Namvazhvu
தவக்கால ஒறுத்தலும் கூட்டியக்கப் பயணமும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தவக்காலச் செய்தி - 2023
Monday, 27 Feb 2023 07:10 am
Namvazhvu

Namvazhvu

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!

மத்தேயு, மாற்கு, மற்றும் லூக்கா ஆகியோரின் நற்செய்தி, இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வுப் பற்றி விவரிக்கிறது. அவரைப் புரிந்துகொள்வதில் அவர்தம் சீடர்களுக்கு ஏற்பட்ட தோல்விக்கு ஆண்டவர் பதிலிறுப்பதை நாம் அங்கே பார்க்கிறோம். இதற்கு சற்று முன்பாக, ஆசிரியரான இயேசுவுக்கும் சீமோன் பேதுருவுக்கும் இடையே ஏற்பட்ட உண்மையான மோதல் ஏற்பட்டிருந்தது. சீமோன் பேதுரு, இயேசுவை மெசியா என்று அவர்தம் விசுவாசத்தை வெளிப்படுத்திய பிறகு, நிகழவிருக்கும் அவர்தம் பாடுகள், சிலுவை ஆகியவற்றை மறுத்துவிடுகிறார். “என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில், நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்’ (மத்16:23) என்று இயேசுவும் கடுமையாக அவரைக் கண்டிக்கிறார். இதனைத் தொடர்ந்து, ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார் (மத் 17: 1).

தோற்றமாற்றம் பற்றிய நற்செய்தி ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தின் இரண்டாவது ஞாயிறன்று நற்செய்தி பகுதியில் பறைசாற்றப்படுகிறது. இந்த திருவழிபாட்டுக் காலத்தின்போது, நம்மையும் ஆண்டவர் அவருடன் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போகிறார். நமது சாதாரண செயல்திட்டங்கள் நமது வழக்கமான இடங்களில், நாம் அடிக்கடி திரும்பத் திரும்ப செய்கின்ற, சில சமயங்களில் அலுப்புத் தட்டுகிற வழமைகள் ஆகியவற்றில் நீடித்திருக்க நம்மை வலியுறுத்துகிறது. இந்தத் தவக்காலத்தின்போது இயேசுவின் தோழமையில் நாமும்ஓர் உயர்ந்த மலையில் ஏறுவதற்கும் இறைவனின் புனித மக்கள் என்ற வகையில் அந்த குறிப்பிட்ட ஆன்மீக ஒழுங்கை - தன்னொடுக்கத்தை (ascesis) - அனுபவித்து வாழ்வதற்கும் அழைக்கப்படுகிறோம்.

இறையருளால் தாங்கிப்பிடிக்கப்படும் தவக்கால ஒறுத்தல் என்பது சிலுவைப் பாதையில் இயேசுவைப் பின்செல்வதில் நமக்குள்ள நமது விசுவாச குறைபாடு மற்றும் நமது எதிர்ப்பை வெற்றிகொள்வதற்கான ஒரு செயல்திட்டம் ஆகும். பேதுருவும் ஏனைய சீடர்களும் இதனைச் செய்வது அவசியமாக செய்ய வேண்டிய ஒன்றாக இருந்தது. நம் ஆசிரியரைப் பற்றிய நம் அறிவை ஆழப்படுத்தவும் அவர்தம் மீட்பின் மறைபொருளை ஆரத்தழுவி முழுமையாக புரிந்துகொள்ளவும் அன்பினால் தூண்டப்பட்டு முழுமையான தற்கையளிப்பில் நிறைவடையவும் வெதுவெதுப்பான நிலை மற்றும் வெற்றாரவாரத்திலிருந்து (mediocrity and vanity) நம்மை நாமே விடுவித்துக்கொள்ளவும் அவர் நம்மை தனிமையாகக் கூட்டிக்கொண்டுபோக நம்மை நாமே அனுமதிக்க வேண்டும். பயணத்தில் நாம் புறப்படுவது அவசியம்; மலையேற்றத்தைப் போன்று மலையேற்றப் பாதையில் உயரே ஏறுவதற்கு முயற்சியும் தியானமும் கவனமும் தேவைப்படுகிறது. ஒரு திரு அவையாக நாம் மேற்கொள்வதற்கு கடமைப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பயணத்திற்கு இந்தத் தேவைகள் மிகவும் இன்றியமையாதவையாக உள்ளன. தவக்கால ஒறுத்தல் மற்றும் ஒருங்கிணைந்த அனுபவம் இவற்றிற்கிடையேயான உறவை சிந்திப்பதிலிருந்து மிகப்பெரிய அளவில் நாம் பயனடைந்திட முடியும்.

தாபோர் மலைமீதான அவர்தம்தியானத்தில் இயேசு அவரது தனித்தன்மைவாய்ந்த இந்த நிகழ்வுக்கு சாட்சிகளாக இருக்கும்படி மூன்று சீடர்களைத் தேர்ந்தெடுத்து அவருடன் கூட்டிச் சென்றார். பகிரப்படுகிற நமது ஒட்டுமொத்த விசுவாச வாழ்வைப்போல அருளின் அனுபவம் பகிரப்படவேண்டும். ஏகாந்தமன்று (solitary). ஏனெனில் இணைந்திருப்பதில்தான் நாம் இயேசுவைப் பின்பற்றுகிறோம். காலத்தில் பயணிக்கும் திரு அவையாக இணைந்திருப்பதில்தான், அக்காலத்திற்குள் உள்ள திருவழிபாட்டு ஆண்டில், தவக்காலத்தில், ஆண்டவர் நம்மிடையே சகப்பயணிகளாக நிலைநிறுத்தியுள்ளவர் களோடு நாம் எல்லாரும் இணைந்து நடக்கிறோம். தாபோர் மலை மீது இயேசுவும் சீடர்களும் ஏறியதைப் போல, ஒரே குருவின் சீடர்களைப் போல நாமும் அதே பாதையின் ஊடாகவே இணைந்து மேற்கொள்கிறபடியால், நமது இத்தவக்காலப் பயணமும் ஓர் கூட்டியக்கப்பயணம் என்றே சொல்லமுடியும். ஏனெனில், திருவழிபாட்டுப் பயணத்திலும் சரி, கூட்டியக்கப் பயணத்திலும் சரி, நம் ஆண்டவர் இயேசுவே வழியாக உள்ளார் என்பது நமக்குத் தெரியும். ஆகையால், திரு அவையும் இன்னும் ஆழமாகவும் முழுமையாகவும் மீட்பராம் கிறிஸ்துவின் மறைபொருளில் நுழைவதைத் தவிர வேறெதையும் செய்ய வேண்டியதில்லை.

மலையின் உச்சிக்கு நாம் அனைவரும் வந்தடைந்திருக்கிறோம்."அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார்; அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின" (மத் 17:2) என்று நற்செய்திஇயேசுவை தொடர்புப்படுத்துகிறது. இதுவே பயண நோக்கத்தின்சிகரமாகஉச்சமாக இருக்கிறது. அவர்களுடைய மலையேற்றத்தின் முடிவில், இயேசுவுடன் அவர்கள் மலையின் உச்சிமுகடுகளில் நிற்கிறபோது, அந்த மூன்று சீடர்களுக்கும் அவரை அவர்தம் மாட்சியில், தெய்வீக ஒளியில் பிரகாசிப்பதைக் காண்கிற அருள் அருளப்படுகிறது. அந்த ஒளியோ வெளியிலிருந்து வரவில்லை; மாறாக ஆண்டவரிடமிருந்தே ஒளிர்கிறது. அவர்தம் தெய்வீக அழகின் பார்வை தாபோர் மலைமீது ஏறுவதற்கு அந்தச் சீடர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் விட ஒப்பிட இயலாத வகையில் மாட்சிக்குரியதாக இருந்தது. கடுமையான எந்த மலையேற்றத்தின் போதும் நாம் பாதையின்மீது நம் கண்களைப் பதித்திட வேண்டும். இருந்தபோதிலும் அதன் முடிவில் நம் கண்கள் முன்பு விரியும் பரந்து விரிந்த தோற்றம் நம்மை வியப்பில் ஆழ்த்தும்; அதன் பேரழகால் நாம் கைமாறு பெறுவோம். இங்ஙனமே, இந்த கூட்டியக்கப் பாதையும் அடிக்கடி சிரமமானதாக கடினமானதாக தோன்றலாம்; சில சமயங்களில் நாம் மனத்தளர்வடைந்திடக் கூடும். இருந்தபோதிலும் முடிவில், எந்த சந்தேகத்திற்குமிடமின்றி ஆச்சரியத்தக்க, வியக்கத்தக்க ஒன்று நமக்காக காத்திருக்கிறது. இது இறைவிருப்பத்தையும் அவரது அரசாட்சிக்கான சேவையில் நமது மறைப்பணியையும் இன்னும் சிறப்பான விதத்தில் புரிந்துகொள்ள உதவுகிறது.

சீடர்களுடைய தாபோர் மலையனுபவம் தோற்றமாற்றமடைந்த இயேசுவுடன் மோசேவும் எலியாவும் முறையே சட்டத்தையும் இறைவாக்கினர்களையும் அடையாளப்படுத்தி தோன்றியபோது  இன்னும் செறிவூட்டப்பட்டதாக, மதிப்புயர்ந்ததாக இருந்தது. அதே சமயம், பழங்கால உடன்படிக்கை மற்றும் வாக்குறுதிகளை நிவர்த்திச் செய்ததாக கிறிஸ்துவின் புதியத்தன்மை இருக்கிறது. அவர்தம் மக்களுடனான கடவுளின் வரலாற்றிலிருந்து பிரிக்க இயலாது; அதன் ஆழமானப் பொருளை வெளிப்படுத்துகிறது. இதே போன்று, கூட்டியக்கப் பயணம் என்பது திரு அவையின் பாரம்பரியத்தில் வேரூன்றியிருக்கிறது; அதேசமயம், புதியவற்றிற்கு திறந்துவிடவேண்டும். மரபு அல்லது பாரம்பரியம் என்பது புதிய பாதைகளைத் தேடுவதற்கும் இடம்பெயராமல் அசைவற்று எதிர்த்துநிற்கும் சோதனையை தவிர்ப்பதற்கும் எதிர்க்கப்படும் சோதனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சோதித்தறிதலைத் தவிர்ப்பதற்கும் தூண்டும் ஆதாரமாக இருக்கிறது.

ஒறுத்தல் மிக்க தவக்காலப் பயணமும் கூட்டியக்கப் பயணமும் ஒரே மாதிரி தோற்றமாற்றத்தையே இலட்சியமாக, தனிப்பட்ட விதத்திலும் திரு அவை நிலையிலும் தங்கள் இலக்காகக் கொண்டுள்ளன. இரண்டிலுமே இயேசுவின் தோற்றமாற்றத்தில் ஒரு மாற்றம் என்பது தனக்கான முன்மாதிரியைக் கொண்டுள்ளது; அது அவர் தம் பாஸ்கா மறைபொருளின் அருளால் அடையப்படுகிறது. ஆகையால், தோற்றமாற்றம் இந்த ஆண்டு நமக்குள் ஓர் எதார்த்தமாக மாறிவிடும். அந்த மலையை இயேசுவுடன் இணைந்து நாம் ஏறுவதற்கும் அந்த இலக்கை அவருடன் இணைந்து அடைவதற்கும் இரண்டுபாதைகளைப் பின்பற்ற நான் முன்மொழிய விழைகிறேன்.

முதல்பாதை, தந்தையாம் இறைவன் தாபோர் மலைமேல் தோற்றமாற்றம் அடைந்த இயேசுவை ஆழ்ந்து தியானிக்கும்போது முன்மொழிந்த கட்டளையோடு தொடர்புடையது. மேகத்தினின்று "என் அன்பார்ந்த மைந்தர் இவரே" என்று ஒரு குரல் ஒலித்தது. முதலாவது பரிந்துரை மிகத் தெளிவாக உள்ளது: நாம் இயேசுவுக்கு செவிசாய்க்க வேண்டும். தவக்காலம் என்பது அருளின் காலம். நாம் எந்த அளவுக்கு அவருக்குச் செவிசாய்க்கிறோமோ அந்த அளவுக்கு அவர் நம்முடன் பேசுகிறார். அவர் நம்மிடம் எப்படி பேசுகிறார்? முதலாவதாக, திருவழிபாட்டில் திரு அவை வழங்கும் இறைவார்த்தையில் பேசுகிறார். கேளாத காதுகளில் அவ்வார்த்தை விழாது இருப்பதாக. நாம் எப்போது திருப்பலியில் பங்கேற்க இயலாது. அதன் விவிலிய வாசகங்களை நாம் படிப்போமாக. இணையதளத்தைப் பயன்படுத்தி கூட வாசிப்போமாக. திருவிவிலியத்தோடு சேர்த்து, ஆண்டவர் நம் சகோதர சகோதரிகளின் வழியாக நம்முடன் பேசுகிறார். குறிப்பாக, தேவையில் உள்ள முகங்களில் அவர்கள்தம் பின்புலங்களில் நம்முடன் பேசுகிறார். திரு அவையில் நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு நாம் செவிசாய்க்கிறபோதெல்லாம் நாம் கிறிஸ்துவுக்குச் செவிசாய்க்கிறோம் என்ற கூட்டியக்க நடைமுறைக்கு முற்றிலும் இன்றியமையாத வேறொன்றைப் பற்றி நான் சொல்வேனாக. சில நிலைகளில் இப்படிப்பட்ட பரஸ்பர செவிசாய்த்தல் என்பது நம்முடைய முதன்மையான நோக்கமாகும். ஆனால், கூட்டியக்கத் திரு அவையின் நடைமுறை மற்றும் பாணியில் இது எப்போதும் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருக்கிறது.

தந்தையின் குரலைக் கேட்கும்போது, சீடர்கள், “மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, "எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்" என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை" (மத் 17:6-8). இங்கே இத்தவக்காலத்திற்கான இரண்டாவது பரிந்துரை இருக்கிறது : வாழ்வின் அன்றாடப் போராட்டங்கள் மற்றும் எதார்த்தங்கள், அதன் துயரங்கள் மற்றும் முரண்பாடுகளை எதிர்கொள்ள வேண்டிய பயத்தின் காரணமாக, வழக்கத்திற்கு மீறிய அசாதாரண நிகழ்வுகளிலும் திடீர்திருப்பம் நிறைந்த அனுபவங்களாலும் ஆன மதவாதத்திற்குள் அடைக்கலம் தேடாதீர்கள். சீடர்கள் மேல் இயேசு பாய்ச்சிய ஒளி என்பது உயிர்ப்பு மாட்சியோடு முன் நிகழ்வாகும். அவரை மட்டுமேநாம் பின்பற்றும்போது அதுவே நமது பயணத்தின் இலக்காக இருக்க வேண்டும். தவக்காலம் உயிர்ப்புக் காலத்திற்கு வழிநடத்துகிறது. : இந்ததியானம்என்பது அது தனக்குத்தானே முடிவதில்லை; அது ஆண்டவரின் பாடுகளையும் சிலுவையையும் இறைநம்பிக்கை, நம்பிக்கை மற்றும் அன்புடன் அனுபவிப்பதற்கு நம்மைத் தயாரிப்பதற்கான வழிமுறைகளாகும். இவ்வகையில் உயிர்ப்பை வந்தடைகிறோம். கூட்டியக்கப் பயணத்தில், ஒன்றிப்பின் ஆற்றல்வாய்ந்த அனுபவத்தின் அருளை நமக்கு வழங்கும்போது நாம் வந்தடைந்துவிட்டோம் என்று கற்பனை செய்யக்கூடாது. – அங்கேயும்கூட ஆண்டவர் நம்மிடம், ‘எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்என்று மறுபடியும் கூறுகிறார். நாம் சமவெளிக்கு கீழிறங்குவோமாக. நாம் அனுபவித்த இறையருள் நம் சமூகத்தில் நம்முடைய சாதாரணவாழ்வில் நம்மைகூட்டியக்கத்தன்மையின் கைவினைஞர்களாகநம்மை வலிமைப்படுத்துவதாக.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, தூய ஆவியார் இத்தவக்காலத்தில் இயேசுவுடனான நம்முடைய மலையேற்றத்தில் நம்மைத் தூண்டி எழுப்பி பாதுகாப்பாராக. இதனால் அவர்தம் தெய்வீக மாட்சியை அனுபவிக்கவும், இவ்வகையில் இறைநம்பிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு, அவருடன் இணைந்து மேற்கொள்ளும் நம் பயணத்தில் நிலைத்திருந்து அவர்தம் மக்களின் மாட்சியாகவும் உலகின் ஒளியாகவும் இருப்போமாக.

திருத்தந்தை பிரான்சிஸ்

உரோம், புனித யோவான் இலாத்தரன் பசிலிக்கா,

புனித பவுலின் மனமாற்றப் பெருவிழா-ஜனவரி 25

(தமிழாக்கம்-குடந்தை ஞானி)