Namvazhvu
அருள்பணியாளர் டெலிஸ் பெர்னாண்டஸ் கத்தோலிக்க பள்ளிக்கு பாதுகாப்பு வேண்டி கோரிக்கை
Friday, 24 Feb 2023 06:36 am
Namvazhvu

Namvazhvu

விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற இந்துத்துவ குழுவானது, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், அம்ரேலி நகரில் செயின்ட் மேரிஸ் கத்தோலிக்க மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறைகளுக்குள்ளும், தலைமையாசிரியர் அலுவலகத்திலும் இந்து தெய்வங்களின் படங்களை வைக்கக் கோரி, ஒரு நாள் முழுவதும் வன்முறையில் ஈடுபட்டது, அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பள்ளிக்கு பாதுகாப்பு வழங்கவும் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுக்கு, குஜராத் கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் செயலர் அருள்பணியாளர் டெலிஸ் பெர்னாண்டஸ் பிப்ரவரி 20 ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அருள்பணியாளர் பெர்னாண்டஸைத் தொடர்பு கொண்டபோது, "நாம் மதசார்பற்ற ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். எனவே இதுபோன்ற வன்முறை நிகழ்வுகள்  முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. மேலும் இத்தகைய வன்முறை நிகழ்வுகளில் ஈடுபடுவோர் மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் வளாகத்திலோ அல்லது எங்கள் நிறுவனத்திலோ எவருக்கும் அசம்பாவிதம் ஏற்படாதவாறு எங்களுக்கு காவல்துறை பாதுகாப்பை வழங்க வேண்டும்" என்று பிப்ரவரி 22 ஆம் தேதி UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இப்பள்ளியின் முதல்வர் அருள்பணியாளர் பினு குனெல் பிப்ரவரி 22 ஆம் தேதி " பிரதமர்மோடியின் இந்து சார்பு பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) கருத்தியல் ரீதியாக இணைந்துள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் அதன் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் அல்லது ஹனுமான் படையின் உறுப்பினர்கள் என்று கூறிக் கொள்ளும் ஏராளமான இளைஞர்கள், பிப்ரவரி. 20 ஆம் தேதியன்று, இந்து தெய்வங்களான சரஸ்வதி, ஹனுமான் படங்களை வகுப்பறைகளுக்குள்ளும், தலைமையாசிரியர் அலுவலகத்திலும் நிறுவ வேண்டும் என்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்துக் கடவுளான ஹனுமான் படத்தை பள்ளி நிர்வாகம் கிழித்ததாகவும் பொய் வழக்கு போட்டுள்ளனர்," என்று UCA செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இந்தியாவின் 1.4 பில்லியன் மக்கள்தொகையில் 2.3 சதவீதமாக இருக்கும் கிறிஸ்தவர்கள், 2014ல் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்து தேசியவாத குழுக்களின் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கிறிஸ்தவர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்கள் மீது அதிகரித்து வரும் துன்புறுத்தலுக்கு முடிவுகட்ட மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களை கோரி கிறிஸ்தவ தலைவர்கள் மற்றும் அமைப்புகள் தாக்கல் செய்த பொதுநல வழக்கை இந்திய உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.