பாதைகளில் நாம் மேற்கொள்ளும் பயணங்கள்தான் நம்மை உயிர்ப்பிக்கின்றன, புதுப்பிக்கின்றன, மாற்றத்தை நோக்கி உந்துகின்றன. வரலாற்றில் நேற்றும் இன்றும் பல்வேறு நோக்கங்களை மையங்கொண்டு பலர் நடைபயணங்களை மேற்கொண்டிருந்தாலும், அனைத்தும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியதில்லை. ஆனால், பிரிட்டிஷ்காரர்கள் உப்புக்கு வரி விதித்ததை எதிர்த்து காந்தி அகமதாபாத்திலிருந்து தண்டி வரை மேற்கொண்ட 241 கி.மீ. நடைபயணம் இன்றளவும் பேசுபொருளாகவே உள்ளது. காரணம், தனது நடைபயணம் மூலம் ஒட்டுமொத்த பிரிட்டிஷ் அடக்கு முறைக்கும் காந்தியால் முடிவுகட்ட முடிந்தது.
150 நாட்கள், ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் 10:30 மணியிலும், மீண்டும் மாலை 3:30 மணி முதல் 6:30 மணி வரையிலும் நடந்து, தினமும் 22 முதல் 23 கிலோமீட்டர் தொலைவினை கடந்து, மொத்தம் 3,750 கிலோ மீட்டர் தொலைவினை அடைந்த ராகுலின் கன்னியாகுமரி - காஷ்மீர் வரையிலான “இந்திய ஒற்றுமைப் பயணம்” இன்று நம்மை ஒற்றை மயம், மத வெறித்தனம், கார்ப்பரேட் கொள்ளை என ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் பாசிச, பா.ஜ.க அடக்கு முறை ஆட்சிக்கு சாவு மணியாக மாறும் என்கிற நம்பிக்கை உள்ளது.
மாற்றத்தின் போர்க்கருவியே வரலாற்று நடைபயணம்
நடைபயணங்களின் வரலாற்றை புரட்டிப்பார்ப்பது வளரும் தலைமுறை தங்களது அடிமைத்தனத்திற்கு எதிராக வெகுண்டெழுவதற்கான ஆற்றலை நிச்சயம் கொடுக்கும். 1938 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 1 ஆம் தேதி பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் முஸ்லீம் லீக் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் மற்றும் குமாரசாமி பிள்ளை உள்ளிட்டோர் தலைமையில் “தமிழர் படை” என்கிற பெயரில் இந்தித் திணிப்பிற்கு எதிராக உறையூரில் தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்ற நடைபயண பொதுக்கூட்டங்கள் தமிழைக்காத்தது. தனது 61 வயதில் தினமும் 24 கி.மீ. வரை நடந்து தண்டி பாதையாத்திரையை மேற்கொண்டார் மகாத்மாகாந்தி. அவர் எந்த நோக்கத்திற்காக நடைபயணம் மேற்கொண்டாரோ அதனை நிறைவேற்றி, இன்றளவும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். இன்றளவும் பாதையாத்திரைகளின் முன்னோடியாக தண்டியாத்திரை அமைந்துள்ளது.
“கோயிலை அங்கு கட்டுங்கள்” என்கிற முழக்கத்தோடு குஜராத் மாநிலம் சோம்நாத்தில் முதல் பீகாரில் சமஸ்டிபுர் வரையில் அத்வானி மேற்கொண்ட பத்தாயிரம் கிலோ மீட்டர் இராமர் ரதயாத்திரை தீவிர இந்துத்துவா அரசியலுக்கு இந்தியளவில் பலனைக் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். அதன் விளைவே 1996 தேர்தலில் 161 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. மதுவிலக்கு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, காவிரிப் பிரச்சனை, நதி நீர் இணைப்பு, நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு என பல பொது நலப் பிரச்சனைகளுக்காக நீண்ட தூர நடைப்பயணங்களை தமிழக அரசியல்வாதிகளில் மேற்கொண்ட பெருமை வைகோவைச் சாரும். காவிரி மீட்பு, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தொல். திருமாவளவனும் நடை பயணங்கள் மேற்கொண்டதுண்டு. ஆக, நடைபயணம் என்பது, அடக்கு முறைகளுக்கு எதிரான எதிர்ப்பை வெளிப்படுத்தி, மாற்றத்தை, ஏற்றத்தை, முன்னேற்றத்தை ஏற்படுத்த உகந்த ஒரு போர்க்கருவி. சமூக அக்கறையில் வளர இதுபோன்ற நடைபயணங்கள் அவ்வப்போது தேவை.
பாரத் ஜோடோ நடைபயண உதயம்
பல்வேறு வெறுப்புணர்வுகளையும், பொருளாதார நெருக்கடிகளையும் நம் நாடு சந்தித்து வரும் நிலையில், கடந்த மே உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் உதயமானது தான் பாரத் ஜோடோ நடைபயணச் சிந்தனை. கட்சியின் அப்போதைய இடைக்காலத் தலைவரான சோனியாகாந்தி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார். ராகுல் காந்தி தலைமையில் செப்டம்பர் 7 மாலை 5 மணிக்கு கன்னியாகுமரியில் தொடங்கி, 150 நாட்கள் தொடர்ந்து நடந்து காஷ்மீரில் இப்பயணம் நிறைவடையும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ஏறக்குறைய 3570 கி.மீ. தொலைவு செல்லும் இப்பயணம் காலை - மாலை மூன்று மணி நேரம் வீதம், ஒவ்வொருநாளும் 20 கி.மீ தொலைவை கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.
நடைபயணத்தின் தொடக்கம் முதல் முடியும் வரை கலந்துகொள்ளும் 100 பேர், நடைபயணம் மேற்கொள்ளப்படும் மாநிலத்தைச் சேர்ந்த 100 பேர், எந்தெந்த மாநிலங்கள் வாயிலாக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படவில்லையோ அந்த மாநிலங்களைச் சேர்ந்த 100 பேர் இவ்வாறு ஒரே நேரத்தில் 300 பேர் நடைபயணத்தில் உறுதியாக கலந்துகொள்ளும் விதமாய் நடைபயணத்தில் மூன்று விதமான பங்கேற்பாளர்கள் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததற்கும் மேலாய் பெருங்கூட்டம் ஒவ்வொரு நாளும் நடைபயணத்திற்கு வலுசேர்த்ததை காண முடிந்தது. இடதுசாரி, பொதுவுடைமை அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், திரைப்பட பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த நடைபயணத்தில் பங்கேற்று இந்தியாவின் ஒற்றுமைக்கு வலுசேர்த்தனர்.
ராகுல் மேற்கொண்ட நடைபயணம் - எதற்காக?
2014, 2019 நாடாளுமன்ற தேர்தல்களிலும், 2014-2022 வரை நடைபெற்ற பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்த நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலை மையங்கொண்டு, இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது என்கிற விமர்சனங்கள் எழலாம். இருப்பினும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்கையில், “இந்தியாவில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஜிஎஸ்டி ஆகியவற்றால் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. சாதி, மதம், மொழி, உணவு, உடை ஆகியவற்றின் பெயரால் சமூகம் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதால் நாட்டில் அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மூன்றுக்கும் எதிராக இந்தியாவை ஒருங்கிணைக்கும் பயணம் தான் இந்த நடைபயணம்” என்றார்.
பிபிசி தமிழ் ராகுல் காந்தியின் நடைபயணம் காங்கிரசுக்கு எந்தளவுக்கு கைகொடுக்கும் என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வத்திடம் முன்வைத்தது. அதற்கு அவர், “இரண்டு ஆண்டுகளில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. அதற்காக காங்கிரஸ் பக்கம் கவனத்தை ஈர்க்க இத்தகைய பெரிய அளவிலான நடைபயணங்கள் முக்கியமானதாக இருக்கிறது. இந்தியாவில் இரண்டு பயணங்கள் முக்கியமானதாக உள்ளது. ஒன்று ஜெயப்பிரகாஷ் காந்தி அவசர நிலைகாலத்திற்கு பிறகு முன்னெடுத்த நடைபயணம். மற்றொன்று, அத்வானியின் ரத யாத்திரை. ஒன்று ஜனநாயகத்திற்கு உதவியாகவும், மற்றொன்று வலதுசாரி அரசியலுக்கு உதவியாகவும் மாறியிருக்கிறது. இரண்டும் முன்னுதாரணமாக இருக்கும்போது, ராகுல் காந்தியின் நடைபயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மக்கள் மீது இந்த நடைபயணங்கள் தாக்கம் ஏற்படுத்துகிறதோ இல்லையோ எல்லாரும் இதுகுறித்து பேசுவார்கள். உரையாடலை தாங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என வலதுசாரிகள் நினைக்கும்போது, இந்த நடைபயணம் உதவியாக இருக்கும். விலைவாசி உயர்வு போன்ற முக்கியமான பிரச்சனைகளை எழுப்ப உதவிகரமாக இருக்கிறது” என்றார்.
நடைபயண நோக்கமே பலம் சேர்த்துள்ளது
நடந்து முடிந்த ராகுலின் நடைபயணம் மீதான விமர்சனங்களும், விவாதங்களும் பலவாயினும் அதன் நோக்கம் இன்று பன்மைத்துவம் கொண்ட இந்தியாவிற்கு பலம் சேர்த்திருக்கிறது என்றால் மிகையல்ல; இப்பயணம் ஒற்றை அணியாக எல்லாரையும் இணைக்கும் பயணமல்ல; மாறாக, தனித்து தனித்துவத்துடன் இயங்கி ஒற்றுமையை, சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்ப வழிகாட்டிய பயணம். விமானத்தில் பறந்து, கழுகுப்பார்வையில் எதார்த்தங்களை கண்டும் காணாமல் கடந்த, பாதையல்ல; மாறாக, சாமானிய மக்களின் வாழ்வைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள வீதிகளில் வெகுதூரம் நடந்த பயணம். உரிமைகளை தங்களது அதிகாரத்தால் சட்டத்தின் ஓட்டைகளால் அடக்கும் அடிமைத்தனங்களுக்கு மாற்றாக இந்தியாவின் எதார்த்தத்தைப் பறைசாற்றிய பயணம். கட்சிக் கொடியைத்தாண்டி, தேசியக்கொடியை ஏந்தியே நடைபயணம் நிகழ்ந்தது இதற்குச் சான்று.
தேர்தல் அரசியலைப் பின்தள்ளிவிட்டு தற்பொழுது நாடு எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை, அவற்றிற்குக் காரணமான பிரதான எதிரியை உலகறிய வெளிச்சமிட்டு காட்டிய பொதுநோக்கால் ராகுலின் நடைப்பயணம் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெற்று விட்டது. அதாவது, ஊடகங்கள் பேசமறுத்த அல்லது மூடி மறைத்த உண்மைகளை எல்லாம் பொதுவெளியில் உடைத்தெறியும் விதமாக ராகுலின் நடைபயணம் அமைந்திருந்தது.
அனைத்திற்கும் மேலாய் இப்பயணத்தின் வழியாக ராகுல் கொண்டு வர முற்பட்ட மதவெறி பாசிச கார்ப்பரேட் ஆட்சிக்கு எதிரான ஒருங்கிணைப்பு அறைகூவல் என்பது ஒட்டுமொத்த தேசமும் தன்னை மறுசீரமைத்துக் கொள்வதற்கான அழைப்பு என்பதனை நாம் மறந்திடலாகாது. மீண்டும் இந்திய அரசியல் சாமானிய மக்களையும், அவர்களின் குரலையும் நோக்கித் திரும்புவதற்கான சூழலை ராகுல் உருவாக்கித் தந்துள்ளார். இனி நமது ஒருங்கிணைந்த செயல்பாடுகளினால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆகவே, தனித்தனி கட்சிகளாகப் பிரிந்து நிற்பதை விட்டுவிட்டு, பொது எதிரியான பா.ஜ.கவை வீழ்த்தும் நோக்கில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான செயல்பாடுகளை இன்றே துவங்குவோம். பூனைக்கு மணிகட்டிய ராகுலுக்கு ஒரு சல்யூட்!