Namvazhvu
திருத்தந்தை பெண்களின் மேம்பாட்டிற்காக நாம் உழைக்க வேண்டும்
Monday, 13 Mar 2023 10:28 am
Namvazhvu

Namvazhvu

பெண்களின் பங்களிப்பு இல்லாமல் சிறந்த, நியாயமான, ஒளிமயமான, முழுமையான மற்றும் நிலையான உலகத்தைப்  பெறமுடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

"More female leadership for a better world" என்ற நூலிற்கு எழுதியுள்ள அணிந்துரையில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தனக்கு மிகவும் முக்கியமானவை என்றும், பெண்களின் மேம்பாட்டிற்காக இன்னும் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை தான் ஆற்றிய பல உரைகளில் வலியுறுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநீதியை எதிர்த்துப் போராடவும், மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் மதியற்ற பேராசை, அநியாயமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத போரை எதிர்த்துப் போராடுவதற்கு நமக்கு நல்லிணக்கம் தேவை என்பதையும் தனது அணிந்துரையில் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்நூலிலுள்ள ஆய்வுகள் மற்றும் மறுதேடல், வேலை செய்யும் உலகில் உயர் பதவிகளை அடைவதில் பெண்கள் இன்னும் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுகின்றன என்றும்அதேவேளையில், பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் ஆகிய துறைகளில் அவர்களின் உடனிருப்பு, மற்றும் பங்களிப்பை முழுமையாக மேம்படுத்துவதன் வழியாகக் கிடைக்கும் நன்மைகளும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

பெண்களின் சிந்தனை ஆண்களிடமிருந்து வேறுபட்டது என்று உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்றும், அவர்களின் பார்வை கடந்த காலத்தை அல்ல; எதிர்காலத்தை நோக்கியே திரும்புகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

பெரியதொரு மகிழ்ச்சியை அடையவும், புதிய உயிரை பிரசவிக்கவும், புதிய எல்லைகளைத் திறக்கவும் பெண்கள் பிரசவ வலிகளை ஏற்கிறார்கள் என்றும், இதன் காரணமாகவே அவர்கள் எப்போதும் அமைதியை விரும்புகிறார்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நூலில் முன்வைக்கப்பட்ட ஆய்வுகள் மற்றும் பெறப்பட்ட முடிவுகள் யாவும் சமத்துவமின்மை மற்றும் சரியான வழியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அகற்ற உதவுகின்றன என்று விவரித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்கள் முழுமையான சமத்துவத்தைப் பெறும்போது, அமைதி, ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைந்த நிலைத்தன்மை கொண்ட உலகத்திற்கும் அதன்  தேவையான மாற்றத்திற்கும் போதுமான அளவிற்கு அவர்களால் பங்களிப்பு செய்ய முடியும் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்னா மரியா டாரான்டோலோ என்பவரால் தொகுக்கப்பட்டுள்ள " More female leadership for a better world" என்ற இந்த நூலை "Vita e Pensiero" என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது.