இந்தியாவின் மத்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் ஜாபுவா மாவட்டத்தில் ஷலோம் சபையை சார்ந்த துணை ஆயர் பால் முனியா மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
கைலாஷ் பூரியா என்பவர் ஆயர் பால் அவர்கள் ஜனவரி 11 ஆம் தேதி தன்னை மதமாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறினார். தன்னை அவரது தேவாலயத்திற்கு அழைத்துச் சென்று என் மீது தீர்த்தத்தை தெளித்து, ஒரு திருவிவிலியத்தையும் சிலுவையையும் என் கையில் கொடுத்தார். மேலும் இங்கு நடத்தப்படும் ஜெப கூட்டங்களில் தவறாமல் பங்கு பெற வேண்டும் என்று என்னை மிரட்டினார் என்று காவல்துறையிடம் புகார் அளித்தார். அவரது வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி ஜாபுவா மாவட்ட காவல்துறையினர் துணை ஆயரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனை விதித்தது. மாநிலத்தின் உயர் நீதிமன்றமானது ஆயர் அவர்கள் தாமாக முன்வந்து சரணடைந்தால், அவருக்கு பெயில் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் அவர் சரணடைந்த பிறகு அவருக்கு பெயில் வழங்காமல், மாவட்ட நீதிமன்றமானது அவரை சிறைக்கு அனுப்பிவிட்டது. ஆயர் பால் அவர்கள் ஒரு போதும் கைலாஷ் பூரியா சொல்லிய கிராமத்துக்கு சென்றதில்லை, கைலாஷ் பூரியாவையும் சந்தித்தது இல்லை. இது வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு, சுமத்தப்பட்ட பழி என்று ஆயரின் உறவினர் காலெப் முனியா UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஜாபுவா கத்தோலிக்க மறைமாவட்டத்தின் மக்கள் தொடர்பு செயலாளர் அருட்பணியாளர் ராக்கி ஷா, “காலெப் முனியா அவர்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. பல இந்து அடிப்படைவாத குழுக்கள் எங்களது கிறிஸ்தவ நிறுவனங்களையும், எங்களது ஆலயங்களையும் குறி வைத்தே செயல்படுகின்றன. சமூக வலைத்தளங்களில் பல்வேறு போலியான, பொய்யான செய்திகளை பரப்பி பிற மத மக்களை எங்களுக்கு எதிராக திருப்ப முயற்சிக்கின்றன” என்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
பழங்குடியினர் ஆதிக்கம் நிறைந்த இம்மாவட்டத்தில், மாநிலத்தின் மதமாற்றத் தடைச் சட்டத்தின் விதிகளை மீறியதாக, பெரும்பாலும் போதகர்கள் மீது மட்டும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இக்குற்றசாட்டுகளுக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை. ஜாபுவாவில் கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருப்பதாக கூறி அவற்றை அழிக்கப் போவதாக இந்து அடிப்படைவாத குழுக்கள் வெளிப்படையாகவே அச்சுறுத்தி வருகின்றன. ஜாபுவா மாவட்டத்தின் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 4 சதவிகிதமாகவும், பல பழங்குடியினரை உள்ளடக்கிய இந்துக்கள் 93 சதவிகிதமாகவும் மற்றும் முஸ்லீம்கள் 2 சதவிகிதமாகவும் உள்ளனர்.