ஹங்கேரி நாட்டின் அரசு மற்றும் திருஅவை அதிகாரிகளின் அழைப்பை ஏற்று இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அந்நாட்டு தலைநகரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வார் என திங்களன்று அறிவிக்கப்பட்டது. இச்செய்தியை வெளியிட்ட திருப்பீடத்தின் தகவல் தொடர்பு அதிகாரி மத்தேயோ புரூனி அவர்கள், இம்மூன்று நாள் திருத்தூதுப்பயணம் குறித்த விவரங்களையும் வெளியிட்டுள்ளார்.
28 ஆம் தேதி உள்ளூர் நேரம் காலை புடாபெஸ்ட் விமான நிலையம் சென்றடையும் திருத்தந்தை, அந்நாளில் அரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்று அரசுத் தலைவரையும் பின்னர் அந்நாட்டு பிரதமரையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்தபின், ஆயர்கள், அருள்பணியாளர்கள், குருத்துவ பயிற்சி மாணவர்கள், மேய்ப்புப் பணியாளர்கள் ஆகியோரைச் சந்திப்பார். இரண்டாம் நாளாகிய ஏப்ரல் 29 ஆம் தேதியன்று, குழந்தைகள் காப்பகம் ஒன்றை சென்று சந்தித்தல், வறியோர் மற்றும் அகதிகளை சந்தித்தல், இளையோரை சந்தித்தல், மற்றும் அந்நாட்டு இயேசு சபையினரை திருப்பீடத் தூதரகத்தில் சந்தித்தல் போன்றவை இடம்பெறும்.
இறுதி நாளாகிய ஏப்ரல் 30 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று பொதுமக்களுடன் திருப்பலி, கல்வி மற்றும் கலாச்சார உலகின் அங்கத்தினர்களை சந்தித்து உரையாடல் போன்றவைகளுக்குப்பின் அந்நாளே திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கான் திரும்புவார்.