Namvazhvu
ஆளுநர் பேராவ வாஸ் தெ அமரால் தமிழகத்தில் கிறிஸ்தவம்
Saturday, 18 Mar 2023 07:15 am
Namvazhvu

Namvazhvu

முத்துக் குளித்துறையில்

இயேசு சபையினர்

16-17 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம்

14 ஆம் நூற்றாண்டு முதல் தமிழ்நாடு விஜயநகர அரசின்கீழ் செஞ்சி, தஞ்சாவூர், மதுரை என மூன்று மாநிலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாநிலமும் தலைமை ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்பட்டது. அவர்கள் நாயக்கர்கள் என அழைக்கப்பட்டனர். செஞ்சி மாநிலம் வடக்கே பாலாறு முதல் தெற்கே கொள்ளிடம் வரையும், தஞ்சை மாநிலம் காவேரி டெல்டா பகுதிகள் முழுமையும் கொண்டிருந்தது. திருச்சி முதல் கன்னியாகுமரி வரையுள்ள தென்தமிழகம் முழுமையும் கொங்கு பகுதியான சேலம் மற்றும் கோவை இணைந்து மதுரை மாநிலமாக விளங்கியது. நாயக்கர்கள் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள், இவர்கள் காலத்தில் தமிழகமெங்கும் தெலுங்கு மொழி பரவி வளர்ச்சிப் பெற்றது. 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்களான போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், ஆலந்துக்காரர், ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் தமிழக கடலோரங்களில் பண்டக சாலைகளை நிறுவி வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழகம் முழுமையும் ஒரே ஆட்சியின் கீழ் இருந்ததால், வெளிநாட்டு தலையீடுகள் பெரிதாக இல்லை. ஆனாலும் ஆங்காங்கே குறுநில மன்னர்களின் சண்டைகள் மற்றும் குழப்பங்களால் மக்களின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

சாதிய ஏற்றத் தாழ்வுகள் மக்களின் ஒற்றுமையையும், பொருளாதார வளர்ச்சியையும் கெடுத்துக் கொண்டிருந்தன. விவசாயமே பிரதான தொழிலாக இருந்ததால், வயல்வெளிகள் சூழ்ந்த கிராம பகுதிகளே பெரும்பான்மையாக இருந்தன. 1646 முதல் 1686 வரை தமிழகத்தை தாக்கிய கொடிய பஞ்சம் ஆயிரக்கணக்கானோரை பலி கொண்டது. இந்தப் பஞ்சத்தின் கோரப்பசிக்கு மயிலாப்பூரில் 15000 பேர்களும்,சென்னையில் 3000 பேர்களும் நாகப்பட்டினம், முத்துக் குளித்துறை மற்றும் உள்பகுதிகளிலும் பலர் பலியானார்கள்.பெற்றோர்களே ஒரு கைப்பிடி அரிசிக்கு தங்களது குழந்தைகளை விற்று, பசியை போக்கிக் கொண்ட அவல நிலை ஏற்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் சைவம், வைணவம் மற்றும் நாட்டுப்புறத் தெய்வங்களையே பெரும்பான்மையினர் வழிபட்டனர். குறைந்த எண்ணிக்கையில் சமணரும், முகமதியரும் வாழ்ந்து வந்தனர். காஞ்சிபுரம் மற்றும் நாகப்பட்டினத்தில் பௌத்த நம்பிக்கையாளர்களும் வாழ்ந்தனர். விஜயநகரப் பேரரசர்கள் திருமால் பக்தியைப் போற்றி வளர்த்தனர். ஆனால் மதுரை நாயக்கர்கள் மட்டும் சிவநெறியை ஆதரித்தனர். தாயுமானவர், குமரகுருபரர், சிவபிரகாசர் ஆகிய ஆன்மீகப் புலவர்களால் தமிழ்மொழி ஆட்சியாளர்களின் ஆதரவின்றியும் செழித்தோங்கியது.

பணியாரச் சண்டையும் பரதவரின் எழுச்சியும்

16 ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரத்தின் காயல்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை இடைப்பட்ட கடற்கரை மீனவ கிராமங்கள் முத்துக்குளித்துறை என வழங்கப்படுகிறது. இப்பகுதியில் வாழும் மீனவ குடிகள் பரதவ குல மக்கள் என அழைக்கப்படுகின்றனர். மீன்பிடி தொழிலில் மட்டுமல்லாமல் முத்துக்குளிப்பதிலும் சிறந்து விளங்கினார்கள். சங்க இலக்கியங்களும் இவர்களின் தொழில் பெருமைகளைப் பறைசாற்றுகிறது. அரபிக்கடல் மற்றும் வங்க கடல் ஓரங்களில் 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் தங்கள் வாணிப கழகங்கள் அமைத்த போது முத்துக்குளித்துறை பகுதி அரசுகளின் ஆளுகையின்கீழ் இருந்தது தெற்கு பகுதியில் கொல்லம் அரசுக்குட்பட்டும் மத்திய பகுதி கயத்தாருக்கும் வடக்கு பகுதி தம்பிச்சிநாயக்கருக்கும் உட்பட்டிருந்தன. தம்பிச்சிநாயக்கரும் கயத்தார் சிற்றரசரும் விஜயநகர பேரரசுக்கு கப்பம் கட்டினர். முத்துக்குளிப்பது என்பது உயிரை பணயம் வைக்கும் தொழிலாகும். கடலின் அடிப்பகுதிக்கு சென்று கடல் படுக்கையில் கிடக்கும் முத்துசிற்பிகள் நகரைக்கு கொண்டுவந்து அச்சிப்பிகளில் சிலவற்றில் காணப்படும் சிறிதும் பெரிதுமான முத்துக்களைச் சேகரிக்கும் தொழிலில் ஈடுபடுவர். இவர்களின் முதலாளிகள் முத்துக்களை உலகச்சந்தையில் நல்லவிலைக்கு பெற்று பெரும்செல்வம் ஈட்டினர். 1516 இல் காயல்பட்டினத்தைச் சேர்ந்த முகமதியர்கள் சேரமன்னன் உதயமார்த்தாண்ட வர்மனிடமிருந்து முத்துக்குளித்துறையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து ஏழை பாட்டாளிகளான பரதவர்களின் கடின உழைப்பை சுரண்டி ஏமாற்றி அவர்களை அடிமைகளாக நடத்தினர். இவ்வாறு அரசுகளின் துணையுடன் தங்களின் உரிமைகளை பறித்து உழைப்பையும் உயிரையும் உறிஞ்சி சுகபோக வாழ்வு நடத்திய இஸ்லாமிய முதலாளிகளைப் பரதவர் அறவே வெறுத்தனர்.

இரு பிரிவினருக்கும் இடையே அவ்வப்போது சிறுசிறு பிரச்சனைகள் வெடித்துக் கொண்டிருந்தன. 1532 இல் தூத்துக்குடியில் முகமதிய பெண்களிடம் பணியாரம் வாங்க சென்ற பரதவ மீனவ பெண் தான் அவமதிக்கப்பட்டதாகக் கூற, புகைந்து கொண்டிருந்த அவர்களுக்கு இடையேயான பிரச்சனை பெரும் பூகம்பமாக வெடித்தது. இதனால் முத்துக்குளித்துறை மீனவ சமூகம் முகமதியர்களுக்காக கடலில் மூழ்கி முத்து எடுப்பதில்லை என முடிவெடுத்து உறுதியாக நின்றனர். அவமதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும் உறவினர்களும் வெகுண்டெழுந்தனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே கலவரம் வெடித்திட இஸ்லாமிய வன்முறையாளர்களின் காதுகளை துண்டித்தனர். இதனால் ஆதிக்கமும் பணபலமும் கொண்ட இஸ்லாமியர்கள் நாயக்கர்களின் உதவியுடன் காடுகளிலும் மற்ற இடங்களிலும் மறைந்திருந்த பரதவர்கள் பலரை விரட்டி வெட்டிக் கொன்றனர். மேலும் ஒரு பரதவரின் தலைக்கு பணம் வீதம் நூற்றுக்கணக்கான பரதவர்கள் கொல்லப்பட்டு அச்சமூகமே முற்றிலும் அழிந்துவிடும் பெரும் அபாயம் ஏற்பட்டது. அப்பாவி பரதவர்களுக்கு எதிராக நடக்கும் கொடூரத்தைக் கண்டு வேதனை அடைந்த ஜான் தெ குருசு என்ற கோழிக்கோட்டைச் சார்ந்த கிறிஸ்தவர் அவர்களுக்கு உதவிட முன்வந்தார். அறிவும் ஆற்றலும் நிறைந்த ஜான் தெ குருசு தனது 15 ஆவது வயதில் அரசன் சாமாராவ் அவர்களால் போர்த்துக்கலுக்கு அனுப்பப்பட்டார். அங்கு அரசர், உயர் அதிகாரிகள் மற்றும் போர்த்துக்கீசிய மக்களோடு நெருங்கி பழகி கிறிஸ்தவ மறையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இவர் பரதவர்களிடம் நீங்கள் கிறிஸ்தவத்தை தழுவினால் போர்த்துக்கீசியரின் உதவியை பெற்று இஸ்லாமியரின் கொலைவெறி ஆட்டத்தில் இருந்து பிழைக்கலாம் என்று ஆலோசனையை   வழங்கினார். இதற்கு பரதவர்கள் பெருமளவில் சம்மதம் தெரிவித்தனர். எனவே அவர்களின் 15 தலைமை (பட்டங்கட்டிகள்) பிரதிநிதிகளோடு கொச்சின் ஆளுநர் பேராவ வாஸ் தெ அமரால் அவர்களைச் சந்தித்து இஸ்லாமியரின் அடக்குமுறைகளில் இருந்து எங்களைக் காப்பாற்றினால் எங்கள் சமூகம் முழுவதும் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ளும் என தெரிவித்தனர். இன்னும் 70 பட்டங்கட்டிகளை வரச் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் தீர்க்கமாக அறிந்து முதலில் இந்த 85 பரதவ தலைவர்களுக்கு கோவா மறை மாவட்ட முதன்மை குரு திருமுழுக்களித்தார். கோவா ஆளுநர் மார்ட்டின் டிசோசாவால் அனுப்பப்பட்ட போர்த்துக்கீசிய படை இராமநாதபுரம் பாம்பன் அருகே உள்ள வேதாளை என்னும் இடத்தில் இஸ்லாமிய படைகளைத் தாக்கி நிலைகுலையச் செய்து பரதவரின் தொடர் வேதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. போர்த்துக்கீசிய படையின் ஆளுமையைக் கண்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த பரதவர்கள் அனைவரும் கிறிஸ்தவத்தை தழுவ முன் வந்தனர். இதற்கு சேர மன்னன் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க அரேபிய குதிரைகள் பரிசாக வழங்கப்பட்டன.

(தொடரும்)