பெண்களுக்கு சரியான இடத்தை தராத எந்த சமூகமும் எப்போதும் முன்னேறுவதில்லை. இதைப் பற்றிய தனது அனுபவத்தை, 2022 ஆம் ஆண்டு, நவம்பர் 6 ஆம் தேதி பக்ரைனிலிருந்து இத்தாலிக்கு செல்லும் போது, விமானத்தில் அளித்த பேட்டியில் திருத்தந்தை பிரான்சிஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “ஒவ்வொரு முறை பெண்கள் வத்திகானுக்குள் பணிக்காக அமர்த்தப்படுகிறபோது வத்திகானின் நிர்வாகம் முன்பைவிட சிறப்படைவதை நான் அங்கு கண்டதுண்டு.” திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் வத்திக்கானில் அதிகாரமிக்க பொறுப்புகளை பெற்றிருக்கிற பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நியமனங்கள்
திருத்தந்தை பிரான்சிஸ் வத்திகானின் முக்கியமான பல பொறுப்புகளில் பெண்களை நியமித்துள்ளார். அதன் தரவுகள் பின்வருமாறு: வத்திகான் அருங்காட்சியகங்களின் (Vatican Museums) இயக்குநராக பார்பரா ஜட்டா (2016),
சமூகத்தொடர்புக்கான பேராயத்தின் மறைபணி-இறையியல் பிரிவின் (Theological-Pastoral Department of the Dicastery for Communication) இயக்குநராக நட்டாஷா கோவேக்கர் (2016),
பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வுக்கான பேராயத்தின் (Dicastery for Laity Family and Life) துணைச்செயலாளர்களாக லிண்டா கிஸோனி மற்றும் கெபிரியெல்லா கம்பீனோ (2017),
அர்ப்பண வாழ்வுச் சபைகள் மற்றும் மறைதூதுப்பணி வாழ்வுச் சமூகங்களுக்கான பேராயத்தின் (Dicastery for Promoting Integral Human Development) துணைச் செயலாளராக அருள்சகோதரி கார்மென் ரோஸ் நோர்த்தஸ் (2018),
சார்லோட்டே க்ரெயூடெர்-கிர்க்கோப், ஈவா காஸ்டில்லோ சான்ஸ், லெஸ்லி ஜேன் ஃபெர்ரார், மரியா கொலாக், மரியா கொன்செப்சியோன் ஒசாக்கர் கராய்க்கோய்கெயா, ரூத் மரியா கெல்லி ஆகிய ஆறு பெண்களும் வத்திக்கானின் நிதியைமேலாண்மை செய்கிற மன்றத்தில் முக்கிய உறுப்பினர்களாக (Council for the Economy) (2020),
பிரான்செஸ்கா தி ஜொவானி, துணை வெளியுறவு அமைச்சராக (2020),
புனித சவேரியார் மிஷனரி சகோதரிகள் சபையைச் சார்ந்த அருள்சகோதரி நத்தாலி பேக்குவார்ட் ஆயர் மாமன்றத்தின் துணைச்செயலாளராக (2021),
இத்தாலியைச் சேர்ந்த நீதிபதியான கத்சியாசு மாரியா மேல்முறையீட்டிற்கான வத்திகான் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிநெறியாளராக (Promotor of Justice) (2021),
அருள்சகோதரி அலெக்சாந்த்ரா ஸ்மெரில்லி ஒருங்கிணைந்த மனிதவள மேம்பாட்டை ஊக்குவிக்கிற பேராயத்தின் செயலராக (Dicastery for Promoting Integral Human Development) (2021),
முனைவர் ரஃபெல்லா ஜீலியானி அவர்கள் புனித தொல்லியல் துறைக்கான திருஆட்சிப்பீட ஆணையத்தின் (Commission at the Pontifical Commission for Sacred Archaeology) செயலராக மற்றும் பேராசிரியர் ஆன்டோனெல்லா ஷாரொனெ அலிப்ரான்தி கல்வி மற்றும் கலாச்சார பேராயத்தின் (Dicastery for Culture and Education) துணைச் செயலாளராக (2022),
அருள்சகோதரி ரஃபெல்லா பெட்ரினி, அருள்சகோதரி யோவான்னே ரெயுன்கோட மற்றும் முனைவர். மரியா லியா செர்வினோ வத்திக்கானுடைய ஆயர்களுக்கான பேராயத்தின் (Dicastery for Bishops) அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நம் திருத்தந்தை பெண்கள் திருத்தொண்டர்களாகப் பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரும் பெண்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் விதமாக, கத்தோலிக்கத் திரு அவையின் தொடக்ககாலத்தில் இருந்த பெண் திருத்தொண்டர்கள் குறித்த வரலாற்றை ஆராய ஆணையத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றார்.
திருஅவைச் சட்டத்தில்....
புதிய திரு அவைச்சட்டம் (1983), ஆண்கள் மற்றும் பெண்கள் திருஅவையின் உறுப்பினர்களாக திருமுழுக்கின் வழியாக திருஅவையோடு இணைக்கப்படுவதை குறிப்பிடுகின்றது. இவர்கள் தங்கள் நிலைக்கு ஏற்ப தங்களுக்குரிய கடமைகளையும், உரிமைகளையும் கொண்டுள்ளனர் (தி.அ.ச. எண் 96). திரு அவைச்சட்டம் ஆண்களையும், பெண்களையும் சரிசமமாக திரு அவையின் அதிகார மற்றும் பணியமைப்புகளில் பங்கேற்க மற்றும் பணியாற்ற உரிமைகளையும், கடமைகளையும் எடுத்துக்கூறுகின்றது.
தங்களின் உறைவிடத்தை தீர்மானித்தல் (Domicile) (தி.அ.ச. எண் 104), திருமண நேரத்தில் வழிபாட்டு முறையை (Rite) மாற்றிக்கொள்ளுதல் (தி.அ.ச. எண் 112 -1,2), கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களின் சங்கங்களை நிறுவுதல் (தி.அ.ச. எண் 299 -1) அல்லது அதில் தங்களை இணைத்துக் கொள்ளுதல் (தி.அ.ச. எண் 298) ஆகியவற்றில் ஆண்களும், பெண்களும் சமமான உரிமைகளைக் கொண்டுள்ளனர். இறை ஏற்பாட்டின்படி கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களிடையே திருப்பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் சட்டத்தில் திருப்பட்டத்தினர் (clerics) என்றும் அழைக்கப்படுகின்றனர் மற்றக் கிறிஸ்தவ விசுவாசிகள் பொதுநிலையினர் என்றும் அழைக்கப்படுகின்றனர். அருட்சகோதரர்களும், அருட்சகோதரிகளும், பெண் துறவிகளும் மற்ற பெண்களும் பொதுநிலையினர் கூட்டத்தில் அடங்குவர். திருமுழுக்கின் வழியாக ஒவ்வொரு கிறிஸ்தவரும் குறிப்பாக, பொதுநிலையினரும் கிறிஸ்துவின் குருத்துவ, இறைவாக்கு மற்றும் ஆளுகைப் பணிகளில் (Tria-munera) பங்கேற்க அழைக்கப்படுகின்றனர் (தி.அ.ச. எண் 204).
போதகப்பணி
கிறிஸ்துவின் நம்பிக்கையாளர்களில் பொதுநிலையினர் தங்களின் திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதலின் விளைவாக சொல்லாலும் கிறிஸ்தவ வாழ்வின் எடுத்துக்காட்டாலும் நற்செய்திக்குச் சாட்சிகளாய் இருக்கின்றனர்.
இறைவார்த்தைப்பணியில் ஆயருடனும் குருக்களுடனும் ஒத்துழைக்க அவர்களும் அழைக்கப்படலாம் (தி.அ.ச எண் 759). திருவழிபாடுகளில் மறையுரையாற்றும் உரிமை திருப்பணியாளர்களுக்கே உரியது (தி.அ.ச எண் 767-1). ஆனால், சில தருணங்களில் பொதுநிலையினரான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஆலயத்திலோ அல்லது செபக்கூடத்திலோ திருப்பலி நிறைவேறியபின் அல்லது நற்கருணைக் கொண்டாட்டங்களில் போதிக்க திருஅவைச் சட்டம் அனுமதி தருகிறது (தி.அ.ச எண் 766).
இவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த போதனைக்கான அனுமதி மறையுரைக்கு மாற்றாக கருதப்படக்கூடாது. மறைதூதுப் பணியை ஆற்றுவதில் வேதியர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். இவர்கள் தக்கமுறையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ வாழ்வில் தலைசிறந்து விளங்கும் கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களின் பொதுநிலையினர் ஆவர். அவர்கள் ஒரு மறைதூதுப் பணியாளரின் வழிநடத்துதலின் கீழ் நற்செய்திக் கோட்பாட்டை எடுத்துக் கூறுவதிலும், திருவழிபாட்டுச் செயல்களையும், அறப்பணிகளையும் ஏற்பாடு செய்வதிலும் தங்களையே நேர்ந்து கொண்டுள்ளனர். இந்தப் பணிகளிலும் பெண்கள் முழுமையாக ஈடுபட திருஅவைச் சட்டம் வாய்ப்பு அளிக்கின்றது.
திருப்பணியாளர்கள் இல்லாத தருணங்களில், பெண்கள் உட்பட பொதுநிலையினர் அனைவரும் திருப்பணியாளர்களுக்குரிய சில குறிப்பிட்ட பணிகளை செய்யலாம்.
குறிப்பாக, இறைவார்த்தையை எடுத்துரைக்கிற பணி, திருவழிபாட்டு செபங்களை வழிநடத்துதல், திரு அவை சட்டஎண் 230-3 இன் விதியமைப்பின் அடிப்படையில் திருமுழுக்கு அளித்தல் மற்றும் நற்கருணை வழங்குதல் ஆகிய பணிகளில் ஈடுபடலாம்.
திரு அவைசட்ட எண் 830- 1-ஆனது நூல்களை பற்றி தீர்ப்புக்கூறுகிற தலத்திரு அவை ஆளுநரால் தேர்ந்தெடுக்ப்பட்ட தணிக்கையாளர் குழுவில் பொதுநிலையினராகிய ஆண்கள், பெண்கள் இருவருக்கும் இடமளிக்கிறது.
புனிதப்படுத்தும் பணி
திருஅவைச் சட்ட எண் 861-2 விதியமைப்பு சாதாரண திருப்பணியாளர் (Evangelii Gaudium 103) அல்லது பெண்ணோ சரியான எண்ணத்தோடு சட்ட முறைமைப்படி திருமுழுக்கு அளிக்க அனுமதி அளிக்கின்றது.
திருஅவைச் சட்ட எண் 230-2 விதியமைப்பின் படி தேவை எழும் போது பொதுநிலையினர் திருவழிபாட்டு நிகழ்வுகளில் தற்காலிகமாக வாசகர் பணியை (Lector) நிறைவேற்றலாம். அதேபோல, பொதுநிலையினர் விளக்கவுரையாளராக (Commentator) அல்லது பாடகர் குழுத்தலைவராக (Cantor) செயல்பட்டு, திருவழிபாட்டில் ஈடுபாட்டோடு பங்கேற்கலாம். திருஅவைச் சட்ட எண்கள் 230-2 மற்றும் 910- 2 விதியமைப்புகளின் படி பொதுநிலையினராகிய ஆணோ அல்லது பெண்ணோ நற்கருணையை வழங்குகிற அசாதாரண பணியாளர்களாக நியமிக்கப்படலாம். குறிப்பிட்ட சூழ்நிலைகளில், நற்கருணை ஆசீர் வழங்காமல், நற்கருணையை ஆராதனைக்கு வைத்து, அதைத் திருப்பேழையில் மீண்டும் வைக்கும் பணியாளராக பீடத்துணைவர் (Acolyte) இத்திருவிருந்தின் அசாதாரணப் பணியாளர் (Extraordianry Minister of Holy Communion) அல்லது தலத்திரு அவை ஆளுநரால் நியமிக்கப்பட்ட வேறொருவரும் பணியாற்றலாம்.
இந்தப் பணிகளில் பொதுநிலையினராகிய ஆண்களும், பெண்களும் சரிசமமாகப் பங்கேற்கலாம். ஆனால், இக்காரியத்தில் மறைமாவட்ட ஆயரின் விதியமைப்புகளை இவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். திருஅவைச் சட்ட எண் 1112 இன் படி குருக்களோ, திருத்தொண்டர்களோ இல்லாத தருணங்களில் மறைமாவட்ட ஆயர் திரு ஆட்சிப்பீடத்தின் அனுமதியோடு, பொதுநிலையினராகிய ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ திருமணங்களை நடத்தி வைக்க கட்டளை பேராண்மை (Delegation) வழங்கலாம். ஆயரின் அனுமதியோடு தேவையான அதிகாரம் (Requisite Power) கொண்ட பொதுநிலையினராகிய ஆண்கள் மற்றும் பெண்கள் குறிப்பிட்ட சில அருள் வேண்டல் குறிகளை (Sacramentals) நிறைவேற்றலாம் (தி.அ.ச. எண் 1168).
ஆளுகைப் பணி
தகுதிபடைத்த பொதுநிலையினர் குறிப்பிட்ட சில திரு அவை ஆளுகைப் பணிகளை செய்ய அனுமதிக்கப்படலாம். பொருத்தமான கல்வியும், தகுதியும் உடைய பொது நிலையினர் வல்லுனர்களாகவும் (Experts), ஆலோசகர்களாகவும் (Advisors) திரு அவையின் பேரவைகளில் பங்கேற்க திரு அவைச் சட்ட எண் 228-2 வழிவகை செய்கிறது. பொதுநிலையினராகிய ஆண்கள் மற்றும் பெண்கள் மறைமாவட்ட செயலகத்தில் தலைமை செயலராகவோ (Chancellor) அல்லது அவருக்கு உதவியாளராக கொடுக்கப்படும் துணைச் செயலராகவோ (Vice-chancellor) பணி அமர்த்தப்படலாம் (தி.அ.ச. எண் 482). அதேபோல பொதுநிலையினராகிய ஆண்கள் மற்றும் பெண்கள் மறைமாவட்ட எழுத்துப்பதிவாளர்களாகவும் (Diocesan Notaries) பணி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் (தி.அ.ச. எண்கள் 482 -3, 483 -1).
திரு அவைச் சட்டத்தில் குறைந்த பட்சம் முதுநிலைப்பட்டம் மற்றும் நன்மதிப்பும் பெற்ற பொது நிலையினராகிய ஆண்கள் மற்றும் பெண்கள் குழு நீதிமன்ற (Collegiate Tribunal) நீதிபதியாக நியமிக்கபடலாம் (தி.அ.ச. எண் 1421 -2,3). மேலும், வழக்கு விசாரிப்பவராக (Auditor- தி.அ.ச. எண் 1428-2), நீதி நெறியாளராக (Promoter of Justice-தி.அ.ச. எண் 1430), பிணைப்புக் காப்பாளராக (Defender of Bond-தி.அ.ச. எண் 1432), பொதுநிலையினராகிய ஆண்கள் மற்றும் பெண்கள் நியமிக்கப்படலாம். பங்குப் மேய்ப்புபணிப் பேரவை (தி.அ.ச. எண் 536-1) மற்றும் பங்கு நிதிக்குழு (தி.அ.ச. எண் 537) போன்ற பங்கேற்பு அமைப்புகளில் உறுப்பினர்களாக ஆண்கள் மற்றும் பெண்கள் செயல்படலாம்.
மேலும், குருக்கள் பற்றாக்குறை உள்ள தருணங்களில் திருஅவையின் ஆளுநர் தன் அதிகாரத்திற்கு உட்பட்ட பொதுசட்ட ஆளின் (Public Juridical Person) சொத்துகளை நிர்வகிக்கிற நிர்வாகியாக பொதுநிலையினர்களாகிய ஆண்கள் மற்றும் பெண்களை நியமிக்கலாம் (தி.அ.ச. எண் 1279 -2). மறைமாவட்ட மேய்ப்புப்பணிப் பேரவையில் (Diocesan Pastoral Council) பொதுநிலையினராகிய ஆண்கள் மற்றும் பெண்கள் உறுப்பினர்களாக செயலாற்றலாம் (தி.அ.ச. எண். 512). மறைமாவட்ட மன்றத்தின் (Diocesan Synod) உறுப்பினர்களாகவும் இவர்கள் நியமிக்கப்படலாம் (தி.அ.ச. எண் 463).
இவர்கள் இந்த மறைமாவட்ட மன்றத்தில் பங்கெடுப்பதன் மூலம் ஆயரின் சட்டமியற்றும் பணியில் தங்களது பரிந்துரைகளை வழங்கலாம். நமது திரு அவைச்சட்டத்தில் பொதிந்துள்ள இத்தகைய வழிகாட்டல்கள் திரு அவையின் முப்பெரும் பணிகளில் பெண்கள், தங்களையே இணைத்துக்கொள்ள வழிவகை செய்கிறது.
திருஅவையின் நிலையான பணிகளில் பெண்கள்
பெண்கள் தங்களின் ஆயரின் அனுமதியோடு வாசகங்கள் வாசிப்பதையும், திருப்பலியில் பீடப்பணி புரிவதிலும் ஈடுபட்டிருந்தாலும், 2021 ஆம் ஆண்டு வரை நம் திரு அவைச்சட்டம் வாசகர் மற்றும் பீடத்துணைவர் பணிகளில் பெண்கள் நிலையான முறையில் அமர்த்தப்படுவதை தடைசெய்து அவர்களை விலக்கியே வைத்திருந்தது. அது ஆண்களுக்கு மட்டுமே உரியது என்ற நிலை இருந்தது.
ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டு, ஜனவரி 11 ஆம் தேதி, திருத்தந்தை தனது சொந்த விருப்ப ஆவணமான (Motu Proprio) “கடவுளின் ஆவி” (Spiritus Domini) மூலம் திரு அவைச்சட்ட எண் 230 இல் உள்ள ஒரு வார்த்தையை மட்டும் மாற்றினார். இந்தச் சட்ட எண்ணில் முதலில் இவ்வாறு சொல்லப்பட்டிருந்தது: “ஆயர் பேரவையின் ஆணையால் வரையறுக்கப்பட்டுள்ள வயது மற்றும் தகுதி கொண்டுள்ள ஆண்பால் பொது நிலையினரை, விதிமுறை செய்யப்பட்டுள்ள வழிபாட்டு முறைக்கேற்ப, வாசகர் மற்றும் பீடத்துணைவர் பணிகளில் நிலையான முறையில் அமர்த்தலாம்.” திருத்தந்தை பிரான்சிஸ் இந்தசட்டத்தில் ‘ஆண்பால் பொதுநிலையினர்’ (Lay Men) என்று இருந்ததை பெண்களையும் இணைக்கும் விதமாக ‘பொதுநிலையினர்’ (Lay People) என மாற்றினார்.
இந்த பொதுநிலையினர் என்ற வார்த்தை ஆண், பெண் இருவரையும் குறிக்கும். இதைக் குறித்த ஒரு கடிதத்தில், ஏற்கனவே இப்பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கு “பொது அங்கீகாரமும், நிலைத்தன்மையும்” தருவதே என் விருப்பம் என்று அவர் குறிப்பிடுகின்றார். இந்த மாற்றம் நம் திரு அவையை உலகெங்கும் உள்ள மேய்ப்புபணி எதார்த்தங்களுக்கு ஏற்ப சீரமைக்க வழி செய்கிறது.
திருப்பலியில் வாசகங்கள் படிப்பது வாசகர்களின் (Lector) பிரதான பணி. அதோடு கூட மக்கள் குழுமத்தை பாடல் பாட ஏற்பாடு செய்வது, திரு வருட்சாதனங்களைப் பெற மக்களை தயாரிப்பது, திருப்பலியில் மற்றவர்கள் வாசகம் வாசிக்க உதவி செய்வது ஆகிய பணிகளும் வாசகர் பணிகளில் அடங்கும். பீடத்துணைவர் (Acolyte) திருப்பலியின் போது திருப்பீடத்தில் உதவிசெய்வார். ஆனால் இவர் வெறுமனே பீடப்பணியாளர்களைப் போன்றவர் அல்ல; உதாரணத்திற்கு, பீடத்துணைவர் அப்ப ரச பாத்திரங்களை தூய்மை செய்ய முடியும். ஆனால், இதை பீடப்பணியாளர்கள் செய்ய முடியாது.
நற்கருணை வழங்குதல், தூய நற்கருணையை ஆராதனைக்காக எடுத்து வைத்தல், பீட பணியாளர்களை வழிநடத்துதல் ஆகிய பணிகளையும் பீடத்துணைவர்கள் செய்கிறார்கள். இதோடு கூட, குருக்களுக்கும், திருத்தொண்டர்களுக்கும் மற்ற திருவருட்சாதனங்களை வழங்குவதற்கு உதவி செய்வர். வாசகர் மற்றும் பீடத்துணைவர் ஆகிய இப்பணிகள் திருமுழுக்கில் இருந்து வருகின்றன.
ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுநிலையினர் அனைவருக்கும் வாசகர், பீடத்துணைவர் ஆகிய பணிகளில் பங்கேற்க வாய்ப்பளித்தது திருமுழுக்கில் அவர்கள் பெற்றுக் கொண்ட பொதுக் குருத்துவத்தை வாழ்வாக்க உதவும். மேலும், இப்படி திருவழிபாட்டில் அவர்களுக்கு வழங்கப்படும் இந்த அங்கீகாரம் இன்னும் பல பொதுநிலையினர் திரு அவையின் மீட்புப் பணியில் தங்களையே இணைத்துக்கொள்ள உந்துதலாக அமையும்.
திருமுழுக்குப் பெற்ற அனைத்து திரு அவையின் உறுப்பினர்களின் பங்கேற்பை புதுப்பிக்க தன் அவசியத்தை இரண்டாம் வத்திகான் சங்கம் வலியுறுத்துகிறது. 2020 ஆம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்ட ‘திருத்தூதரக அறிவுரையான’ (Apostolic Exhortation) “அன்பான அமேசானியாவில்” (Beloved Amazonia), திரு அவையின் எல்லா நிலைகளிலும் பெண்களின் பங்கை விரிவாக்க அவர் வலியுறுத்துகிறார். இதையொட்டி இன்னும் ஒரு புதிய முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு சில மாற்றங்களோடு பெண்களுக்கான ஒரு புத்தம் புதிய பணி கத்தோலிக்கத் திரு அவையில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 2021 ஆம் ஆண்டு, முற்றிலும் புதிய வேதியர் பணியை அவர் உருவாக்கியிருக்கின்றார்.
பெண்கள் முன்பும் வாசகர்களாகவும், வேதியர்களாகவும் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், தற்போது இந்த புதிய ஆவணங்களும், திருஅவைச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிற திருத்தங்களும் பெண்களுக்கு ஒரு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை அளித்துள்ளது.
முடிவுரை
கத்தோலிக்கர்களுக்கு திருமுழுக்கின் மாண்பை குறித்த புரிதல் அதிகரிக்க, அதிகரிக்க திரு அவையில் பெண்களின் பங்களிப்பும் வளர்கின்றது. திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் திரு அவையின் ஒரு அங்கம். அதேபோல, திருமுழுக்குப் பெற்ற எல்லாரும் ஆண்களும், பெண்களும் திரு அவை தன்னுடையது என்பதை உணர்ந்து, அதன் வாழ்வுக்காக தனது பங்கைத் தர வேண்டும். திருத்தந்தை 16 ஆம் பத்திநாதர் குறிப்பிடுவது போல, ‘இணை-பொறுப்பு’ (Co-responsibility) என்ற கருத்து மேலெழ நமது மனநிலை மாற்றம் அவசியப்படுகின்றது.
குறிப்பாக, திரு அவையில் பொதுநிலையினரான ஆண்களும் பெண்களும் வெறுமனே கூட்டுப்பணியாளர்கள் (Collaborators) என்ற நிலை கடந்து அவர்கள் திருஅவை இருக்கவும், இயங்கவும் வித்திடுகிற இணை-பொறுப்பாளர்கள் என்ற அடுத்த ஆழமான புரிதலை தமதாக்கிக் கொள்ளவேண்டும்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கூட பொதுநிலையினரான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் கிறிஸ்துவின் பணிகளில் தீவிரமாக தங்களையே ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று உற்சாகப் படுத்துகின்றார். சீடத்துவ மறைப்பணி என்பது ஏதோ குருக்களுக்கும், அருட்சகோதரர்களுக்கும் மற்றும் அருட்சகோதரிகளுக்குமான பணி என்று பொதுநிலையினர் தங்களையே அந்நியப்படுத்திக் கொள்ளாமல் தாங்களாகவே சீடத்துவ மறைப்பணியில் ஈடுபட வேண்டும் (Evangelii Gaudium 120).
நிறைய பெண்கள், குருக்களின் மறைப்பணி பொறுப்புகளை பகிர்ந்துகொள்கிறார்கள், மக்கள், குடும்பங்கள், குழுக்கள் என அனைவரையும் வழிநடத்த உதவுகிறார்கள். மேலும், இறையியலில் புதிய சிந்தனைகளின் வழியாய் தங்களின் பங்களிப்பை அளிக்கின்றார்கள் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் ஒப்புக்கொள்கிற அதே வேளையில் இன்னும் வாய்ப்புகளை பரவலாக்கி திரு அவையில் பெண்களின் இருப்பை இன்னும் அதிகமாக்க வேண்டிய தன் அவசியத்தை அடிக்கோடிட்டு காட்டுகின்றார்.
ஏனென்றால், பெண்களின் நுண்ணறிவு சமூக வாழ்வின் அனைத்துபடி நிலைகளிலும் அவசியப்படுகின்றது. பணித்தளங்கள் மற்றும் சமூக அமைப்பிலும், திருஅவையிலும் முக்கியமான முடிவுகளை எடுக்கிற பல்வேறு தளங்களிலும் பெண்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும் (Evangelii Gaudium 103).
(இக்கட்டுரை ஆழமான, சட்டப்பூர்வமான, திருஅவைச் சார்ந்த, நுணுக்கமான, அறிவியல்பூர்வமான ஆக்கப்பூர்வமான, அணுகுமுறைகளை உள்ளடக்கி, ஒரு கருத்துச்செறிவுமிக்க படைப்பாக கட்டுரை ஆசிரியர் திருஅவைச் சட்ட பேராசிரியர் அருள்முனைவர் மெர்லின் அம்புரோஸ் படைத்துள்ளார். இதனைப் படிக்கும் பொதுநிலையினர், குறிப்பாக பெண்கள், இக்கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு, தத்தம் மறைமாவட்டங்களில், தத்தம் பங்குகளில் உள்ள அருள்நிலையினரை, ஆயர் பெருமக்களை அணுகி, உலக ஆயர்கள் மாமன்றம் கூட்டப்பட்டுள்ள இந்நிலையில் ஒரு சிறிய மாற்றத்திற்கு வித்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். மிகச் சிறப்பான முறையில் இக்கட்டுரையை தெளிந்து தேர்ந்து படைத்த கட்டுரையாசிரியருக்கு என் மனமார்ந்த நன்றி. )