ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் திருத்தலத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொள்ளும் தவக்காலத் திருப்பயணம் கிறிஸ்தவத்தை மட்டுமல்ல; தவக்காலத்தையும் ஒருங்கே மெருகேற்றுகிறது. இந்திய இலங்கை நல்லுறவுக்கு பாலம் அமைக்கும் இப்பயணம், தமிழ்ப் பேசும் கிறிஸ்தவர்களின் மாபெரும் விசுவாசப் பயணம் என்றால் அது மிகையன்று.
தீவுப் பங்கு என்று அழைக்கப்படும் இராமேஸ்வரம் வேர்க்கோடு பங்கு கடலோர கிறிஸ்தவத்தின் வேரை கச்சத்தீவு வரை நீடித்திருக்கிறது. கச்சத்தீவு கையை விட்டு போனபோதும் புனித அந்தோனியாரின் கரம் பற்றி பாரம்பரிய மீனவர்கள் இன்றும் விசுவாசப் பயணம் மேற்கொள்கின்றனர்.
பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் மூலம், கச்சத்தீவு அந்தோனியார் திருத்தலத்திற்கான தவக்கால யாத்திரை மேற்கொள்ள அழைப்பு சிவகங்கை மறைமாவட்ட ஆயருக்கும் வேர்க்கோடு பங்குத்தந்தைக்கும் விடுக்கப்படும். தமிழக அரசும் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தது. இராமநாதபுர மாவட்ட அரசு நிர்வாகத்தின் துணையுடன், மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலில் வேர்க்கோடு பங்குத்தந்தை அருள்பணி. தேவசகாயம் அதற்கான ஏற்பாடுகளை உள்நாட்டு மீனவர் அமைப்புகளுடன் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தார்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் ஒவ்வொரு தனிநபரும் கச்சத்தீவு பயணிப்பதற்கான விண்ணப்ப படிவத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை குறிப்பிட்டு பிப்ரவரி 02 ஆம் தேதி அன்று விநியோகம் செய்து பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் ஆதார் அடையாள அட்டை நகலுடன், காவல்துறையின் ஆட்சேபனை சம்மதச் சான்றிதழின் ஆன்லைன் நகல் இணைத்து, இரண்டு புகைப்படங்களுடன் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட ரூ.2000 கட்டணத்தைச் செலுத்த வேண்டும் (மாற்றத்திற்குட்பட்டது). காவல்துறையின் விசாரணை அறிக்கை (Police Verification Report- PVR) ரூ.500 செலுத்தி அரசு இணைய தளத்தில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்ப ஏற்பு ஒப்புதல் படிவம் கிடைக்கப்பெறும். அதனை விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவம் பங்கு நிர்வாகத்தைச் சென்று சேர்ந்தவுடன் மாவட்ட ரீதியாக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை விவரம் சரிபார்க்கப்பட்டு, காவல்துறையின் புலன் விசாரணை அமைப்பின் மேல் விசாரணைக்கு அனுப்பிவைக்கப்படும். விண்ணப்பதாரரின் காவல் சரகத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் நேரடி விசாரணைக்குப் பிறகு, மேலதிகாரி ஒப்புதலை அந்தந்த மாவட்ட புலன் விசாரணை காவல்துறையினர் சரிபார்ப்பு செய்து இராமநாதபுரம் காவல்துறை மற்றும் ஆட்சித்துறை நிர்வாகத்திற்கு அனுப்பி வைப்பர். காவல்துறையின் ஆட்சேபனையில்லாத சான்றிதழ் உரிய விசாரணை முடிந்த பிறகு இணையத்தில் உரிய பயணர் பெயர் மற்றும் OTP பெற்ற பிறகு பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்.
கச்சத்தீவு திருப்பயணம்
மேற்கண்ட இந்த நடவடிக்கைகள் முடிந்தபிறகு. முந்தைய நாள், அதாவது இரண்டாவது வெள்ளிக்கிழமைக்கு முந்தைய நாள், வியாழக்கிழமை மாலையில் திருப்பயணிகள் அனைவரும் இராமேஸ்வரம் வந்து அவர்களுக்குரிய புகைப்படம் ஒட்டிய அடையாள அனுமதி அட்டையை வேர்க்கோடு பங்கு ஆலய வளாகத்தில் இதற்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த அடையாள அட்டை மிக மிக முக்கியமானது. இந்தியாவிலிருந்து புறப்பட்டு, மீண்டும் இந்தியக் கரையை வந்தடையும்வரை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதில் படகு எண், படகு புறப்படும் நேரம், அதன் வரிசை எண், கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும். படகு புறப்படும் இடத்தில், கட்டுப்பாடு மிக்க நுழைவாயில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும். சுங்கத்துறை அதிகாரிகள், குடியுரிமைத் துறை அதிகாரிகள், தமிழகக் காவல்துறை அதிகாரிகள், கடலோரக் காவல்துறை அதிகாரிகள், இந்திய கப்பல்படை அதிகாரிகள் படகு வாரியாக பயணிகளை பெயர்ப்பட்டியல் படி உரிய நேரத்தில் அழைத்து, சரிபார்த்து, காவல்துறையின் இறுதி ஆட்சேபனையில்லா சான்றிதழின் இறுதிப் படிவத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.
சுங்கத்துறையினர் உடைமைகளைப் பரிசோதித்து ஒப்புதல் தந்த பிறகு, அனுமதிக்கப்பட்ட இந்திய ரூபாய் 3000 த்துடன் அந்தந்த படகுகளுக்கான குறிக்கப்பட்ட இடத்தில் அந்தப் படகில் பயணம் செய்யும் அனைவரும் வரிசைப் படி நிற்க வேண்டும். ஒவ்வொரு படகிலும் குறைந்தப்பட்சம் 30 திருப்பயணிகளும் 5 படகு பணியாளர்களும் செல்வர். முதல் படகை இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து பயணத்தைத் தொடங்கி வைப்பார். படகில் ஏறுகிற போதும் மீண்டும் ஒருமுறை பெயர்ப்பட்டியல் சரிபார்க்கப்படும். ஒவ்வொரு திருப்பயணியும் வெள்ளிக்கிழமைக்கான காலை உணவையும் மதிய உணவையும் கொண்டு வரவேண்டும். வெள்ளிக்கிழமை இரவுக்கான உணவும் சனிக்கிழமைக்கான காலை உணவும் கச்சத்தீவில் இலங்கை அரசால் வழங்கப்படும். இலங்கை அரசுக்கு இந்திய அரசு போதுமான நிதி உதவி வழங்கி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
காலை 5 மணி முதல் மாலை நான்கு மணி வரை 60க்கும் மேற்பட்ட படகுகள் இராமேஸ்வரம் படகுத்துறையிலிருந்து புறப்படும். 2500 முதல் 3500 வரை திருப்பயணிகள் இந்த கச்சத்தீவு பயணத்தை மேற்கொள்வர். இவ்வாண்டு 60 படகுகளில் 2408 பேர் இந்தியாவிலிருந்து பயணம் மேற்கொண்டனர். இராமேஸ்வரம் கடற்கரையிலிருந்து ஏறக்குறைய 18 நாட்டிக் கல் மைல் தொலைவில் உள்ள கச்சத்தீவை கடலலை மற்றும் காற்றின் வேகத்தைப் பொறுத்து ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டரை மணி நேரம் வரை எடுக்கும். உரிய ஜிபிஎஸ் கருவிகளுடன், உயிர்பாதுகாப்பு கவசம் அணிந்த திருப்பயணிககளுடன் படகு புறப்பட்டுச் செல்கிறபோதே, இந்தியக் கடற்படையின் கப்பல் புறப்பட்ட படகை தணிக்கைக்குள்ளாக்கும். படகு ஓட்டுநரிடம் படகில் உள்ள ஆண்-பெண் பயணிகளின் எண்ணிக்கை, படகு எண், படகு பணியாளர்களுடைய எண்ணிக்கை ஆகியவற்றை ஆய்வுக்குட்படுத்துவர். அவர்கள் ஒப்புதல் தந்த பிறகு செல்ல வேண்டிய பாதையில் படகு கச்சத்தீவை நோக்கி பயணிக்கும். இடையிடையே இந்தியக் கப்பல் படையின் கப்பல்கள் படகிலுள்ளவர்களை தொலைநோக்கியுடன் தணிக்கைக்குள்ளாக்கும். தங்களிடம் உள்ள பட்டியலையும் சரிபார்ப்பர்.
சர்வதேச எல்லையை அடைந்தவுடன் உரிய வழிமுறையுடன் இலங்கை கப்பற்படையின் கண்காணிப்பில் திருப்பயணிகளின் படகுகள் இலங்கையின் கடல் எல்லைக்குள் சில நாட்டிக்கல் மைல் தொலை பயணிக்கும். அவ்வப்போது இலங்கை கடற்படையினரும் உரிய தணிக்கை செய்து கச்சத்தீவு நோக்கிப் பயணிக்க அனுமதிப்பர். தொலைவில் 285 கிலோமீட்டர் பரப்பளவிலுள்ள கச்சத்தீவு தெரியத்தொடங்கும்போது மனதிற்குள்ளும் அலையடிக்கும். அங்கு ஊன்றப்பட்டுள்ள இலங்கை கொடி நம் அனைவரையும் அன்போடு வரவேற்பதுபோல அலைகளுக்குப் போட்டியாக அசைந்தாடி ஆர்ப்பரிக்கும். படகு நிற்பதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள படகுத்துறையில் ஒவ்வொரு படகாக திருப்பயணிகளை இறக்கிவிட்டு இடம் பெயர வேண்டும். பயணிகள் தங்களின் உடைமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு இறங்க வேண்டும். தமிழகத் திருப்பயணிகளை வரவேற்று தூய தமிழில் அறிவிப்பு வழங்கப்படுகிறது. உற்சாகம் பொங்க இறங்கி கச்சத்தீவில் கால் பதிக்கும்போது, இலங்கை அரசின் குடியேற்றத்துறையின் சார்பாக, இலங்கைப் பயணிகளுக்கு தனியாகவும் இந்தியப் பயணிகள் தனியாகவும் சோதனைக்குள்ளாக்கப்பட்டு, ஆவணங்களைச் சரிபார்க்கும் பணி நடைபெறும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி வரிசை உண்டு. அங்கிருந்து 800 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தை நோக்கி அகலப்படுத்தப்பட்ட மண்பாதையில் நடக்க வேண்டும். உச்சிவெயில் நம்மைச் சுட்டெரிக்கும். கடற்காற்று நம்மை ஆசுவாசப்படுத்தும். ஆங்காங்கே பழச்சாறு கடைகள் நம் தாகம் தணிக்கும். யாத்திரிகர்களை நம்பி ஒரு சில யாசகர்களும் வழியோரம் விழிவைத்து அமர்ந்திருப்பர். ஆலயத்தைச் சற்று நெருங்கும்போது திருவிழாக் கடைகள் நம்மை வரவேற்கும். தரை விரிப்புகளைக் கொண்டு குடும்பம் குடும்பமாக ஆங்காங்கே மர நிழலில், இலங்கை கப்பற்படையினர் அமைத்துள்ள கொட்டகை நிழலில் இளைப்பாறுவர். குருக்களுக்கும் கன்னியர்களுக்கும் இலங்கை இராணுவத்தின் சார்பில் மதிய உணவு பரிமாறப்படுகிறது. குருக்களுக்கும் அருள் சகோதரிகளுக்கும் தனித்தனியே பெரிய அளவிலான நான்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆங்காங்கே மக்களுக்கான குடிநீர் வசதி மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டிருந்தது. அப்பகுதிக்கான நுழைவாயிலில் இராணுவத்தினர் ஆட்கள் நுழையும்போதே உரிய விசாரணை செய்து குருக்களையும் அருள்சகோதரிகளையும் அனுமதிப்பர். இலங்கை இராணுவத்தினருக்கும் அவர்கள்தம் குடும்பத்திற்கும் அனுமதி உண்டு. ஒரு கூடாரம் முழுவதும் பெருந்திரளான எண்ணிக்கையில் இராணுவத்தினர் திருப்பயணிகளுக்கான உணவை தயாரித்து கொண்டிருக்கின்றனர். மறுபுறம் குடிதண்ணீரைக் கொண்டுவருவதற்கான 12000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் லாரி, அதிலிருந்து தண்ணீரைப் பிடித்து பகிர்ந்தளிக்க 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிராக்டரும், குபேட்டாவும் ஓடிக்கொண்டேயிருந்தன. இலங்கை இராணுவத்தின் பயணிகள் கப்பலிலிருந்து இலங்கை திருப்பயணிகள் சாரை சாரையாக வந்துகொண்டேயிருந்தனர். இவ்வாண்டு ஏறக்குறைய 2800பேர் இலங்கையிலிருந்து திருப்பயணிகளும் இந்தியாவிலிருந்து 2408 பேரும் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து 60 விசைப்படகுகளும் 12 நாட்டுப்படகுகளும் இயக்கப்பட்டன. பாதையெங்கும் நொறுக்கப்பட்ட சிறு சிறு (இறந்த) பவளப்பாறைகள் பாதைகளில் பரப்பப்பட்டிருந்தன. கடல் அலைகளின் கொள்ளை அழகும் வீசும் காற்றின் பரவசமும் நம்மை ஆசுவாசப்படுத்தும்.
இருநாட்டினரின் பங்களிப்பு
இலங்கை இராணுவத்தின் கப்பற்படை முகாம் இங்கு நிரந்தரமாக அமைக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 23, 2016 ஆம் ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோனியார் மீது அதீத பக்தி கொண்ட அட்மிரல் விஜயேந்திர குணசிங்க அவர்கள், சிற்றாலயத்தை ஒட்டி, சற்று பெரிய ஆலயம் ஒன்றை பெருமுயற்சி எடுத்து கட்டினார். இராமேஸ்வரம் வேர்க்கோடு பங்கைச் சேர்ந்த மீனவப்பெருங்குடிகள், புனித அந்தோனியாருக்கு பிரத்யேகமாக தேக்கு மரத்தினாலான பிரமாண்டமான கொடிமரத்தையும் அழகிய புனித அந்தோனியார் கொடியையும் தங்கள் பங்களிப்பாக உவந்தளித்தனர். நற்கருணை கதிர்பாத்திரமும் வழங்கி உதவினர்.
கொடியேற்றம் - திருவிழா
இவ்வாண்டிற்கான விழா ஏற்பாடுகளை நெடுந்தீவு பங்குத்தந்தை வசந்தன் அவர்கள் வேர்க்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் அவர்களுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தார். மார்ச் 03, வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு கொடியேற்றத்துடன் இவ்விழா இனிதே தொடங்கியது. அதனைத் தொடர்ந்து திருச்செபமாலை தமிழிலும் சிங்களத்திலும் செபிக்கப்பட்டது. நாலரை மணி முதல் பக்தர்கள் அனைவருக்குமான திருச்சிலுவைப் பாதை பக்தி முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இலங்கைத் தரப்பிலிருந்து ஏழு நிலைகளும், தமிழகத்தரப்பிலிருந்து ஏழு நிலைகளும் தியானிக்கப்பட்டன. மாலை 6 மணிக்கு வேர்க்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் அவர்களின் தலைமையில் நூற்றுக்கணக்கான குருக்கள் பங்கேற்ற திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒரு மணிநேர நற்கருணை ஆராதனை அருள்முனைவர் மரிய அந்தோனி அவர்களின் எழுச்சிமிக்க சிந்தனைகளுடனும் அருள்பணி.சுந்தர் க.ச அவர்களின் ஆவிக்குரிய செப எழுப்புதலுடனும் நடைபெற்றது. இறைமக்களுக்கும் அருள்பணியாளர்களுக்கும் தனித்தனியே உணவு ஏற்பாடு பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தது.
அடுத்தநாள் சனிக்கிழமை காலை ஆறு மணிக்கு கொழும்பு துணை ஆயர் ஆன்டன் ரஞ்சித் பிள்ளை நாயகம் அவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் அதனைத் தொடர்ந்து துணை ஆயர் அவர்களின் தலைமையில் திருவிழாத் திருப்பலியும் தமிழில் நடைபெற்றது. ஆயர் அவர்கள் தமிழிலும் சிங்களத்திலும் சிறப்பான மறையுரை ஆற்றினார். யாழ் மறைமாவட்ட முதன்மைக் குரு ஜோசப் செப ரத்தினம் முன்னிலை வகித்தார். திருப்பலிக்குப் பிறகு நெடுந்தீவு பங்குத்தந்தை வசந்தன் அவர்கள் இலங்கை சார்பாகவும் வேர்க்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் அவர்கள் இந்தியா சார்பாகவும் அரசுக்கும், இராணுவத்திற்கும், மீனவர்களுக்கும் இறைமக்களுக்கும் நன்றித் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மக்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் புனித அந்தோனியார் கொடியிறக்கம் நடைபெற்றது. காலை 10 மணி முதல் இருநாட்டு இறை பக்தர்களைச் சுமந்த அந்தந்த நாட்டுப் படகுகள் கரையை நோக்கி பயணித்தன. அரசு விதிமுறைப்படி மாலை 4 மணிக்குள் கச்சத்தீவு இறைமக்களின்றி மீண்டும் தீவாக தனித்து விடப்பட்டது. தமிழக எல்லையில் உடைமைகள் மீண்டும் பரிசோதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் கரையேற அனுமதிக்கப்பட்டனர். இத்துடன் இலங்கை மற்றும் இந்திய அரசின் ஒத்துழைப்புடன் இவ்வாண்டிற்கான திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அங்கு இருபதுக்கும் மேற்பட்ட நம் வாழ்வு வாசகர்களைச் சந்தித்தது மனதுக்கு ஆறுதலாக இருந்தது.