Namvazhvu
மைக்கேல் வில்லியம் இந்திய கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைக்குத் தீர்வு வேண்டும்
Friday, 24 Feb 2023 07:10 am

Namvazhvu

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை குறித்த தகவல்களை சமர்ப்பித்து, வன்முறை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் தேசிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக UCF எனப்படும் ஐக்கிய கிறிஸ்தவ மன்றத்தின் தலைவர் மைக்கேல் வில்லியம் தெரிவித்துள்ளார்.

அண்மையில், 100க்கும் மேற்பட்ட தலத்திருஅவைகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் பல மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான பகை, வெறுப்பு, வன்முறை ஆகியவற்றைக் கண்டித்து, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில், அரசாங்கம், உச்ச நீதிமன்றம் மற்றும் குடிமைச் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைதியான போராட்டத்தை நடத்தினர்.

UCF தலைவர் மைக்கேல் வில்லியம் இந்திய அரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்ட இப்போராட்டமானது, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், கர்நாடகா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கிறிஸ்தவ மக்களின் நிலைமை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டும், அவை தடுத்து நிறுத்தப்பட வலியுறுத்தியும் நடைபெற்றது.

UCF எனப்படும் ஐக்கிய கிறிஸ்தவ மன்றத்தின் கணக்குப்படி, 2022 ஆம் ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஒரு நாளைக்கு இரண்டு என்ற கணக்கில், 21 வெவ்வேறு இந்திய மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 598 வன்முறை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், இந்தச் சம்பவங்களில் மிரட்டல், கும்பல் தாக்குதல், வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துதல், பாலியல் வன்முறை, ஆலயங்களை மூடுதல், சமூக ஒதுக்கல், இறந்தவர்களை அடக்கம் செய்ய மறுத்தல், மதமாற்றத் தடைச் சட்டங்களின் கீழ் தவறான புகார்கள் ஆகியவையும் அடங்கும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவமக்கள் தேசிய தலைநகரில் ஐந்து முறைக்கு மேல் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தியதை நினைவு கூர்ந்த, ஐக்கிய கிறிஸ்தவ மன்றம், சமூகத்தின் மீதான வெறுப்பு மற்றும் வன்முறையின் கூர்மையான அதிகரிப்புதான் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ய அவர்களைத் தூண்டியதாகவும் எடுத்துரைத்துள்ளது.

போராட்டத்தின் போது பலர் தங்கள் கைகளில் கருப்பு ரிப்பன்களை கட்டி, கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் வன்முறையை கண்டித்தனர். அரசியலமைப்பின்படி, அவரவர் நம்பிக்கையைக் கடைப்பிடிக்க சுதந்திரம் உள்ள நிலையில் ஏன் எங்களை தாக்குகிறார்கள் என்று தெரியவில்லை என்றும், இந்த வன்முறைக்கு எதிராக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை, அவர்கள் எங்களை ஆதரிக்காதது வருத்தமளிக்கிறது" என்றும் அருள்பணியாளர் அந்தோணி கூறியுள்ளார்.