திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே, மரண பயம் உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் உள்ளது. சில தொண்ணூறுகளும் சாவைக் கண்டு பயப்படுகின்றனர். சில இருபதுகளும், கொள்கைக்காகச் சாவைத் தேடிச் செல்கின்றனர். பாவத்தில் வாழ்பவனும், அருள்நிலை இழந்தவனும் இந்தச் சாவைக்கண்டு பயந்து தினமும் செத்துக்கொண்டிருக்கிறான். இன்றைய நாள் உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே, என்னிடம் நம்பிக்கைக் கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்னும் நம்பிக்கை வார்த்தைகளால் வாழ்வு கொடுக்கிறார் இயேசு. கடவுளால் இவ்வுலகத்தில் ஆகாதது ஒன்றுமில்லை என்கிற விசுவாசம், வாழ்வை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள நமக்கு வழிவகுக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையைத் தரவேண்டி தொடர்ந்து இத்திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை
இஸ்ரயேல் மக்கள் இறைவனது கட்டளையை மீறியதன் காரணமாக அடிமைகளாக்கப்பட்டனர். பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு ஒட்டுமொத்த இனமே மற்றொரு நாட்டில் அடிமையாகிக் கிடந்தது. இது சாவுக்கு இணையானது என்பதை இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல் எடுத்துரைக்கின்றார். அடிமைத்தனங்களில் வாழ்வோரின் நிலைச் செத்துப்போன மனிதர்களின் நிலையைவிட மேலானதல்ல. ஆனால் இத்தகைய மக்களுக்கும் வாழ்வதற்கு வழி உண்டு என்ற நம்பிக்கையை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
இரண்டாம் வாசக முன்னுரை
அடிமைத்தனத்தின் ஊற்றாக இருப்பதுதான் பாவ வாழ்வு. ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோரின் கடவுளுக்கு உகந்தவர்களாக இருக்க முடியாது என்றும், பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாகும் என்றும் குறிப்பிடுகிறார். இதன் உச்சக்கட்டமே தான் பாவத்திற்குக் கிடைக்கும் கூலிச் சாவு. இத்தகைய பாவ அடிமைத்தனத்திலிருந்து, அதனால் வரும் சாவிலிருந்து நமக்கு விடுதலைக் கொடுக்கவே இயேசு வந்தார் என்ற செய்தியைத் திருத்தூதர் பவுலடியார் அழகுடன் விளக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் உள்ளத்தில் பதிவு செய்வோம்.
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டு
1. என்றென்றுமுள்ள இறைவா! திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகளுக்காக மன்றாடுகின்றோம். உள்ளமும் செயலும் நன்மையைக் கனியாக தந்தால் முழுமையாக மனிதம் மலர்கிறது என்பதை அவர்களின் வாழ்வின் மூலம் நாங்கள் அறிந்து எங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ள வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின் இறைவா! இன்றைய நற்செய்தியில், நீர் எந்தளவுக்கு எம்மீது மனமிரங்குகின்றவராக இருக்கிறீர் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல எம் வாழ்விலும் உமது அன்பையும் இரக்கத்தையும் முழுமையாக உணர்ந்தவர்களாக, உண்மையுள்ளவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். என்னிடம் நம்பிக்கைக் கொள்பவர் இறப்பினும் வாழ்வார் என்றுரைத்த இறைவா, இறப்பையும் இழப்பையும் தாண்டி புதுவாழ்வு பெறுவதுதான் நீர் கற்றுத்தந்த வாழ்க்கைத் தத்துவம் என்பதில் நம்பிக்கைக் கொள்ள தேவையான வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. பொறுமையின் நாயகனே இறைவா! கடவுளின் வல்லமை எம்மில் செயல்பட நாங்கள் பொறுமையோடு காத்திருக்க வேண்டிய உள்ளத்தைத் தந்தருளும். உமது வல்லமை வெளிப்பட எமது வாழ்வு ஓர் ஊன்றுகோலாக இருக்கும் என்றால் அதற்காகக் காத்திருக்கும் மன உறுதியைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மருத்துவர்களுக்கு மேலான மருத்துவரே எம் இறைவா! மாந்தர்களின் இந்தக் கொடிய நோய்களிலும் தன்னலம் கருதாமல் இராப்பகலாக உழைக்கும் அன்பு மருத்துவர்கள், அவரது உதவியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் காவல் துறையினர் அனைவரையும் நலமுடன் காத்து, அவர்தம் பணி சிறக்க அருள்மாரிப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.