இந்தியாவின் தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரள மாநில கத்தோலிக்க ஆயர் பேரவையானது, கிறிஸ்தவ மதத்தையும் ஆண்டவர் இயேசுவின் வழித்தோன்றல்களாக கருதப்படும் குருக்களையும், அருட்கன்னியர்களையும் இழிவுபடுத்தும் வகையில் அரங்கேற்றப்பட்டு வரும் காக்குகளி என்ற மலையாள நாடகத்தை தடை செய்ய வேண்டுமென்று ஆளும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கேரள கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் கர்தினால் பசேலியோஸ் கிளீமிஸ், “இந்த நாடகத்தை உடனடியாக தடை செய்யுமாறு வேண்டுகிறேன். இது கிறிஸ்துவ மதத்தின் கொள்கைகளுக்கும் சமூகத்திற்கும் எதிராக இயற்றப்பட்டிருக்கிறது. சமூக நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் அருட்பணியாளர்கள் குறிப்பாக அருட்கன்னியர்களின் வாழ்க்கை முறையை மிக மிக கேவலமாக சித்தரிக்கும் இந்த நாடகத்தை தடை செய்து, அதை இயக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க அரசு முனைய வேண்டும்” என்று மார்ச் 13 ஆம் தேதி UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
கேரள கத்தோலிக்க திரு அவையின் வாழ்வுரிமை இயக்கத்தின் பொறுப்பாளர் அருட்பணியாளர் ஜேக்கப் ஜி பாலக்கப்பிள்ளி, “கேரளாவில் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடந்த சர்வதேச நாடக விழாவில் இந்நாடகமும் அரங்கேற்றப்பட்டது. அப்போதிலிருந்தே நாடகத்தை தடை செய்ய வேண்டுமென்று மாநில அரசாங்கத்திடம் நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை அரசாங்கம் எந்த ஒரு தகுந்த பதிலையும் அளிக்கவில்லை. இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு அதிலும் குறிப்பாக கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்கு கத்தோலிக்க அருட்பணியாளர்களும் அருட்சகோதரிகளும் ஆற்றி வருகிற பணிகளை மாநில அரசு ஒருபோதும் மறந்து விடக்கூடாது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தவோ கேலி செய்யவோ யாருக்கும் உரிமை இல்லை” என்று கூறினார். கேரளாவின் 33 மில்லியன் மக்கள் தொகையில், கிறிஸ்தவர்கள் 18 சதவீதம் உள்ளனர்.