Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் சிறந்த உலகத்துக்கான பெண் தலைமைத்துவம்
Saturday, 18 Mar 2023 08:01 am
Namvazhvu

Namvazhvu

பெண்களுக்கு ஆதரவாகவும், பாகுபாடு காட்டாமல் அனைவரையும் ஒருங்கிணைக்கவும், பொருளாதாரம், கலாச்சாரம், இனம், மதம் மற்றும் பாலினம் அளவில் மிகவும் பலவீனமான பெண்களை ஒருங்கிணைக்கும் ஓர் அழைப்பாகஒரு சிறந்த உலகத்துக்கான பெண் தலைமைத்துவம்என்ற புத்தகம் உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

மார்ச் 11 ஆம் தேதி சனிக்கிழமை  Centesimus Annus  திருமடலின் குழு உறுப்பினர்கள் மற்றும் (SACRU) கத்தோலிக்க ஆய்வுப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பினரை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பன்முகத்தன்மை, பன்முக கலாச்சாரம் மற்றும் வெவ்வேறு உணர்திறன்களின் பகிர்வுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இப்புத்தகம் திகழ்வதாகவும் எடுத்துரைத்தார்

ஒரு சிறந்த உலகத்துக்கான பெண் தலைமைத்துவம் என்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் அவ்வுறுப்பினர்களை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகெங்கிலும் பரவியுள்ள கத்தோலிக்க பல்கலைக்கழகங்களின்  ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புகளின் விளைவாகவும், ஒரு புதிய மற்றும் குறிப்பிடத்தக்க வழிமுறையாகவும் இந்நிகழ்வு அமைந்துள்ளதாக எடுத்துரைத்தார்.

புத்தகத்தின் உள்ளடக்கங்களின் செழுமையானது அனுபவங்கள், திறன்கள், உணர்வுகள், வழிகள், மற்றும் வேறுபட்ட அணுகுமுறைகளின் பங்களிப்பிலிருந்து பெறப்படுகிறது என்றும், பன்முகத்தன்மை, பன்முக கலாச்சாரம் மற்றும் வெவ்வேறு உணர்திறன்களின் பகிர்வுக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.

அதிக உள்ளடக்கம், மற்றவர்களுக்கு அதிக மரியாதை மற்றும் புதிய சவால்களை புதிய வழியில் எதிர்கொள்வதற்கு பெண்களின் பங்களிப்பு என்ற மூன்று அம்சங்களை அடிக்கோடிட்டு எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்களை அடிக்கடி பாதிக்கும் பாகுபாடு, பிரச்சனை மற்றும் சமூகத்தின் பிற பலவீனமான பிரிவுகள் பற்றியும் நினைவுகூர்ந்தார்.

அதிக உள்ளடக்கம்

பன்முகத்தன்மை ஒருபோதும் சமத்துவமின்மைக்கு வழிவகுக்கக் கூடாது, மாறாக நன்றியுணர்வு மற்றும் பரஸ்பர ஏற்றுக்கொள்ளலுக்கு வழிவகுக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்திய திருத்தந்தை, உண்மையான ஞானத்தின் அம்சங்களுடன், ஒன்றாக நடப்பதைக் கற்றுக்கொண்டு வாழ்வதன் வழியாகவே அமைதியை உருவாக்க முடியும் என்றும் எடுத்துரைத்தார்.

பெண்களுக்கு ஆதரவாகவும், பாகுபாடு காட்டாமல் அனைவரையும் ஒருங்கிணைக்கவும், குறிப்பாக பொருளாதார, கலாச்சார, இன, மத மற்றும் பாலின அளவில் மிகவும் பலவீனமானவர்களை ஒருங்கிணைக்க ஒரு அழைப்பாக இப்புத்தகம் உள்ளது என்றும், ஒரு தாய், தன் குழந்தைகளை ஒரே கையின் வெவ்வேறு விரல்களாக தனித்துவத்துடன் பார்ப்பது போல பார்க்கும் திட்டமாக உள்ளது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.

மற்றவருக்கு அதிக மரியாதை

ஒவ்வொரு நபரின் மாண்பு, அடிப்படை உரிமைகளான  கல்வி, வேலை, கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும், வன்முறை, சுரண்டல், ஓரங்கட்டப்படுதல், தேவையற்ற அழுத்தங்கள் மற்றும் அத்துமீறலுக்கு எளிதில் ஆளாகும் பெண்களின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்து பாதுகாப்பையும் உண்மையான விடுதலையையும் வழங்கவேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.

புதிய சவால்களை ஒரு புதிய வழியில் எதிர்கொள்வது.

பொது நலனுக்கான பெண்களின் பங்களிப்பு மற்றும் ஈடுசெய்ய முடியாத தனித்தன்மை மறுக்க முடியாதது என்று கூறிய திருத்தந்தை, மீட்பின் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனைகளைத் தீர்மானிப்பது பெரும்பாலும் பெண்களே என்றும் கூறினார்.

மேலும்சாரா, ரெபேக்கா, யூதித், சூசன்னா, ரூத், அன்னைமரியா, சிலுவையின் அடியில் இயேசுவைப் பின்தொடர்ந்த பெண்கள் மற்றும் திருஅவை வரலாற்றில் இடம்பெற்ற பெண் புனிதர்களான சியன்னாவின் கேத்தரின், ஜோசப்பின் பகிதா, எடித் ஸ்டெய்ன், அன்னை தெரசா  போன்றோரையும் நினைவு கூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ், தங்களின்  உறுதிப்பாடு, தைரியம், நம்பகத்தன்மை, துன்பத்தை அனுபவிக்கும் திறனால், மகிழ்ச்சி, நேர்மை, பணிவு, விடாமுயற்சி ஆகியவற்றைக் கவர்ந்தவர்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

நம் வரலாறு இது போன்ற பிரபலமான மற்றும் அறியப்படாத பெண்களால் நிறைந்துள்ளது என்றும் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் திருஅவையின் பயணத்தை முன்னெடுத்துச் செல்பவர்களும் பெண்களே என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார். திருத்தந்தை 13 ஆம் லியோ அவர்கள், 1891 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி, மூலதனம் மற்றும் தொழிலின் உரிமைகள் மற்றும் கடமைகளை வலியுறுத்தும், Rerum Novarum என்ற திருமடலை வெளியிட்டார். அதன் நூறாவது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் Centesimus Annus  என்னும் திருமடலை திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் 1991 ஆம் ஆண்டு வெளியிட்டார்.