திருத்தந்தை பிரான்சிஸ்! இயேசுவின் பிரதிநிதியாக, பேதுருவின் வழித்தோன்றலாக, 266 வது திருத்தந்தையாக கத்தோலிக்க மந்தையை காலத்தே வழிநடத்த வந்த காலத்தின் தூதர். மறைந்த திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் திடீரென்று தன் ஓய்வை அறிவித்த நிலையில், திரு அவை திக்குமுக்காடி திகைத்து நின்ற வேளை. அவரின் விருப்பு ஓய்வுக்குப் பிறகு, அடுத்த திருத்தந்தை யார்? என்று உலகமே வழிமேல் விழிவைத்து, சிஸ்டைன் தேவாலயத்தின் புகைப்போக்கியின் நிறம் காண காத்துக் கிடந்தது. ஐந்து முறை கரும்புகைதான். ஆறாவது முறையாக தோன்றிய வெண்புகை, விண்ணை மட்டுமல்ல.. மக்கள் மனங்களையும் நிறைத்தது. ஒரே ஆரவாரம்.
இதுவரை எந்த திருத்தந்தையும் தேர்ந்து கொள்ளாத ஒரு புதிய பெயர்.. பிரான்சிஸ். திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ, ‘ஏழைகளை மறவாதே’ என்று பிரேசில் கர்தினால் ஹூம்மஸ் சொன்ன வார்த்தைகளை அசைப்போட்டவராக..அடுத்தநொடியே.. பிரான்சிஸ் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார். திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதற்குரிய நாற்காலியில் அமர்ந்து கர்தினால்களின் கீழ்ப்படிதலை ஏற்கவில்லை; நின்று கொண்டே ஆரத்தழுவி எளிமையின் புரட்சிப் பாதையில் நல்லாயனாக நடைபயின்றார். ஆடம்பரத்தின் நிழலை அவர் ஒருபோதும் நெருங்க முயற்சிக்கவில்லை.
ஒரு சில ஆயர்கள்-குருக்களைப்போல எதையும் எழுதி கையில் வைத்துக்கொண்டு செய்தி வாசிப்பாளரைப் போல அவர் ஒருபோதும் பேச முயற்சிக்கவில்லை. மனதின் குரலை, நற்செய்தி பறைசாற்றுபவரைப் போலவே மக்கள்மொழியில் பேசினார். ‘மாலை வணக்கம்!’ என்று சொல்லி முதல் அறிவிப்பிலேயே முகம் மலர்ந்தார்; மனம் கவர்ந்தார். அவர்தம் கள்ளங்கபடற்ற புன்னகையிலேயே கலங்கி நிற்கும் ஆன்மாக்களை ஆண்டவர்பக்கம் பேதுருவின் வலையில் அகப்பட்ட மீன்களைப் போல இழுத்துக்கொண்டு வந்தார். ஆடம்பரமே அப்பாலே போ.. எப்போதும் விரட்டி நின்றார்.
எளிய வாகனம்.. எளிய உடை.. எளிய மொழி.. பிரான்சிஸ் அசிசியின் வழியில் நடக்கின்றார். சேசு சபையின் விழுமியங்களில் வேரூன்றி.. திரு அவையின் பாரம்பரியத்தில் நிலைத்து நிற்கிறார். மத்தேயுவைப் போல எளியவராயினும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று தம் இறையழைத்தல் நாளில் என்ன மனதில் நின்றதோ.. அதனையே குருத்துவத்திலும்.. ஆயர் நிலையிலும்.. பேராயர் நிலையிலும்.. கர்தினால் நிலையிலும்.. திருத்தந்தை நிலையிலும் கடைப்பிடிக்கிறார். எல்லா தலைமுறைக்கும் தாம் சொந்தம் என்பதை எப்போதும் உணர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறை செல்பி எடுக்க வேண்டுகோள் விடுத்தால் புன்னகையோடு அவர்களின் மனம் கவர்கிறார். அடைக்கலம் தேடும் அகதிகள், புலம்பெயர்ந்தோர் அனைவரும் இருகரம் விரித்து இயேசுவின் அன்பைக் கொட்டி அரவணைக்கின்றார். இரக்கமுள்ள தந்தையைப் போல எல்லாரும் இருக்க வேண்டும் என்று இரக்கத்தின் ஆண்டை அறிவித்து, இரக்கத்தின் கதவுகளை ஆலயங்களில் மட்டுமல்ல.. நம் இதயங்களில் திறந்து வைத்திருக்கிறார்.
ரியோடி ஜெனிரோ உலக இளைஞர் மாநாடு தொடங்கி.. கிறிஸ்து வாழ்கிறார் திருத்தூது ஊக்கவுரை வழியாக.. இளைய தலைமுறைக்கு விளக்குமுகமாக இருக்கிறார். உலகில் போர்கள் ஓய வேண்டும்; ஆயுதங்கள் மௌனிக்க வேண்டும் என்பதில் அவ்வளவு பேரார்வம் அவருக்கு. அமைதி உடன்படிக்கையில் அடியெடுத்து வைக்கும் நபர்களின் பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, இந்த மானுடம் எழுவதற்கு ஊன்றுகோலாக இருக்கிறார். தென் சூடான் அரசுத்தலைவர்களில் கால்களில் இவர் விழுந்தபோது ஆயுதங்களும் விழுந்தன. நற்செய்தியின் மகிழ்ச்சி, புகழனைத்தும் உமதே. கிறிஸ்து வாழ்கிறார்.. என்று இவர் திரு அவைக்கு வழங்கிய ஒவ்வொரு சுற்றுமடலும் திருத்தூது ஊக்கவுரைகளும் திருத்தூது மடல்களும் மிகப்பெரிய கொடைகள்.
மக்கள் மொழியில்.. கடைநிலை ஆன்மீகம் பேசி, கடைநிலை மனிதரையும் கரை சேர்க்க உதவும் இவர்தம் இலக்கு நமக்குத் தெளிவாகிறது. கர்தினால்கள் தலைமைத்துவம் வகிக்கும் உரோமன் க்யூரியாவிற்குள் ஏற்பட்டுள்ள கசடுகளை நீக்குவதற்கும் இவர் அஞ்சவில்லை. தம் ஆலோசகர்களாக ஊ8 என்று எட்டு கர்தினால்களை நியமிக்கும் இவர் துணிச்சல் அலாதியானது. நிதிமேலாண்மையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடிகளைக் கருத்தில் கொண்டு, வெளிப்படைத்தன்மை என்பது திரு அவைக்கு அவசியம் என்று அதனை சீர்படுத்தியவர். ஊழல் கறை படிந்ததாக திரு அவையின் கரங்கள் நீடிக்கக்கூடாது என்பதில் வைராக்கியத்தோடு இருக்கிறார். இரக்கத்தின் ஆண்டு, புனித யோசேப்பின் ஆண்டு.. என்று கர்ம மார்க்கத்தையும் பக்தி மார்க்கத்தையும் திரு அவைக்கு காட்டியவர். நாற்பது திருத்தூதுப் பயணங்களைச் சளைக்காமல் மேற்கொண்டு எல்லா தலத்திரு அவையும் மறுமலர்ச்சிக் காண வேண்டும் என்று ஓய்வின்றி உழைக்கிறார். கூட்டப்பட்டுள்ள உலக ஆயர்கள் மாமன்றம் புதிய விடியலுக்கான கிழக்கு முகம். திரு அவைக்கு தேவையான புனிதர்களைப் பரிந்துரைத்து, புனித தேவசகாயம் உட்பட பலரை புனிதர் நிலைக்கு தகுதி உயர்த்தி புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறார்.
பல்சமய உரையாடலின் வழியாக, இவ்வுலகிற்கு எல்லாரும் இன்புற்றிருக்க அன்பின் பாதையில் அகம் திறக்கிறார். மேடையில் உரையாற்றும்போது ஓடி வந்து கட்டிப்பிடிக்கும் எந்தக் குழந்தையையும் அவர் கடிந்துகொள்வதில்லை. குழந்தையோடு குழந்தையாய் குழந்தை மனநிலையில் நம் எல்லா மனங்களையும் கொள்ளைக்கொள்கிறார். அசிசியில் உயிரோவியமிக்க குடிலைப் பார்க்கச்சென்றபோது தன் தோளில் ஆட்டுக்குட்டியை வைத்த இடையர் சிறுமியிடம் சற்றும் முகம்கோணாமல் நல்லாயன் நானே என்று நானிலத்திற்குப் பறைசாற்றுகின்றார். சிறைவாசிகளின் பாதங்களைக் கழுவி முத்திமிட்டு, வீடற்ற தெருவோரவாசிகளோடு சமபந்தி உணவருந்தி உறவுகளில் உன்னதம் தொடுகின்றார்.
கொரோனா பெருந்தொற்றின்போது கனத்த இதயத்தோடு உரோமை நகர அடைக்கல அன்னையிடம் அவர் சரணாகதி அடைந்து மக்களைக் காத்தருளும் என்று தன்னந்தனியாக செபிக்க வந்தபோது ஆடுகளின் முடை நுகர்ந்த இந்த நல்லாயன் உலகின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டார். உலகின் முதல் தலித் கர்தினால் அந்தோனி பூலா உட்பட..இவர் தேர்ந்த கர்தினால்கள் ஒவ்வொருவரும் திரு அவைப் புதியத் தலைமையின் ஒப்பற்ற எதிர்காலம். விருப்ப ஓய்வுப் பெற்ற முன்னாள் மறைந்த திருத்தந்தையையும் அவர் சந்தித்து உரையாடி உறவைப் புதுப்பிப்பதற்கு தவறவில்லை.
எவரையும் திரு அவையிலிருந்து விலக்கி வைக்கவோ, அவர்களிடமிருந்து விலகி நிற்கவோ இவர் ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அவரைத் தீர்ப்பீடுவதற்கு நான் யார்? என்று தாயுள்ளத்தோடே அனைவரையும் அரவணைக்கிறார். எல்லா நாவுகளுமே.. இப்படிப்பட்ட ஒரு திருத்தந்தை வாழ்கிற காலத்தில் நாமும் வாழ்வது நாம் பெற்ற பேறு என்று அறிக்கையிடுகின்றன.
2017 ஜனவரி முதல் வாரத்தில், ஓர் எளிய சாமானிய குருவான நான் எழுதிய ஒரு சிறு கடிதத்தின் பொருட்டு, திருத்தந்தையைச் சந்திக்கும் சிறப்பு வாய்ப்பு பிப்ரவரி 15 ஆம் தேதி புதன்கிழமை எனக்குக் கிடைத்தது. என் வாழ்நாள் பேறு. என் பெற்றோர் செய்த புண்ணியம். மறைந்த என் நண்பர் ஹெய்னர் பவ்வர் எடுத்த முயற்சி. பத்தாம் நம்பர் டோக்கன். நோயாளிகள், புதிதாக திருமணமான தம்பதியர்கள் அனைவரையும் சந்தித்துவிட்டு எனக்கு முன்பு சந்திக்க இருந்த அனைத்து விருந்தினரையும் 30 வினாடிகளுக்குள் சந்தித்துவிட்டு நகர்ந்தவர், என் அருகே வந்தார்.
அவருக்கு ஓரளவு தெரிந்த ஜெர்மன் மொழியில் என்னை ஓரிரு வரிகளில் அறிமுகம் செய்துவிட்டு, இளஞ்சிவப்பு நிற சால்வை அணிவித்து, அதன் பிறகு என் தம்பி அனுப்பி வைத்த ஏலக்காய் மாலையை அணிவித்து சிறிது விளக்கி, அதன் பிறகு நான் எழுதிய ‘மக்கள் போப், நம்ம போப், நம்ம நண்பன் பிரான்சிஸ், இரக்கமே இறைவனின் பெயர்’ என்ற நான்கு நூல்களையும் சிறிய விளக்கத்துடன் பரிசளித்து, அவரோ, ‘என் புகைப்படம் எங்கே?’ என்று கேட்டார். அவர் புகைப்படத்தை நூலிலிருந்து எடுத்துக்காட்டி, நான்கு நூல்களின் அட்டைப்படங்களையும் ஒட்டுமொத்தமாக பரிசளித்து மகிழ்ந்தேன். நான்கு நிமிடம் கழிந்தது. குருக்களை திருத்தந்தை பொதுவாக தலையில் கை வைத்து ஆசீரளிப்பதில்லை. அவர் என் தலைமீது கைகளை வைத்து என்னை ஆசீர்வதித்தார். ‘நம் வாழ்வு’ வார இதழின் ஆசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்று ஜெர்மன் மொழியில் சொன்னேன். என் தோளில் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தினார். அவர்தம் ஆசீரோடு புன்னகையை என் இதயத்தில் பதித்துவிட்டு அடுத்த விருந்தினரிடம் சென்றார். 30 வினாடிகளுக்குள் கடந்தார்.
திருத்தந்தையுடனான என் சந்திப்பு என் வாழ்நாள் பேறு. என் எழுத்தின் வேள்வி எனக்குப் பெற்றுக்கொடுத்த பெருவெற்றி. அப்போது ஏறக்குறைய 153 புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.
2013-2023! பத்தாம் ஆண்டில் நம் வழிநடத்தும் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நான் வடித்துள்ள இந்தத் தலையங்கம், இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் மக்களின் திருத்தந்தையை இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள பேருதவியாக அமைந்திடட்டும்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைத்துவத்தின் பத்தாம் ஆண்டை முன்னிட்டு, ‘மக்கள் போப்’, ‘நம்ம போப்’ என்ற எனது இரண்டு நூல்களும் 25 சதவீத டிஸ்கவுன்டுடன் ரூ.150க்கு கிடைக்கும். வாங்கிப்படித்து பயனடைந்திடுங்கள். குறைந்த பிரதிகளே உள்ளன.