக்கிறவன் அவரை அணுகி, “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றான். அவர் மறுமொழியாக, “‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல; மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’ (காண். இச 8:3) என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார் (காண். மத் 4:3-4). லூக்கா நற்செய்தியாளர், ‘மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை’ என்று மட்டும் பதிவிடுகின்றார் (காண்.லூக் 4:4).
நாற்பது நாட்கள் இரவும், பகலும் நோன்பிருக்கின்றார் இயேசு. நோன்பு என்பது, பசியை விரும்பி ஏற்கும் நிலை. உணவு, மனித வாழ்வின் கையறுநிலையைக் குறிக்கும் ஒரு குறியீடு. பசி, தாகம் என்னும் உணர்வுகள்தாம், நாம் மற்றவர்களைச் சார்ந்து நிற்கிறோம் என்பதை நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. இந்த இரண்டு உணர்வுகளின் நீட்சிகள்தாம் மற்ற எல்லா உணர்வுகளும்.
நம் ஒவ்வொருவரின் தனிநபர் வாழ்வுநிலையை உடல்சார், அறிவுசார், உறவுசார், ஆன்மீகம்சார் என்று நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். இவற்றில் ஒவ்வொரு நிலையிலும் நாம் பாலைநில அனுபவம் பெறுகின்றோம். பசி என்பது உடல்சார் பாலை, அறியாமை என்பது அறிவுசார் பாலை, தனிமை என்பது உறவுசார் பாலை, வெறுமை, உறுதியற்ற தன்மை, தவறான தெரிவுகள் போன்றவை ஆன்மீகம்சார் பாலை.
உடல்சார் பாலை என்னும் பசியை பாலைநிலத்தில் எதிர்கொள்கின்றார் இயேசு. ‘கற்கள் அப்பமாகும்படி கட்டளையிடும்’ என்னும் அலகையின் சொற்கள் மூன்று நிலைகளில் இயேசுவுக்கு ஈர்ப்பாக இருந்திருக்கும்: ஒன்று, அவர் பசியாக இருக்கிறார். இரண்டு, வல்ல செயல் செய்யும் ஆற்றலைச் சோதிப்பதற்கான ஒரு தளமாகப் பயன்படுத்தியிருக்கலாம். மூன்று, மெசியா என்பவர் மாற்றத்தைக் கொணர்பவர். இருப்பதை இல்லாமலும், இல்லாததை இருக்கவும், ஒன்றை மற்றொன்றாகவும் செய்கின்றவர்.
உறுதியற்ற ஒன்றை உறுதியாக்கிக்கொள்ளத் தூண்டுகிறது அலகை. பாலைவனத்தில் உள்ள கற்கள் எல்லாம் அப்பமாக மாறிவிட்டால், பசியைப் பற்றிய கவலையே தேவையிருக்காது. எங்கு திரும்பினாலும் அப்பமாக இருக்கும். விரும்பும் வரை உண்ணலாம். ஆனால், பசி தீர்ந்தவுடன் எஞ்சிய அப்பங்களால் பயன் ஒன்றுமில்லை. பசியில்லாத நபருக்கு ருசியான உணவும் சுமையே. மனிதர்களின் தேடல் என்பது வெறும் உணவுதான் என்றும், அந்த உணவுக்கான தேடலில் மனிதர்களை அமிழ்த்திவிட்டால், அவர்கள் வேறெதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் என்பதும், அலகையின் எண்ணமாக இருந்தது. ஆனால், மனிதர்களின் தேவை வெறும் உடல் சார்ந்தது அல்ல; மாறாக, ஆன்மீகம் சார்ந்தது என்றும், அவர்கள் வெறும் சதை அல்ல; மாறாக, ஆவிக்குரிய ஆன்மாவைக் கொண்டிருப்பவர்கள் என்றும் அலகைக்கு நினைவூட்டுகிறார் இயேசு.
மேலும், கற்களை அப்பமாக மாற்றுதல் என்பது தேவையானதை விடுத்து, தேவையற்றதன் மேல் கவனத்தைத் திருப்பும் சோதனையாகும். ஒருவேளை இயேசு கற்களை அப்பமாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தால், ‘காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்’ (காண். மாற் 1:15) என்று அறிவித்திருக்க இயலாது. பார்க்கின்ற அனைத்துக் கற்களையும் அப்பமாக்கும் பணியே அவருடைய முதன்மையான பணியாக இருந்திருக்கும்.
கற்கள் கற்களாகவும், அப்பம் அப்பமாகவும் இருக்கட்டுமே என்பது இயேசுவின் பதில்மொழியாக இருக்கிறது.
கடவுளைச் சோதி!
பின்னர் அலகை இயேசுவை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ‘நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ‘கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது (காண். திபா 91:12) என்று அலகை அவரிடம் சொன்னது. இயேசு அதனிடம், ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ எனவும் எழுதியுள்ளதே’ என்று சொன்னார் (மத் 4:5-6).
மத்தேயு நற்செய்தியாளர், ‘இரண்டாவது’ என முன்மொழியும் சோதனையை, லூக்கா நற்செய்தியாளர், ‘மூன்றாவது’ என எழுதுகின்றார். ‘கோவில்’ என்பது, மத்தேயு நற்செய்தியில் 17 முறை வருகின்றது. ‘கோவிலின் உயர்ந்த பகுதி’ என்பதை ‘கோபுரம்’ அல்லது ‘இறக்கை வடிவிலான நீட்சி அமைப்பு’ அல்லது ‘சிறிய கைப்பிடிச் சுவர்’ என்று புரிந்துகொள்ளலாம். ‘மெசியா வெளிப்படுத்தப்படும் நாளில் அவர் திருக்கோவிலின் கூரைமேல் நிற்பார்’ என்பது, ரபிக்களின் போதனையாக இருந்தது (காண். பெசிக்தா ரப்பாதி, 62 இ-ஈ). எருசலேம் ஆலயத்தின் திருத்தூயகத்திற்கு மேல் உள்ள பகுதி அல்லது ஆலயத்தின் முன்முகப்புக் கூரை, அல்லது கெதரோன் பள்ளத்தாக்கைப் பார்த்தவாறு அமைந்துள்ள வெளிப்புறச் சுவரின் கோபுரம் எனப் பலர் இந்த இடத்தை அடையாளம் காண்கின்றனர்.
மாயவித்தை செய்து, மக்களின் கவனத்தை ஈர்க்குமாறும், வல்ல செயல்கள் வழியாக கடவுளைச் சோதிக்குமாறும் தூண்டுகிறது அலகை. ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ (காண். இச 4:16) என்னும் மோசேயின் வார்த்தைகளைச் சொல்லி, அலகையின் சோதனையை விலக்குகிறார் இயேசு.
பழைய ஏற்பாட்டில், பாலைவனத்தில் இரபிதிம் பகுதியில் பாளையம் இறங்கிய போது, மக்கள் குடிக்க அங்குத் தண்ணீர் இல்லை. மக்கள் மோசேயிடம் வாதாடி, ‘குடிக்க எங்களுக்குத் தண்ணீர் கொடும்!’ என்று கேட்கின்றனர். ஆண்டவரின் அறிவுறுத்தலின்படி, மோசே பாறையைக் கோலால் அடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படுகின்றது. ஆண்டவர் தங்களோடு இருக்கிறாரா அல்லது இல்லையா என்று இஸ்ரயேல் மக்கள் சோதித்துப் பார்க்கின்றனர் (காண். விப 17:1-7).
ஆனால், இறைமகன் இயேசு அப்படிச் சோதித்துப் பார்க்கத் தேவையில்லை. ஏனெனில், இயேசுவின் திருமுழுக்கின்போது, தூய ஆவி புறாவைப் போல அவர்மேல் இறங்கி வர, ‘என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்’ என்று தந்தையின் குரல் ஒலித்தது (காண். மாற் 1:10-11). தான் இறைமகன் என்பதும், இறைத்தந்தை என்றும், தன்னோடு உடனிருக்கிறார் என்பதும் இந்த நிகழ்வு வழியாக இயேசு பெற்ற அடித்தள அனுபவமாக இருந்ததால், அவர் கடவுளைச் சோதனைக்கு உட்படுத்தவில்லை.
காலில் விழு!
மறுபடியும் அலகை இயேசுவை மிக உயர்ந்த மலைக்குக் கூட்டிச் சென்று, உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், ‘நீர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்’ என்றது. அப்போது இயேசு அதனைப் பார்த்து, “அகன்று போ, சாத்தானே, ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றார் (காண். இச 6:13, மத் 4:8-10).
‘நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது’ (மத் 6:24) என்னும் வாக்கியத்தின் விளக்கவுரையாகக் கூட இந்தச் சோதனையை எடுத்துக்கொள்ளலாம்.
‘நெடுஞ்சாண்கிடையாக விழுதல்’ என்பது, கடவுளுக்கு மட்டுமே உரித்தான ஒரு வழிபாட்டு முறை. இருந்தாலும், அரசர்கள் முன்னும் அதிகாரம் பெற்றவர்கள். முன்னும் நெடுஞ்சாண்கிடையாக விழும் வழக்கம் விவிலியக் காலத்தில் இருந்தது. இந்தச் செய்கையின் வழியாக ஒருவர் தனக்கு முன்னால் இருப்பவரைத் தன் தலைவராக ஏற்றுக்கொள்கின்றார். தனது விருப்புரிமை, தன்னுரிமை, விடுதலை போன்றவற்றை அவருக்கு விற்றுவிடுகின்றார்.
இயேசு தீமையின் ஆதிக்கத்துக்கு உட்பட மறுத்ததோடு, கடவுள் ஒருவரே வணங்குதலுக்கும், பணி செய்தலுக்கும் உரியவர் என்ற தன் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிக்கையிடுகின்றார்.
இவ்வாறாக, ‘கற்களை மாற்று!,’ ‘கடவுளைச் சோதி!,’ ‘காலில் விழு!’ என்னும் மூன்று பாலைவனச் சோதனைகளையும் வெற்றி கொள்கின்றார் இயேசு.
தவக்காலத்தின் முதல் ஞாயிறு கீழ்ப்படிதல் என்ற மதிப்பீட்டைக் கற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது. முதல் மக்கள் கடவுளை நம்ப மறுத்தனர். ஆகையால், கீழ்ப்படிய மறுத்தனர். அதற்கு மாற்றாக இயேசு தந்தையின் திருவுளத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார். நம்பிக்கையின்மை-நம்பிக்கை, கீழ்ப்படியாமை-கீழ்ப்படிதல் ஆகியவற்றுக்கான போராட்டம் எப்போதும் நீடித்துக்கொண்டேயிருக்கும். நம்பிக்கையாளர்கள் தாங்கள் இப்படி அலைக்கழிக்கப்படும்போதெல்லாம் இன்றைய பதிலுரைப்பாடல் வரிகளை நினைவில்கொள்ள வேண்டும்: “கடவுளே, தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்” (திபா 51:10).
இயேசு இறுதிவரை தன் கட்டின்மையை - சுதந்திரத்தை - விட்டுவிடவில்லை. நம் முதற்பெற்றோர் பாம்பின் சோதனையில் விழுந்தபோது, தங்கள் கட்டின்மையை இழக்கின்றனர். கட்டின்மையை என்றும் விரும்புவதும், அதைப் பற்றிக்கொள்வதும் நலம்.