Namvazhvu
ஞாயிறு – 19.03.2023 தவக்காலம் நான்காம் ஞாயிறு 1 சாமு 16:1, 6-7, 10-13, எபே 5:8-14, யோவா 9:1-41
Saturday, 18 Mar 2023 06:44 am
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை

இன்று நாம் தவக்காலத்தின் நான்காவது ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். ஆண்டவர் மனிதரின் முகத்தைப் பார்ப்பதில்லை. மாறாக, அவர்களின் அகத்தை பார்க்கிறார் என்ற இறைச்சிந்தனையை இன்றைய நாளின் வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. யூதர்களின் கருத்துப்படி உடல் ஊனமுற்றவர்கள், பார்வையற்றவர்கள், பாவிகளாக கருதப்பட்டனர். ஆனால், ஆண்டவர் இயேசுவோ பார்வை தெரிந்த பரிசேயர்களே பாவிகள் என்று கூறுகிறார். ஓய்வு நாளில், பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரை ஆண்டவர் இயேசு குணப்படுத்துகிறார். தான் பார்வைபெற்றதை குறித்து தன்னிடம் வினவிய யூதர்களுக்கும், பரிசேயர்களுக்கும், இயேசு என்னும் மனிதர் தனக்கு பார்வை தந்ததாக கூறுகிறார். இந்த யூதர்களும், பரிசேயர்களும் இந்த பிறவிக்குருடனுக்கு பார்வை தந்த அவர் யார் என்பதை  அறிந்து கொள்ள விருப்பப்படாமல், கடவுளின் சட்டத்தை மீறி, ஒருவர் ஓய்வு நாளில் இச்செயலை செய்கிறான் என்றால் கண்டிப்பாக அவன் கடவுளிடமிருந்து வர முடியாது என்று கூறி, தங்கள் நம்பிக்கை கண்களை திறக்க மறுத்து விடுகிறார்கள். பார்வை பெற்ற அந்த மனிதரை மீண்டும் சந்தித்த ஆண்டவர் இயேசு, மானிட மகனிடம் நம்பிக்கை கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். அந்த மனிதரோ, மானிட மகன் யார் என்று வினவ, அப்போது ஆண்டவர் இயேசு உம்மோடு உரையாடிக் கொண்டிருப்பவரே என்று கூற, அவர் சற்றும் தாமதிக்காமல், ஆண்டவரே உம்மை நம்புகிறேன் என்று கூறுகிறார். இயேசு என்கிற மனிதர் எனக்கு பார்வை தந்தார் என்று சொன்னவர், இப்போது ஆண்டவரே உம்மை நம்புகிறேன் என்று கூறுகிறார். ஆம், நம்பிக்கை என்னும் அவரது ஆன்மாவின் கண்கள் திறக்கப்பட்டன. ஆனால், பரிசேயர்கள் தங்கள் ஆன்ம கண்களை திறக்க மறுத்து விட்டனர். தவக்காலத்தில் இருக்கும் நாம், நம்பிக்கை எனும் நமது ஆன்ம கண்களை ஆண்டவர் மீது பதித்திட இத்திருப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

மனிதரோ முகத்தைப் பார்க்கின்றனர், நானோ அவர்களின் அகத்தை பார்க்கிறேன் என்றுரைத்து, அரசர் சவுலைப் புறக்கணித்து, தாவீதை அரசராக திருநிலைப்படுத்தும்படி இறைவாக்கினர் சாமுவேலை ஆண்டவர் அனுப்புகிறார் என்றுறைக்கும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவர் இயேசுவே இருளை அழித்த ஒளி, நாம் அனைவரும் இந்த ஒளியைச் சார்ந்தவர்கள். எனவே, ஒளிக்குரிய செயல்களை, வாழ்வை நாம் பிரதிபலிக்க வேண்டும் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. இரக்கமுள்ள தந்தையே! உமது திரு அவையை வழிநடத்தும் உமது திருப்பணியாளர்கள், உமது மக்களை, பாவிகள், குறைபாடுடையவர்கள் என்று ஒதுக்கி விடாமல் அனைவரையும்  உமது அரசை நோக்கி அழைத்து வந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பரிவுள்ள தந்தையே! எமது நாட்டில் அமைதியை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் மீது அக்கறை கொண்டு, லஞ்சம் ஊழலற்ற ஆட்சி புரியும் நல்லத் தலைவர்களை நீர் அளித்து எங்களை வழிநடத்த  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. கனிவுள்ள தந்தையே! நீர் உமது ஆவியால் அருட்பொழிவு செய்து, ஞான மேய்ப்பர்களாக அளித்திருக்கும் அருட்பணியாளர்களுக்கு, நாங்கள் உறுதுணையாக இருந்து, அவர்களுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அனைத்தையும் படைத்தவரே! உடல் குறைபாடுகளோடு உள்ள எங்கள் சகோதர, சகோதரிகளை காணும் போது, இவர்கள் வழியாகவே உமது மாட்சி இவ்வுலகில் வரப்போகிறது என்பதில் நம்பிக்கை கொண்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்களை கண்போன்று காப்பவரே! எங்களோடு வாழுகின்ற கண்பார்வையற்ற சகோதர, சகோதரிகளுக்கு, நாங்கள் கண்தானம் செய்யக்கூடியவர்களாக மாறிடும் எண்ணத்தை நீர் எங்களுள் ஏற்படுத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.